சிவத்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (7)

‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.

புதிர் 11: மனித உடல் என்பது ஓர் உடல் அல்ல, அது மூன்று உடல்களால் ஆனது. அவை (1) ஸ்தூல சரீரம், (2) சூக்ஷ்ம சரீரம், (3) காரண சரீரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐம்பூதங் களின் சேர்க்கையால் உருவாக்கப் பட்டது ஸ்தூல சரீரம். ஸ்தூல சரீரத்தை தாண்டி, மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் உறைவிடம் சூக்ஷ்ம சரீரமாகும். இந்த சூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரத்தை சுற்றி ஒரு ஒளிவட்டத்தின் வடிவில் சக்தியாக பரிணமிக்கிறது. மனிதன் இறந்த பின், அவனுடைய ஆன்மா, சூக்ஷ்ம சரீரத்தின் மேலேறி சிறிது காலம் தன் உடலைச் சுற்றி அலைவதாகவும், அந்த சூக்ஷ்ம சரீரத்தை கரைத்து, காரண சரீரமாக மாற்றுவதற்கு தான் இறுதிச் சடங்குகள் செய்யப்படு வதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

1939இல் மின்பொறியாளர் செம்யோன் கிர்லியன் – வேலண்டினா தம்பதியினர் மின்கடத்தும் தட்டின் (conducting plate) மேல் ஒரு நிழற்படச் சுருளை வைத்துவிட்டு, இன்னொரு மின்கடத்தி யின் மேல் ஒரு மனிதனின் கையை வைத்துவிட்டு, அந்த கடத்திகளின் மேல் மின்சாரத்தை செலுத்தினால், அந்த நிழற்படச்சுருளில் பதியப்படும் கை வடிவத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றியிருப்பதை கண்டு பிடித்தனர். குளிர் காய்ச்சலால் (influenca) கிர்லியன் தாக்கப்பட்டபோது, உடலைச்சுற்றியுள்ள ஒளி வட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன என்பதை கண்டுபிடித்தார். அப்படியானால், ஸ்தூல சூக்ஷ்ம காரண சரீரங்கள் இருப்பது உண்மையா? முன்னோர்கள் எப்படி கிர்லியன் நிழற்படம் இல்லாமலேயே இதனை கண்டுபிடித்தனர்?

விடை: ஸ்தூல சரீரம் அய்ம் பூதங்களால் ஆனது என்று கூறும் நூலாசிரியர் நீதிபதி ராமசுப்பிர மணியன், சூக்ஷ்ம சரீரம் (மனம் – புத்தி) அதற்கு அப்பாற்பட்டது என்கிறார். இது உண்மையா என்று அறிய, மனம் (mind) என்றால் என்னவென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, “மனம் என்பது ஒரு பொருளல்ல. உணர்வுகள், கற்பனை, உள்ளுணர்வு, யோசனை, தீர்ப்பு, மொழி, நினைவு ஆகிய அறிவாற்றல் திறன்களே மனமாகும். இது உருவாகும் இடம் மூளை” என்று தெளிவாக கூறுகிறது. மூளையில் பிராண வாயு (oxygen), 73ரூ நீர், கொழுப்பு, தனிமங்கள் மற்றும் பல சத்துப் பொருள்கள் உள்ளன. எனவே சூக்ஷ்ம சரீரம் (மனம் – புத்தி) அய்ம்பூதங் களுக்கு அப்பாற்பட்டது என்ற சாஸ்திர கருத்து தவறானது. அதோடு மட்டுமல்லாமல், அய்ம்பூதங்கள் என்ற பதமே தவறானது. “காற்று”, “ஆகாயம்” ஆகியற்றை தனித்தனி பூதங்களாக காட்டுவதே பெரும்பிழை.

