டெல்லி ”இந்தியன் எக்ஸ்ப்பிரஸ்” சிறப்புக் கட்டுரை “தாய் வீட்டில்” வி.பி.சிங் சிலை
வி.பி.சிங் சிலை சென்னையில் தமிழக அரசு நிறுவுவதை விவரித்து அருண் ஜனார்த்தன் டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (ஏப்.24) சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம்.
வி.பி.சிங் அமுல்படுத்திய மண்டல் பரிந்துரைக்கு ஆதரவு தந்த கட்சிகளில் ஒன்று திராவிட முன்னேற்றக் கழகம். வி.பி.சிங் அமைச்சரவையில் திமுக இடம்பெற்ற போதும் சரி வி.பி. சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போதும் சரி, அவருடைய மண்டல் பரிந்துரைகளை முழுமையாக ஆதரித்து நின்ற கட்சி திமுக.
மண்டல் தூதுவர் என்ற புகழ்பெற்ற வி.பி.சிங் வரலாறு இந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்த போது வடமாநிலங்களிலிருந்து வெகு தொலை வில் இருக்கும் தமிழ்நாடு அவருக்கு முழு உருவச்சிலை அமைக்க முடிவெடுத்திருக் கிறது. தமிழ்நாட்டு மக்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்த அவருக்கு சிலை அமைக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித் துள்ளார். இதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அவர் வீழ்த்தி இருக்கிறார்.
சமூக நீதியை மையமாக வைத்து தேசிய அளவில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டிருக்கிறார். அந்த முயற்சிக்கு வலிமை சேர்க்கும் இந்த அறிவிப்பு தேசிய அளவில் மு.க. ஸ்டாலின் ஆளுமையை மேலும் உயர்த்திருக்கிறது. அதே நேரத்தில் திமுகவுக்கும் வி.பி.சிங்குக்கும் உள்ள நெருக்கம் குறித்த செய்திகள் இப்போது வெளிவர தொடங்கித் தொடங்கியுள்ளன.
ஸ்டாலின் தனது உரையில் “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27ரூ இடஒதுக்கீடு வழங்கி மண்டல் ஆணையை அமல்படுத்தியவர் வி.பி.சிங். காவிரி பிரச்சனையில் தமிழர்களின் பக்கம் நின்று காவிரி தீர்ப்பாயம் ஒன்றையும் உருவாக்கித் தந்தார்” என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
1980களில் இருந்து கிடப்பில் போடப்பட்ட மண்டல் அறிக்கையை வி.பி.சிங் அமல்படுத்தியதின் வழியாக அவரது அமைச்சரவைக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த பாஜகவின் எதிர்ப்புகளையும் அவர் சந்திக்க நேர்ந்தது. அது குறித்து கவலைப்படாமல் மண்டல் பரிந்துரைகளை வி.பி.சிங் அமல் படுத்தினார். இதற்காக பல்வேறு தரப்பிட மிருந்தும் குறிப்பாக உயர்சாதியினரிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. அந்த காலத்தில் வி.பி.சிங்குக்கு உறுதியான ஆதரவுக் கரம் நீட்டியவர் திமுக தலைவர் கலைஞர்.
ஜனதா தள அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இடம் பெற்றிருந்தார். திமுகவின் முகமாக அவர் டெல்லியில் செயல்பட்டார். 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்ட போது பாஜக ராமர் கோயில் கட்டும் ரத யாத்திரையைத் தொடங்கியது. அந்த கால கட்டத்திலும் வி.பி.சிங்கிற்கு உறுதியான ஆதரவை தந்தது திமுக.
சமூகநீதி இயக்கம் தமிழகத்தில் பெரும் வீச்சுடன் பரவி இருந்தது. பெரியார் அதற்கு தலைமைத் தாங்கினார், திராவிட கட்சிகள் சமூகநீதிக்கு ஆதரவாக பிற்படுத் தப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுத்து வந்தனர். இதன் காரணமாக மண்டல் பரிந்துரைக்கு உணர்வுப்பூர்வாக ஆதரவு தந்த மாநிலமாக திகழ்ந்தது தமிழ்நாடு.
மண்டல் ஆணையத்தில் இடம்பெற்ற உறுப்பினர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்த சுப்ரமணி யமும் ஒருவராவார். தமிழ்நாட்டில் தான் கிடப்பில் போடப்பட்ட மண்டல் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற இயக்கம் தொடர்ச்சியாக நடைப்பெற்றது. இந்தியா முழுவதும் சமூக நீதிக்கான தலைவர்களை இந்த இயக்கம் கவர்ந்திழுத்தது.
வி.பி.சிங் ஆட்சி வீழ்ந்ததற்குப் பிறகு திமுக வி.பி.சிங்கை அழைத்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மண்டல் பரிந்துரைக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களை நடத்தியது. அனைத்துக் கூட்டங்களிலும் வி.பி.சிங் பங்கேற்று பேசினார். அதை முரசொலி மாறன் தமிழில் மொழிபெயர்த்தார்.
