கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்
ஆர்ப்பாட்டத்தில்…..
ஆ. ராசாவுக்கு பெண்கள் துணை நிற்போம்!
குற்றம் என்ன? குற்றம் என்ன?
ஆ. ராசா செய்த குற்றம் என்ன?
ஆதரிப்போம்; ஆதரிப்போம்;
ஆ. ராசாவின் கருத்துகளை ஆதரிப்போம்!
துணை நிற்போம்; துணை நிற்போம்;
ஆ. ராசாவுக்கு துணை நிற்போம்!
– என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
“இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் இறுதி உரை நிகழ்த்திய தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை முன்பு 26.09.2022 அன்று மாலை 3.30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தினர். பேராசிரியர் சரசுவதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ‘உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டு சாகப் போகிறேனே’ என்று பெரியார் தனது இறுதி உரையில் சமூகக் கவலையோடு பேசிய இடத்தில் ‘சூத்திரர்களாக்கும்’ மனு தர்ம நூலை சுக்குநூறாகக் கிழித்தெறிந்து பெரியாரியப் பெண்கள் ஆர்ப்பரித்தனர். வடசென்னை, தென்சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்று உணர்ச்சி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியவுடன் கடும் மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் கழகப் பெண்கள் தோழர்கள் மனு சாஸ்திரத்துக்கு எதிராக முழக்கமிட்ட காட்சி, உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைவர் வேழவேந்தன், மயிலைப் பகுதி பொறுப்பாளர் சுகுமார், வடசென்னை மாவட்டத்தலைவர் ஏசுகுமார் மற்றும் தட்சிணாமூர்த்தி, தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் தமிழ்நாடு மாணவர் கழகம், ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத் தோழர்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் பெண் தோழரும், பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய சிந்தனையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற பேராசிரியர் சரசுவதி, மனுசாஸ்திரம் பெண்களை இழிவுபடுத்தியதை விளக்கிப் பேசினார். கழக செயல்பாட்டாளர் இரண்யா மனுசாஸ்திரத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். கொட்டும் மழையிலும் பொது மக்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்று ஆர்ப்பாட்டத்தையும் முழக்கங்களையும் கேட்டனர். இந்துப் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சுலோகங்களடங்கிய துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன.
பெரியார் முழக்கம் 29092022 இதழ்