தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகமே, விநாயகர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்து
பொது இடங்களில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்டுவது கூடாது என்று அரசு ஆணைகள் தெளிவாக கூறுகின்றன. உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு உயர்நீதி மன்றமும் பல வழக்குகளில் இதை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அண்மையில் கூட சென்னை உயர்நீதி மன்றம், பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கு மேல் எந்த பொது இடங்களிலும் எவரும் சிலைகள் வைக்க கூடாது என்றும் ஒரு தீர்ப்பை அண்மையில் வழங்கியிருக்கிறது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இது போன்ற கோவில்கள் கட்டப்படுவது என்பது நிச்சயமாக சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும்.
‘தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்’ (கூயஅடையேனர கூநயஉhநசள நுனரஉயவiடிn ருniஎநசளவைல) என்ற அரசு பல்கலைக்கழகம் ஒன்று சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இது 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆசிரியர் பணிகளுக்காக, கல்வியியல் கல்லூரிகளை இணைத்து நடத்தப்படுகிற பல்கலைக்கழகம் இது. இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் மிகப்பெரிய விநாயகர் கோவில் ஒன்று இப்போது மிக வேகமாக கட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு பத்து நாட்களில் அந்த கோவில் கட்டி முடிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
ஒரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் படிக்க வருகிறார்கள். ஆனால் பல்கலைக்கழக வளாகம் என்பதே ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சொந்தமானது என்று சில துணைவேந்தர்கள் நினைத்துக் கொண்டு சட்டத்திற்கும், அரசு விதிகளுக்கும் புறம்பாக இத்தகைய கோவில்களை எழுப்புவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது நீதிமன்றங்கள் வழங்கியிருக்கிற பல தீர்ப்புகளுக்கும் எதிர்ப்பான ஒன்று ஆகும்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அதன் துணைவேந்தர் ஆதரவோடு நடைபெறும் கோவில் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர வேண்டிய நிலை உருவாகி விடும். இந்த நிலையை நிறுவனமும், பல்கலைக்கழக துணைவேந்தர்களும் உருவாக்கி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பெரியார் முழக்கம் 04112021 இதழ்