அ.இ.அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்புக் கலகம்
ஓபிஎஸ் யும், இபிஎஸ் யும் அஇஅதிமுகவை தமிழ்நாடு பாஜகவிடம் விலை பேசி கொண்டிருக்கும் போது முதுகெலும்புடன் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார் அக்கட்சியின், முன்னாள் அவைத் தலைவர் பொன்னையன். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ‘அஇஅதிமுகவை பலியாக்கி தமிழ்நாட்டில் தன்னை வளர்த்துக்கொள்ள பார்க்கிறது பாஜக’ என்று கூறியவர் அதன் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கோ, அஇஅதிமுகவிற்கோ, திராவிடக் கொள்கைக்கோ நல்லது அல்ல. என்று கூறியுள்ளார். கட்சியின் தொழில்நுட்ப அணி பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக இரட்டை வேடம் போடுவதையும், தமிழ்நாடு பாஜக கள்ள மவுனம் சாதிப்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏதோ மக்கள் பிரச்சனையில் கவலை உள்ளவர் போல தினமும் நாடகம் நடத்தி வருகிறார் அண்ணாமலை. ஆனால், அக்கட்சியின் உண்மையான முகம் என்பதோ வேறு. பார்ப்பனியத்தையும், மதவெறியையும் பாதுகாப்பது தான் பாஜக வின் உண்மையான முகம்.
காசியிலும், மதுராவிலும் உள்ள மசூதிகள், ஏற்கெனவே இருந்த விஸ்வநாதன், கிருஷ்ணன் கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று மற்றொரு அயோத்தியை உருவாக்குவதே அவர்களின் மற்றொரு அஜெண்டா.
அண்ணாமலை இதையெல்லாம் பேசாமல் முகமூடி அணிந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களின் காதில் பூ சுத்திக் கொண்டு, மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப் படுவதாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகத்தில் நடக்கும் பாஜக ஆட்சியே அவர்களுடைய உண்மை முகத்தை அம்பலமாக்கிக் கொண்டிருக்கிறது. அம்மாநில பாடபுத்தகத்தில் பசவண்ணா பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது, “ஜாதிய அடக்குமுறையை எதிர்த்த பசவண்ணா, பூணூலை அறுத்து எறிந்தவர். ஜாதிகளே இல்லாத வீர சைவம் என்ற சித்தாந்தத்தை உருவாக்கி, வைதிக தர்மம், வைதிக சடங்குகளை புறக்கணித்தவர்” என்று இருந்த வரிகளை இப்போது நீக்கிவிட்டு, வீர சைவ மாதா சீர்திருத்தத்தை உருவாக்கியவர் என்று ஒற்றை வரியோடு பாடத்தை முடித்து விட்டார்கள்.
அதே போல அம்பேத்கர் பற்றி இடம் பெற்றிருந்த “ஜாதி அமைப்பை எதிர்த்த அம்பேத்கர் இந்து தர்மத்திற்கு முழுக்குப் போட்டு புத்த தர்மத்தை ஏற்றார்” என்ற வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக திரித்து, ‘தன்னுடைய தள்ளாத காலத்தில் இந்து தர்மத்தை கைவிட்டு பவுத்த தர்மத்தை ஏற்றார் அதுவும் இந்து தர்மத்தில் ஒன்று. ஆக, ஜாதி, வைதிக எதிர்ப்பு என்றாலே பாஜகவிற்கு கசக்கிறது. காரணம், அதைக் காப்பாற்றுவதற்குத் தான் அவர்கள் கட்சி நடத்துகிறார்கள். தமிழ் நாட்டு அண்ணாமலை ஏதோ மக்கள் பிரச்சனைகளில் கவனமெடுப்பது போல நாடகமாடிக்கொண்டிருப்பதை மக்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள்.
பெரியார் முழக்கம் 09062022 இதழ்