இஸ்லாமிய வெறுப்பு அரசியல்: உலகின் முன் தலைகுனிந்து நிற்கிறது – ஒன்றிய ஆட்சி
ஒன்றிய பாஜக ஆட்சி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளின் கடும் எதிர்ப்பை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இந்திய ஒன்றியத்தில் நடைபெறுகிற இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுக்கள், வெறுப்புக் கருத்துகள் தற்போது உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வர இருக்கின்ற இஸ்லாமியர்களை எதிரி களாக கட்டமைத்து இந்துக்கள் வாக்குகளை திரட்டி விடலாம் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதற்கான திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு கொண் டிருக்கின்றன. காசி, மதுராவில் உள்ள மசூதிகள், இந்துக்கள் கோவில்களை இடித்து கட்டப்பட்டுள்ளன என்று புதிதாக உருவெடுத்துள்ளன.
ஸ்ரீரங்கப் பட்டினத்திற்குள் நுழையப் போவதாக விஷ்வ இந்து பரிஷத் காரர்கள் அறிவித்து போராட்டமும் நடத்தி முடித்திருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கள் தீவிரமாக முடிக்கிவிடப் பட்டிருக்கின்றன. பாபர் மசூதி இடித்துவிட்டு அயோத்தியில் இராமர் கோவிலை கட்டலாம் என்று திட்டமிட்டவர்கள், மசூதி இடித்தவர்களையும் காப்பாற்றிவிட்டு, மசூதி இடித்தது நியாயம், அங்கே கோவில் இருந்தது என்பதற்கான தீர்ப்பையும் பெற்று, மாநில முதல்வர் அங்கு இராமனுக்கு கோவில் கட்டுகிற முயற்சியில் ஈடுபடுகிற நிலையில் இருந்து, மதவெறி தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், அவர்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது அவர்கள் வசமாக சிக்கிக் கொண்டுவிட்டார்கள்.
அண்மையில், பாஜக வின் அதிகாரப்பூர்வ பேச்சாளராக இருக்கக் கூடிய நுபுர் ஷர்மா என்ற பார்ப்பனப் பெண், “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்லாமிய இறை தூதர்களைப் பற்றி பேசிய கருத்துகள், கடும் கொந்தளிப்பை உருவாக்கி விட்டன. அதே போல கட்சியின் டெல்லி தகவல் தொடர்புப் பிரிவைச் சேர்ந்த நவின்குமார் ஜின்டால் என்பவரும், தன்னுடைய டிவிட்டரில் இஸ்லாமிய வெறுப்புக் கருத்துக்களை பதிவிட்டிருந் தார். இந்தக் கருத்துகள் பகுத்தறிவு – அறிவியல் பார்வையில் பேசப்பட்டது அல்ல; இந்துத்துவாவின் இஸ்லாமிய வெறுப்புப் பார்வையில் பேசப்பட்டது.
இந்தக் கருத்துகள் உலகம் முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கி, இஸ்லாமிய நாடுகள் இந்தியாவின் தூதர்களை அழைத்து, இந்தியா பொது மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. வளைகுடா நாடுகள், இந்தியாவினுடைய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கின்றன. போகாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் சுற்றுப்பயணம் கொண்டிருக்கிற நேரத்திலேயே அந்நாட்டு தூதரகம் அழைத்து கடுமையான கண்டனத்தை தெரிவித்து, இந்தியாவிற்கான எதிர்ப்புக் குரல்கள் அங்கே உருவாகி இருக்கின்றன.
இந்த நிலையில் நடுங்கிப்போன ஒன்றிய ஆட்சி, பாஜக வின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் நுபுர் ஷர்மா, நவின் குமார் ஜின்டால் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி வைத்திருப்பதோடு, அந்தக் கருத்துக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என்றும், தாங்கள் எந்த மதத்தையும் வெருக்கக் கூடியவர்கள் அல்ல என்றும், இந்தியாவினுடைய அரசியல் சட்டம் அனைவரையும் சமமாக பாவிக்கிறது என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனைத்து மதத்தினரையும் மதிப்பதே இந்தியாவின் வரலாறு என்றும், தங்களுடைய குரலை தலைகீழாக மாற்றி இப்போது பேசி உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந்தியாவில் மத எதிர்ப்புக் கருத்துக்களை வைத்து அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஒரு இந்து இராஷ்டிரம் என்ற பார்ப்பன இராஜ்ஜியத்தை உருவாக்க இஸ்லாமிய எதிர்ப்பின் மூலம் அதை அடையலாம் என்று திட்டமிட்டவர்கள், இன்று உலக நாடுகளின் நெருக்கடியை சந்திக்கின்ற நிலைக்கு தள்ளப்பபட்டு இருப்பதை பாஜகவினர் சிந்தித்து, அவர்கள் அடித்த பந்தே அவர்கள் பக்கம் திருப்பி அடிப்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மதவெறி என்றைக்கும், எவரையும் காப்பாற்ற முன் வராது.
பெரியார் முழக்கம் 09062022 இதழ்