சிறப்பு வினா விடை
- தி.மு.க. பொதுக் கூட்ட மேடையில் பேசுவதை எல்லாம் ஆளுநர் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? – அண்ணாமலை
நியாயம் தான். ஆளுநர் அவர் பேசும் பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைத் தானே சட்டசபையில் பேச முடியும். அப்படித்தான் அவரே எழுதிக் கொண்ட அரசியல் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்திருக்கிறார் போல!
- ‘தேசிய கீதம்’ பாடலையும் புறக்கணித்து ஆளுநர் வெளியேறியது தேசத்துக்கு அவமதிப்பு. – அமைச்சர் தங்கம் தென்னரசு
அதெல்லாம் இல்லை. ஆளுநர் ஏற்றுக்கொண்ட தேசிய கீதம் ‘வந்தே மாதரம்’. ‘ஜனகணமன’ அவருக்குப் பிடிக்காது.
- ஆளுநரை வைத்துக் கொண்டே முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது தவறு.
– அண்ணாமலை
முதல்வரை வைத்துக் கொண்டே அரசு தயாரித்த உரையின் பகுதிகளை நீக்கி விட்டுப் பேசியது – ஆளுநரின் ‘பெருந்தன்மை’யோ?
- பெரியார், அண்ணா, காமராசர் பெயரை எல்லாம் நீக்கி விட்டு ஆளுநர் உரையை வாசித்தது எல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும். – எடப்பாடி
அதுவும் சரி தான். ஆளுநர் உரையை படிக்காமலே ‘உப்பு சப்பில்லை’ என்று கூறுவதற்கு மட்டும் தான், எங்களுக்குத் தெரியும்.
- நாங்கள் ஆளுநர் உரையைக் கேட்கத்தான் வந்தோம்; முதலமைச்சர் உரையைக் கேட்க அல்ல. – எடப்பாடி
அதற்கு ஆளுநர் மாளிக்கைக்கோ, ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்கோ போயிருக்கலாம். சட்டசபைக்கு வந்திருக்க வேண்டாம்.
- ஆளுநருக்குத் தெரியாமலே அச்சடித்த உரையை அவர் எப்படி படிப்பார்? – வானதி
என்னது… ஆளுநருக்குத் தெரியாதா… அவர் படித்து ஒப்புதல் தந்ததுகூட வானதிக்கு தெரியாதா? பொது மக்களிடம் போய் இப்படி எல்லாம் உளறாதீங்க…
- சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக்கூட படிக்க மறுத்தார் ஆளுநர்.
– தங்கம் தென்னரசு
தமிழக அரசு கூறும்போது அம்பேத்கர்கூட ஆளுநருக்கு ‘அலர்ஜி’ தான்!
- சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளி நடப்பு. – செய்தி
அடுத்து சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்துவார் போல!
- ஆளுநருக்கு எடப்பாடி ஆதரவு. – செய்தி
அடப்‘பாவிகளே’ ஆளுநர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டிய ஜெயலலிதாவையே இப்படி அவமதிக்கிறீர்களே! இது அடுக்குமா?
- தொலைக்காட்சி விவாதங்களை சில ஆண்டுகளாகப் புறக்கணித்த பா.ஜ.க.வினர் ஆளுநருக்காக மீண்டும் பேச வந்து விட்டனர். – செய்தி
பாவம் ரவி! அவருக்கு மேலும் குழி பறிக்க இந்த பஜனைக் குழுவே போதும்!
பெரியார் முழக்கம் 12012023 இதழ்