விடியல் எப்போது? – தமிழேந்தி
கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு?
கொஞ்சம்நீ எண்ணடா தோழா! – இந்த
அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்
அல்லல்கள் தீருமா தோழா!
வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்
வஞ்சகம் கொஞ்சமோ தோழா! – நாளும்
தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை
சொரணையே இல்லையே தோழா!
தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா
தேர்தலில் கூட்டணி தோழா! – விலை
பேசியே பெற்ற அன்னையை விற்றும்
பிழைப்பது பிழைப்போ தோழா!
அம்மவோ… எத்தனை உயிர்க்கொலை அங்கே!
அழுகுரல் தொடருதே தோழா! – சே… சே…
பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா?
பச்சை நரித்தனம் தோழா!
ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்
இங்கென்ன நிலையடா தோழா! – நாளும்
வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி
வேட்டைக்குத் தீர்வென்ன தோழா!
துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்
சொந்தக்கை வேண்டுமென் தோழா! – முற்றி
வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்
விடியலைக் காட்டுமென் தோழா!
பெரியார் முழக்கம் ஜனவரி 2009 இதழ்