அடுத்ததாக, சரீரத்தைச் சுற்றி ஒளி வட்டம் உருவாகுவதைப் பற்றி பார்ப்போம். ஒரு மனிதனைச் சுற்றி இயற்கையாக ஒளி வட்டம் உருவானால், அதை படம்பிடித்து, சூக்ஷ்ம சரீரத்தை பார்த்தீர்களா! என்று ஆன்மீகவாதிகள் கூறலாம். ஆனால், நூலாசிரியர் கூறியது என்ன? கிர்லியன் புகைப்படத்தில் ஒளிவட்டம் தெரிவதாகக் கூறியுள்ளார். கிர்லியன் புகைப்படம் இயற்கையானதா? இல்லை என்பதே பதிலாகும். உயர் மின்னழுத்தத்தை ஒரு புகைப்பட தட்டின் மீது செலுத்தும்போது, தட்டின் மீது வைக்கப்படும் கையைச் சுற்றி உருவாகும் செயற்கையான ஒளி தான் கிர்லியன் புகைப்படமாக பதிவாகிறது. உயர் மின்னழுத்தத்தை நீக்கினால், ஒளிவட்டம் மறைந்துவிடும். அப்படியென்றால், ஒளிவட்டத்துக்கு காரணம் மனிதனா? உயர்மின்னழுத்தமா? உயர் மின்னழுத்தமே காரணம். அதோடு மட்டுமல்லாமல், அந்த புகைப்படத் தட்டின் மீது, கைக்கு பதிலாக ஒரு துடைப்பகட்டையை எடுத்து வைத்தாலும், கிர்லியன் புகைப்படத்தில் செயற்கை ஒளிவட்டம் தெரியும். இதை வைத்துக்கொண்டு துடைப்பக்கட்டைக்கு சூக்ஷ்ம சரீரம் உள்ளது என்றும், ஆன்மா உள்ளதென்றும் கூறமுடியுமா?

இந்த ஒளிவட்டம் (Corona) உருவாக மின்னிறக்கமே (Electrical Discharge) காரணமாகும். உயர் மின்னழுத்தத்தின் போது, பாய்மம் (காற்று அல்லது நீர்) அயனியாக்கப்படுகிறது (Ionisation). அதாவது பாய்மம், நேரயனி (+Cation), எதிரயனி (-Anion) என்று பிரிகிறது. இதனால் ஏற்படும் மின்புலமே செயற்கை ஒளி வட்டத்துக்கு காரணம். மற்றவையெல்லாம் நூலாசிரியரின் கற்பனைகள்.

புதிர் 12: பஞ்ச பூதங்களுக்கான சிவத்தலங்கள் (காளஹஸ்தி, காஞ்சி ஏகாம்பரேஸ்வர், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல்) இந்திய வரை படத்தில் கிட்டதட்ட ஒரே நேர்க்கோட்டில் உள்ளன. அதே போல, கேதர்நாத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள சிவத்தலங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளன. இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

விடை: உலகம் தட்டையாக இருந்தால் தான், வரைபடத்தில் ஒரே நேர்கோட்டில் கோயில்கள் இருப்பதாக கருத முடியும். நம் வசதிக்காக, காகித்ததில் உலக வரைபடத்தை தட்டையாக வரைந்துவிட்டு, கோயில்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதாகக் கோர முடியாது. உலகம் உருண்டையாக இருப்பதால், பஞ்சபூத சிவத்தலங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்க வைப்பில்லை. தட்டையான உலக வரைபடத்தில் கூட, நூலாசிரியர் சொல்வதைப் போல, கேதர்நாத் கோயிலும், ராமேஸ்வரம் கோயிலும் ஒரே நேர்கோட்டில் இல்லை. இது வெறும் செவிவழிச் செய்தியேயன்றி, உண்மையில்லை. தொலைதூர தகவல்தொடர்பு தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், இவ்விரண்டு கோயில்களும் நேர் கோட்டில் இல்லை என்பதை அறிய ழுடிடிபடந ஆயயீள செயலி போதும்.

(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)

(தொடரும்)

பெரியார் முழக்கம் 12052022 இதழ்

You may also like...