சனாதனவாதிகள் அப்படி பெரியாரிஸ்ட்டுகள் இப்படி

“மதம் மாறுவது தேச விரோதம், ஆனால், வாக்காளர்களுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறுவது மட்டும் தேச பக்தியா?” என்று ஒரு பா.ஜ.க. ‘ஜீ’யிடம் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை.

“‘சனாதன தர்மம்’ என்கிறீர்கள், அதற்கு என்ன அர்த்தம்” என்று கேட்டேன்; “என்றும் மாறாதது, நிலையானது” என்றார். “அப்படி யானால் ஆட்சிகள் மாறுவதே சனாதனத்துக்கு எதிரானதா” என்று கேட்டேன்; “இது என்ன விதண்டாவாதம்?” என்றார்.

“சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்க்கலாம்; அதற்கு எம்.எல்.ஏ.க்களை விலை பேசலாம்; சொகுசு ஓட்டல்களில் அடைத்து வைக்கலாம்; இதுவே பாரத பண்பு என்று உங்களது வேதமும் முனிவர் களும் ரிஷிகளும், எந்த புனித நூலிலாவது பறை சாற்றியிருக்கிறார்களா?” என்று கேட்டேன்.

“இதுக்குப் போய் அவுங்களையெல்லாம் இழுக்காதீங்கன்னு” கொஞ்சம் ஆவேசமாகவே கேட்டார்.

“ரிஷிகளும் முனிவர்களும் காட்டிய ஆன்மீகப் பாதையில்  தான் உங்க பா.ஜ.க. நடைபோடு கிறதா” என்று  கேட்டேன்; கோபம் கொப் பளித்தது; “ஆமாம். அதில் என்ன சந்தேகம்” என்றார்.

“அப்படின்னா இதற்கு பதில் சொல்லுங்க.”

“மகாராஷ்டிர கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கடத்தி, உங்க கட்சி தங்க வைத்துள்ள அசாம் சொகுசு ஓட்டலின் ஒரு நாள் அறை வாடகை என்ன தெரியுமா? ரூ.56 இலட்சம்; மசாஜ் கிளப், நீச்சல் குளம் உள்ளிட்ட அத்தனை சொகுசு வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். ஸ்ரீராம பகவான் வனவாசம் போனார். அவர்களின் சீடர்கள் 5 நட்சத்திர ரிசார்ட்டுகளுக்குப் போகலாமா? இதுதான் ராம பக்தியா?” என்று கேட்டேன்.

பதில் கூற முடியாமல், ‘அபத்தம்; அபத்தம்’ என்று கத்தினார். ‘ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்’ என்று மூச்சுப் பிடிக்க முழங்கிக் கொண்டே நடையைக் கட்டினார்.

ஆமாம்! இப்போது எல்லாம் ‘ரிசார்ட் அரசியல்’ என்ற கலாச்சாரம் வந்திருக்கிறது. அங்கே கடத்தப்படுகிறவர்கள் அரசியலில் விலை போகும் ‘பக்கா ஆன்மீக வாதிகள்’. அந்த ரிசார்ட்டில் அனுமார் கோயில் இருக்குமா? அங்கே ‘தவம்’ செய்ய வசதி உண்டா? பூஜை புனஸ்காரங்களுக்கு ஏற்பாடு செய்வார்களா? என்று எந்த ‘தேச பக்தரும்’ கேட்டதாகத் தெரியவில்லை. தேசபக்தியின் விலை, ஜனநாயக சந்தையில் எகிறிப் போய் நிற்கிறது,.

இது சீரழிவின் உச்சம் என்கிறார், மக்களவை யின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி. அதனால் என்ன இருக்கட்டுமே! ஆட்சியைப் பிடிக்க வேண்டாமா என்று சனாதனவாதிகள் அப்படியே கடந்து போய் விடுகிறார்கள்.

இப்ப, பெரியார் தொண்டர்களை நினைத்தால் தான் பரிதாபம்; திராவிடர் விடுதலைக் கழகம் 50 இளைஞர்களுக்கு 4 நாள் கொள்கைப் பயிற்சி நடத்தப் போகிறதாம்; இதற்கு மொத்தமாக ஆகும் ஒரு இலட்சம் ரூபாய் செலவுக்கு என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கிறார்கள். பிழைக்கத் தெரியாத பெரியார்  தொண்டர்கள். சனாதன தர்மம் பேசினால், ஆன்மீகம் பேசினால் இப்படி எல்லாம் சொகுசு வாழ்க்கைக் கிடைக்கும் என்பது, அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அந்தப் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டோம் என்று  கொள்கைக்காக அடம் பிடிக்கிறார்கள்!

கொள்கை, பொதுத் தொண்டு, இலட்சிய வாழ்க்கை என்று விடாப்பிடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் அப்படி கற்றுக் கொடுத்து போய் விட்டார். காரணம், அவர் ரிஷியாகவும் முனிவராக வும் வேடம் போட விரும்பியது இல்லை!

– கோடங்குடி மாரிமுத்து

 

பெரியார் முழக்கம் 30062022 இதழ்

You may also like...