குரூப்-1 தேர்வில் பெண்கள் தேர்வு 86.3 சதவீதம்
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் சந்திரசேகர். மக்கள் தொகையில் அவர் நிபுணத்துவம் பெற்ற அறிஞர். அவர் ஒருமுறை பெரியாரை நேரில் பேட்டி கண்டார். அப்போது பெரியார் அனைத்து வேலைவாய்ப்புகளும் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்துவிட வேண்டுமென்று கூறினார். சந்திரசேகர் ஒரு கேள்வியை திருப்பி கேட்டார், அப்படியானால் ஆண்கள் அதை எதிர்க்க மாட்டார்களா ? இதற்கு பெரியார் தந்த பதில், “எப்படி எதிர்ப்பார்கள்? அவர்கள் வீட்டு மனைவிகளுக்கும் அவர்கள் வீட்டு சகோதரிகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கின்ற போது ஆண்கள் எப்படி எதிர்ப்பார்கள்” என்று பெரியார் கேட்டார். இது ஒரு ஒரிஜினலான சிந்தனை என்று சந்திரசேகர் பெரியாரைப் பாராட்டினார். இது ஒரு
நிகழ்வு.
1989ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு வேலைவாய்ப்புகளில் 30ரூ பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் 50ரூ கேட்டார் கலைஞர் 30ரூ பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி சட்டத்தை கொண்டு வந்தார். இப்போது தமிழ்நாடு தேர்வாணையம் குரூப்-1 பதவிகளுக்கான தேர்வை நடத்தி முடித்துள்ளது. இந்த தேர்வில் பங்கேற்றவர்கள் 2.5 லட்சம் பேர் இதில் 3800 பேர் தேர்ச்சி பெற்றார்கள். தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அந்த முதன்மைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் 137 பேர் அந்த 137 பேருக்கும் ஆணையம் நேர்முகத் தேர்வை நடத்தியது. மொத்தம் உள்ள துணை கலெக்டர்கள் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 66 பதவிகளுக்கு தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்று சொன்னால்,
66 பதவிகளில் 57 பேர் பெண்களாக தேர்வு செய்யப்பட் டுள்ளனர். அதாவது 86.3ரூ பேர் பெண்கள். பெரியார் சொன்ன 50 சதவீதத்தையும் தாண்டி பெண்கள் இன்றைக்கு வெற்றிக் கொடியை பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான கலைவாணி என்பவர் இதில் தேர்ச்சி பெற்றவர். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர். புதுக்கோட்டை மாவட்டம் செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர் அரசு பள்ளியில் அரசு கல்லூரியில் அதுவும் தமிழ் வழியில் படித்து எந்தவிதமான பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் முதல் முறையாக தேர்வு எழுதி டிஎஸ்பி ஆக அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். பெற்றோர்கள் விவசாய கூலிகள், டீக்கடை ஒன்றை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் புரட்சி ஒன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. இது தொடர வேண்டும் வெற்றி பெற்ற பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
பெரியார் முழக்கம் 18082022 இதழ்