இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் மோடியின் ‘இந்துத்துவ’ இந்தியா

பக்ரீத்துக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் மதவேறுபாடின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். இஸ்லாமியர் என்றாலே அவர்களை ‘தேச விரோதி’களாகப் பார்க்கும் வெறுப்பை வளர்ப்பதே ஒன்றிய – மாநில  பா.ஜ.க. ஆட்சிகளின் முதன்மை இலட்சியமாக இருக்கிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லீம் ஒருவரைக்கூட பா.ஜ.க உறுப்பினராக்கவில்லை. அண்மையில் மாநிலங்களவையில் பதவிகள் முடிந்த நிலையில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலையில் பா.ஜ.க. ஒரு இஸ்லாமியரைக்கூட நியமன உறுப்பினராக்கத் தயாராக இல்லை.

இந்தியாவில் முஸ்லீம்கள்  மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர். ஆனால் மத்திய மாநில அரசுப் பணிகளில் பணியாற்றுவோர் 4.9 சதவீதம் பேர் மட்டுமே.

துணை இராணுவப் பிரிவுகளில் 4.6 சதவீதம்; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளில் 3.2 சதவீதம்; வெளிநாட்டுத் துறை, இந்தியன் போலீஸ் சர்வீஸ் போன்ற துறைகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லீம்கள் நாடாளுமன்றத்தில் 74 பேர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது இடம் பெற்றிருப்பது 27 பேர் மட்டுமே. 28 மாநிலங்களில் ஒருவர்கூட முதலமைச்சராக இல்லை. 18 மாநிலங்களில் ஒரு முஸ்லீம் அமைச்சர்கூட இல்லை. 10 மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லீம் அமைச்சர் மட்டுமே இருக்கிறார்.

2014-2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லை. 1998ஆம் ஆண்டிலிருந்து குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ, ஒரு முஸ்லீம் வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை. இத்தனைக்கும் அம்மாநிலத்தில் 9 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். (ஆதாரம்: ஆக்கர்பட்டேல் எழுதிய ‘நமது இந்து ராஷ்டிரம்’ நூல்)

பெரியார் முழக்கம் 14072022 இதழ்

 

 

 

You may also like...