இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜ இராஜ சோழன் பதவிக்கு வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்கள் தான் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்களமாக இருந்தாலும் சோழ மன்னர்கள் அனைவருமே பார்ப்பனர்களின் அடிமை ஆட்சியைத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதே  உண்மையான வரலாறு.

“தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி”, “தமிழர்களின் பொற்காலம்” என்று வர்ணிக்கப்படுற இராஜ ராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும் பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது!

பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத் தலைவர்களாகவும், அரியணை யேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்!

களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலை விரித்தாடியது இராஜராஜன் காலத்தில். அருண்மொழித் தேவன் என்ற தமிழ்ப் பெயரை இராஜராஜசோழன் என்று வடமொழிக்கு மாற்றிக் கொண்டவன்!

அடிமைகள்

  • சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான அடிமைகள்!. பொருளைப் போன்றே இந்த அடிமைகளும் விற்பனை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். விற்கப்படும் அடிமைகளுக்கு மாட்டைப்போல் சூட்டுக் கோல் அடையாளங்கள் இடப்பட்டிருக் கிறது. பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் “ஆள்விலை பிரமான இசைவுச்சீட்டு” என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல்லா யிரம் அடிமைகளை கொடுமைப்படுத்தி அவர்கள் உழைப்பில் தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி புண்ணியம்(?) தேடிக் கொண்டான் இராஜராஜன்! .
  • கோவிலில் பணிபுரிந்தவர்களின் நிலங்கள் கூட பறிமுதல் செய்யப்பட்டு கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. தங்கள் நிலங்களை பறிகொடுத்தவர்கள் அரசை எதிர்த்து தீக்குளித்த செய்தியை புஞ்சை செப்பேடுகள் கூறுகின்றன.

தேவரடியார்கள்!

  • கோவிலில் பணிபுரிவதற்கென்று பெண் களை நியமனம் செய்தான் இராஜராஜன். தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை நியமித்திருந்தான். அவர்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமை முற்றிலு மாக மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேவரடி யார்கள் என்று அழைக்கப்பட்டனர். கோவில் தளத்தைச் சுற்றி தேவரடியார் களுக்கென்று தனிக்குடியிருப்பு பகுதியை ஏற்படுத்தி அவை தளிச்சேரி என பெயரிடப்பட்டது.
  • உலகமகா தேவியார், சோழ மாதேவியார், அபிமான வல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவி யார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொடங்கி யார், கூந்தன் விரானியார், இளங்கோன் பிச்சியார் என 15க்கும் மேற்பட்ட மனைவி மார்களை வைத்திருந்தவன் இராஜ ராஜன்!
  • சோழர் காலத்தில் தென்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரம் எனும் ஊர் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப் பட்டு அங்கு வடமொழிக் கென்றே தனிக் கல்லூரி உருவாக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து செலவுத்தொகையும் அரசால் மான்யமாக வழங்கப்பட்டது. அங்கு பயிற்று வித்த ஆசிரியர்கள், பயின்ற மாணவர்கள் அனைவரும் பார்ப்பனர் களே! இக்கல்லூரிக்கென 300 ஏக்கர் நிலம் தானமாக அரசனால் வழங்கப்பட்டது.

இதே போன்று வடாற்காடு மாவட்டம் கப்பலூர் கிராமத்திலும், செங்கற்பட்டு மாவட்டம் ஆனூரிலும் வடமொழி பாட சாலைகள் நிறுவப்பட்டன. புராணங்கள், இதிகாசங்கள், சோம சித்தாந்தம், ராமானுஜ பாடியம், மீமாம்ச வியாக்ரணம் போன்ற வடமொழி இலக்கி யங்களே அங்கு பயிற்றுவிக்கப்பட்டன.

தமிழ்த் தேசிய சூரர்களால் தமிழ் தேசியத் தின் பிதாமகன் என்று சித்தரிக்கப்படும் இராசராசன் காலத்தில் தமிழ் மொழிக் கென எந்த ஒரு தனித்த பாட சாலையும் நிறுவப்பட்டதாக தெரிய வில்லை!

வலங்கை-இடங்கை!

  • வலங்கை இடங்கை குல வேறுபாடு இராஜராஜன் காலத்தில் ஓங்கியிருந்தது. இந்த இரண்டு பிரிவு களிலும் இடம் பெறாத தங்களை மேன்மக்களாக கருதி கொண்டிருந்த பார்ப்பனக்கூட்டம் வலங்கைப் பிரிவினரை ஏவிவிட்டு இடங்கைப் பிரிவினருக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் விளைவித்தது. இந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல், இடங்கை சாதியினர் ஒன்றுகூடி கண்டனத் தீர்மானம் இயற்றியதோடு,அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய நிகழ்ச்சிகள் நித்த வினோத வளநாட்டுக் காந்தார நாட்டைச்சேர்ந்த இராச மகேந்திர சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் (நித்த வினோத வளநாடு என்பது தற்போதைய பாபநாசம் நன்னிலம் பகுதிகள்) நடை பெற்றுள்ளது.
  • பார்ப்பனர்களை எதிர்த்து கலகம் செய்பவர்களுக்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் விதிக்கப்பட்டு கட்டத் தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

குடவோலை முறை!