இந்த நிகழ்ச்சிகள் தமிழ் ஏடுகள் மற்றும் ஊடகங்களின் மிகப் பெரிய அளவில் வெளியிடப்பட்டன. அப்படி வி.பி.சிங் பயணத்தில் பங்கேற்று வி.பி.சிங் ஆற்றிய உரைகளை தொகுத்து விடுதலை நாளேட்டில் முழுமையாக வெளியிட் டவர்களில் ஒருவர் விடுதலை இராசேந்திரன். அவர் அப்போது திராவிடர் கழகத்தில் இருந்தார்.
விடுதலை இராசேந்திரன் 2022ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வி.பி.சிங்கிற்கு சிலை ஒன்றை தமிழ்நாட்டில் வைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தியாளரிடம் பேசும்போது அவர், வி.பி.சிங் பங்கேற்ற அந்த கூட்டங்களைப் பற்றி விரிவாக விளக்கினார்.
“இந்தியாவின் தலைநகரமாக டெல்லி இருக்கலாம் ஆனால் சமூக நீதியின் தலைநகரம் தமிழ்நாடு” என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வி.பி.சிங் பேசியதாக விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.
இட ஒதுக்கீட்டை ஏன் கொண்டு வந்தோம் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் எளிமையாக விளக்கிப் பேசி இட ஒதுக்கீடை தொடர்ச்சியாக அமல்படுத்துகிற தென்னக மாநிலங்கள் வட மாநிலங்களைவிட சிறப்பாக செயல் படுவதை அவர் விளக்கினார். அதிகாரங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே 27ரூ இட ஒதுக்கீட்டை நான் கொண்டு வந்ததன் நோக்கம் என்று பேசிய வி.பி.சிங், அதற்காக தன் ஆட்சியை இழந்ததை பெருமையாக நினைவுகூர்ந்தார். அந்த நான்கு நாட்கள் நடந்த பேரணிகளிலும், கூட்டங்களிலும் கலைஞர் வி.பி.சிங் அவர்களுடன் சாலை மார்க்கமாக பயணம் செய்தார். பல்வேறு உள்ளூர் அரசியல் தலைவர்கள் அந்த கூட்டங் களில் பேசினர். திருநெல்வேலியில் வைகோ பேசினார்.
அப்போது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உடல்நலக் குறைவால் சென்னையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ மனைக்கு நேரில் சென்று அவருடைய உடல்நலத்தை விசாரித்து விட்டுத் தான் அவர் பயணத்தைத் தொடங்கினார்
என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிடுகிறார்.
அந்த கூட்டங்களில் பெருமளவு மக்கள் திரண்டார்கள். வெற்றிகரமான கூட்டங் களாக இருந்தன. மதுரையில் ஆயிரக் கணக்கானோர் வி.பி. சிங் வருகைக்காக நள்ளிரவு வரை காத்திருந்தனர். விருதுநகரில் நள்ளிரவு 2 மணிக்கு நடந்த மாபெரும் கூட்டத்தில் வி.பி.சிங் பேசினார் என்றும் இராசேந்திரன் குறிப்பிட்டார்.
வி.பி.சிங் அந்தக் கூட்டங்களில் சொன்ன ஒரு கதையையும் இராசேந்திரன் சுட்டிக் காட்டினார்.
“ஒரு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடந்தது, குடும்பத்தில் இருந்த பசு மாட்டையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப் பட்டது. பசு மாட்டின் தலைப்பகுதி தம்பிக்கும், பின் பகுதி அண்ணனுக்கும் பிரித்துத் தரப்பட்டது. தலைப் பகுதி தரப்பட்ட தம்பி மாட்டிற்கு தீவனம் தருவதையே வேலையாகக் கொண் டிருந்தார், பின் பகுதியைப் பெற்ற அண்ணன் ஒவ்வொரு நாளும் பால் கறந்து பயன்படுத்திக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் சலித்துப் போன தம்பி நான் தீவனம் போடுகிறேன் நீ பாலை கறந்து குடித்துக் கொண்டிருக்கிறாய் என்ன நியாயம் என்று சொல்லி மாட்டின் கொம்பை பிடித்து ஆட்டினார். மாடு பால் கறந்து கொண்டிருந்த அண்ணனை எட்டி உதைக்க அண்ணன் கீழே விழுந்தார். உடனே அவர் என்ன அநீதி? என்ன அநீதி? என்று கூக்குரலிட்டார். அதே போல் தான் நான் 27ரூ இட ஒதுக்கீட்டை கொண்டுவந்த போது அநீதி என்று இதுவரை அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தவர்கள் கூக்குரலிட்டு வருகிறார்கள்” என்று இந்த கதையை வி.பி.சிங் கூட்டங்களில் பேசினார்.
பெரியார் முழக்கம் 27042023 இதழ்