ஆவிகளை நம்புகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி – எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (8)

 

‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.

புதிர் 13: 1972ஆம் ஆண்டு ஜார்ஜ் ஓவென் என்ற கணித மரபியலாளர் ஆவிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள எண்ணினார். அதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவில், ஜார்ஜ் ஓவென், அவருடைய துணைவி அய்ரிஸ் மற்றும் பலர் இடம்பெற்றிருந்தனர். குழுவின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பை உளவியலாளர் ஜோயெல் விட்டொன் ஏற்றார். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிலிப் என்ற நபரின் ஆவியை தொடர்புகொள்ள முயன்றதால், இது “பிலிப் பரிசோதனை” என்று அழைக்கப்பட்டது. இந்த பரிசோதனையின்போது, திடீரென்று அறையின் விளக்குகள் மங்கலாகிப் போகும். குழு உறுப்பினர்கள் பிலிப்பின் ஆவியை கேட்டுக்கொண்டதும், விளக்குகள் பிரகாசமாக எரியும். ஒருநாள் திடீரென்று, குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மேசையின் மீது ஒரு புகைப்படலம் உருவாகி, மேசை அறைக்கதவை நோக்கி நகரத் தொடங்கியது. ஓவென் குழு, அறிவியலைத் தாண்டி நடந்த நிகழ்வுகளால் ஆடிப்போனது.

விடை: அய்ரிஸ்சும், மார்கரெட் ஸ்பரொவும் இணைந்து ஓவென் குழுவினரின் ஆய்வு முடிவுகளை “Conjuring up Philip (1976)” என்று நூலாக வெளியிட்டனர். அந்நூலில் குழுவினர் பேயோடு நடத்திய உரையாடல் என்று சில உரையாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை படித்த கனடா எழுத்தாளர் ஜான் ராபர்ட் கொலொம்போ, தனது “Ghost Stories of Ontario (1995)” நூலில், “பிலிப்பிடம் கேள்வி கேட்ட குழுவினர், என்னென்ன பதில்களை எதிர்பார்த்தார்களோ, அந்தந்த பதில்களை பிலிப் அளித்ததைப் போல செயற்கையாக உரையாடலை அமைத்துள்ளனர்” என்று மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் இந்த குழுவினர் செய்த ஆய்வுமுறை அறிவியலுக்கு எதிரான பித்தலாட்டமாக இருந்துள்ளது. குழுவினரின் ஆய்வை மேற்பார்வையிட்ட உளவியலாளரான ஜோயல் விட்டொன் மோசடி வழக்கில் 2017ஆம் ஆண்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். சில வழக்கு விசாரணைகளில், 6 நிகழ்வுகளில் தன்னுடைய கல்வித் தகுதி குறித்து தவறான தகவலை அளித்ததால், ஒன்டரியோ மருத்துவர்கள் & அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரி, அவருடைய மருத்துவ உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விட்டொன் 1998இல் பொய் சாட்சியம் அளித்ததாக குற்றம் சாட்டப்பவர். இந்த தக்வல்கள் The Globe and mail என்ற கனடா நாட்டு பத்திரிக்கையில் பதிவாகியுள்ளது. இத்தகைய ஒரு நேர்மை தவறிய ஒரு மனநல மருத்துவரின் மேற்பார்வையில் நடைபெற்ற ஓவென் குழுவினரின் ஆய்வை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

புதிர் 14: 1932ஆம் ஆண்டு, மருத்துவர் மன்றோவின் மருத்துவமனைக்கு 32 வயது மதிக்கத்தக்க மேரி நைட் வந்தார். 9 மாத கருவை தன் வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாகவும், குழந்தை உதைப்பதை தன்னால் உணர முடிகிறது என்றும், பிரசவத்துக்கான நேரம் நெருங்கிவிட்டதாகவும் கூறினார். மேரி நைட்டின் பால் சுரப்பிகள் உட்பட உடலின் எல்லா பாகங்களிலும் கருத்தரித்து இருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. ஆனால், ஸ்டெதெஸ்கோப்பை வைத்து சோதித்து பார்த்ததில், குழந்தையின் இதயத்துடிப்பை உணர முடியவில்லை. வயிற்றுக்குள் இன்னொரு உயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. எனவே, கர்ப்பம் வெறும் கற்பனையில் உருவானதை மன்றோ அறிந்துகொண்டார். விஞ்ஞானிகளை குழப்பும் இன்னொரு விஷயம் என்னவென்றால், சில சமயங்களில் ஆண்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும் கற்பனைக் கரு தோன்றுவது எப்படி என்பதேயாகும்.

விடை: போலியாக கருவுருவது பெரும்பாலும் ஒரு உளவியல் சிக்கலாகவே உள்ளது. இது அகச்சுரப்பி தொகுதியில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கின்றது. இதனால் சுரக்கும் இயக்குநீர் (harmone), பிரசவத்தின்போது ஏற்படும் உடல் மாற்றங்களை, பிரசவம் ஏற்படாதபோதே உருவாக்குகிறது. ஒரு பெண் உண்மையாகவே கருவுற்று இருக்கும்போது, கணவனுக்கும் இத்தகைய போலி கருவுருதல் உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஊடிரஎயனந ளுலனேசடிஅந என்று அழைக்கப்படுகிறது. இதுவும் தவறான இயக்குநீர் சுரப்பிகள் சுரப்பதால் ஏற்படும் விளைவாகும். பிரசவ காலத்தில், துணைவி படும் துயரத்தை எண்ணி கூட, சில ஆண்களுக்கு இவ்வாறாக நடக்கலாம் என்பதால், இது “பரிதாப கருவுறுதல்” என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அய்க்கிய நாடுகளில், 1940களில் 0.4ரூ கருவுறுதல்கள் போலியானதாக இருந்துள்ளன. ஆனால், மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால், 2013இல் இந்த எண்ணிக்கை 0.0045ரூ என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)

(தொடரும்)

பெரியார் முழக்கம் 19052022 இதழ்

You may also like...