கிரிக்கெட்டில் சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு
உ.பி. தேர்தலில் மக்கள் செல்வாக்கை இழந்துள்ள பா.ஜ.க. ஆட்சி, இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி, இந்துக்கள் வாக்குகளை மத அடிப்படை யில் வாரிக் கொள்ளலாம் என்ற வழமையான தந்திரத்தில் இறங்கியிருக்கிறது. டி-20 கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் – இந்தியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக ஜம்மு-காஷ்மீர், உ.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உ.பி., ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் (ரயயீய) பாய்ந்துள்ளது. 2 ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கலாம். இராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியும், ஒரு பெண் ஆசிரியை பதவி நீக்கம் செய்து கைது செய்திருக்கிறது. அனைவருமே இஸ்லாமியர்கள்.
நடப்பது ஒரு விளையாட்டுப் போட்டி. இதில் இந்தியாவிலுள்ள அனைவருமே இந்தியர் தான் வெற்றி பெற வேண்டும் என்ற மன நிலையில் கட்டாயம் இருக்க வேண்டும். மாற்றி சிந்திப்பது, தேசத் துரோகம் என்றால், தே பக்தியை இவர்களே கேலிப் பொருளாக்குகிறார்கள் என்பதுதான் அர்த்தம். ‘இந்து’ ஆங்கில நாளேடு இது ‘அற்பமானது’ என்று தலையங்கமே தீட்டியிருக்கிறது.
அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் வெற்றியை அந்த நாடுகளில் கொண்டாடினால் அவர் குடியுரிமை பெற்று வாழுகிற நாடுகளுக்கு தேச விரோதிகளாகி விடுவார்களா?
இந்திய கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக முகம்மது ஷமி விளையாடினார். இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக விளையாடியதால்தான் இந்தியா தோற்றது என்று சமூக வலைதளங்களில் ‘சங்கிகள்’ அவதூறு பரப்புகிறார்கள். தோல்விக்கு ஒருவரை மட்டுமே பொறுப்பாகி விடுவார்களா? அணியில் விளையாடியவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்கள் தானே!
இந்த மத வெறுப்புப் பிரச்சாரத்துக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அணியின் ‘சகோதரத்துவத்தை’ சீர்குலைக்கும் முயற்சி என்று கடுமையாக சாடியுள்ளார்.
2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராத் கோலி கேப்டனாக இருந்தபோது இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது.
2016இல் நியுசிலாந்தில் நடந்த போட்டியில் கேன் வில்லியம் சன் கேப்டனாக விளையாடியபோது, பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றிருக்கிறது. இதற்கெல்லாம் யாரை குற்றம் சாட்டுவார்கள்?
அய்.பி.எல். போட்டிக்கு வெளிநாட்டுக்காரர்களையே ஏலம் எடுத்து விளையாட வைக்கிறார்களே, அதற்கு என்ன பெயர் சூட்டுவது?
உலக நாடுகளில் ‘இந்தியாவை’ப் பார்த்து மதிக்குமா? வெட்கித் தலைகுனியுமா?
பெரியார் முழக்கம் 04112021 இதழ்