தேசியக் கொடியிலும் தீண்டாமையா? தமிழக அரசு கண்டிப்பு

தமிழ்நாட்டு கிராமங்களில் இன்னும் சாதிய ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சட்டங்கள் அங்கு நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் தலித் ஊராட்சிகளில் இன்னமும் சாதிய பாகுபாடுகள் காணப்பட்டு கொண்டே இருக்கின்றன, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு நல்ல வேலையை செய்து இருக்கிறது. 386 ஊராட்சிகளில் 26 கேள்விகளுடன் 400 பயிற்சி பெற்ற ஊழியர்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலித் ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை என்று கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, ஊராட்சித் தலைவர்களுக்கு 42 வகையான தீண்டாமைகள் எப்படி திணிக்கப்படுகிறது, என்பதும் கண்டறிந்து அரசிடம் அறிக்கை ஒன்றை தந்தது.

உடனடியாக தமிழக அரசினுடைய தலைமைச் செயலாளர் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும், என்று வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும்.

இந்த சாதி பிரச்சினைகளுக்கு கட்சி வண்ணம் பூச முடியாது அனைத்துக் கட்சிகளிலும் சாதி ஆதிக்க வெறியர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தான் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே சாதி ஆதிக்கம் கிராமங்களில் ஒழிகின்ற வரை உண்மையான சுதந்திரம் என்பது இந்த நாட்டு மக்களுக்கு ஒருபோதும் கிடைக்கப்போவது இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேசியக்கொடி ஏற்றுவதற்கு அனுமதி இல்லாமல் ஒரு சுதந்திர தினம் இந்த நாட்டில் கடைபிடிக்கப் படுகிறது என்று சொன்னால் அதைவிட அவமானம் வேறு என்ன இருக்க முடியும்?

 

பெரியார் முழக்கம் 18082022 இதழ்

You may also like...