  • கிராமங்களில் குடவோலைமுறை இருந்தது. கிராமங்கள் பல குடும்புகளாக பிரிக்கப்பட்டு, குடும்பின் சார்பில் ஒரு ஆண் மகன் பிரதிநிதியாக நியமிக்கப் படுவான். அவனுக்கு குறைந்த பட்சம் 1/4 வேலி நிலம் சொந்தமாக இருக்கவேண்டும். பார்ப்பனர்களுக்கோ 1/8 வேலி நிலம் இருந்தாலே போதும் என சலுகை காட்டப் பட்டது. அப்படி குடும்பின் சார்பில் நியமிக்கப்படும் பெயர்கள் தனித்தனியாக ஓலைகளில் எழுதி ஒரு குடத்தில் இட்டு குலுக்கல் முறையில் சபையின் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சலுகையாலும் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் அவ்வப்போது தானமாக வழங்கப்பட்டு வந்ததாலும், கிராமசபை அங்கத்தினராக பெரும்பாலும் பார்ப் பனர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர்.
  • வேளாண் மக்களும், பார்ப்பனர்களும் அதிகம் வசித்த கிராமங்களில் இரண்டு சபைகள் தனித்தனியாக இயங்கி வந்தன. பார்ப்பனர்களின் விருப்பப்படி அத்தகைய கிராமங்களை ஒரே சபையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டான் இராஜராஜன். வேளாண் மக்கள் தங்கள் நிலங்களை பார்ப்பனர்களுக்கு விற்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டு அதை நிறைவேற்றும் பொருட்டு அதிகாரிகளையும் நியமித் தான்.
  • பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும், நிலபுலங்களையும் தானமாக வாரி வழங்கினான் இராஜ ராஜன்! பார்ப்பனர்களுக் கென்றே கிராமங்கள் பிரத்யேகமாக தானமாக வழங்கப்பட்டு, அகரம், அக்கிரஹாரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என்று அழைக்கப் பட்டன. அப்படி தானமாக வழங்கப்பட்ட பகுதியில் வசித்த பார்ப்பனர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
  • கோவில்களில் பறிமாறப்படும் உணவுப் பந்திகளில் பார்ப்பனர்களுக்கு முதலிடம் தரப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானத்தின் தெற்குப்பக்க சுவரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் “காலம் 1014 ஸ்ரீஇராஜராஜன் – தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு சோழ மண்டலத்திலும், பாண்டிய மண்டலத் திலும், தொண்டை நாடான ஜெயங் கொண்ட சோழ மண்டலத்திலுமுள்ள ‘பிரம்ம தேயங்களை’ சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில் பண்டாரம் (பூசை) செய்வதற்கு பிராமணர்களையும், திருபரிசாரகம் (சமையல்) செய்வதற்கு மாணிகளையும் (திருமணம் ஆகாதவர்கள்) கணக்கு எழுத கரணர் களையும், சந்திர ஆரியர்கள் உள்ளவரை நியமிக்க அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட் டுள்ளது. பார்ப்பனர்கள் வாழும் பிரம்மதேயத்தில் வசிக்கக்கூடிய பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளுக்கு பூசை செய்ய கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
  • கிராமசபைகளிலும் அரசின் முடிவு களிலும் கூட பார்ப்பனர்களின் அதிகாரம் கொடிகட்டியிருக்கிறது. அவர்களின் ஆலோசனைப்படியே தீர்ப்புகள் வழங்கப் பட்டிருக்கிறது.

சூழ்ச்சியில் ஆட்சி!

பார்ப்பனர்களுக்கு பொற்கால வாழ் வளித்த ‘சூத்திர’ இராஜராஜனுக்கு அவன் கட்டிய கோவிலுக்குள் சிலை எழுப்ப அனுமதி மறுத்தது பார்ப்பனீயம்! ஒன்றிய ஆட்சி கட்டுப்பாட்டிலுள்ள தொல்பொருள் துறை அனுமதிக்காததால் முதல்வராக இருந்த கலைஞர், கோயிலுக்கு வெளியே இராஜ ராஜன் சிலையை நிறுவினார்.

இன்றளவும் பார்ப்பன அடிவருடிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகிகளுக்கு தஞ்சை பெரியகோவில் வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருக்கும் இராஜராஜசோழன் சிலை ஒரு பாடமாக அமையட்டும்!

தஞ்சை பெரியகோயில் வீதியில் வீரப் பரம்பரை!

– கி. தளபதிராஜ் – முகநூலில்

பெரியார் முழக்கம் 13102022 இதழ்

 

 

You may also like...