தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஜாதிவெறிக் கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியானது

சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் சாதி ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்கது. இந்த வழக்கில் தண்டனை  மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி நீண்ட நெடிய காலம் நடந்து வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு நடந்த கொலையில் தற்போதுதான் தீர்ப்பு  வந்துள்ளது.

சாதி ஆணவப் படுகொலையான இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா உயரதிகாரி களின் நிர்ப்பந்தம் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதுகுறித்த விசாரணையும் கூட நடை பெறவில்லை. கோகுல்ராஜ் கொலைக்கு நீதி  கிடைத்துள்ளதுபோல விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அவரது தற்கொலைக்குக் காரணமான உயரதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த கொலையில் குற்றவாளிகளைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் சாதி ஆணவ சக்திகளால் மேற்கொள் ளப்பட்டன. விஷ்ணுபிரியா தற்கொலையும் இதன் ஒரு பகுதியாகும். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டதும் கூட கடுமையான சமூக அழுத்தத்திற்கு பிறகு நடந்தது.

நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அரசுத் தரப்பு சாட்சிகள் பலரும் பிறழ் சாட்சிகளாக பல்டிய டித்தனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா அளித்த மனுவின் அடிப்படையிலேயே மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான நீதிமன்றத்தி ற்கு இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் திறம்பட வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் மற்றும் கோகுல் ராஜ் வழக்கறிஞர் பார்த்திபன் ஆகியோர் இந்த  வழக்கை பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு இடையே திறம்பட கையாண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது பாராட்டத்தக்கது. அரசு தரப்பு வழக்கறிஞரான தமக்கு அரசு உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை என்றும் குறைந்தபட்ச வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்றும் வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியுள்ளார்.

பெரியார் முழக்கம் 10032022 இதழ்

You may also like...