துடிப்பு மிக்க இளைஞரை கழகம் இழந்து விட்டதே; கோவை அறிவரசு மாரடைப்பால் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்டத் தோழர் கார்த்தி என்கிற அறிவரசு (36) கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக முடிவெய்தினார்.

துடியலூரில் உள்ள அண்ணா குடியிருப்பில் அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டது.

தோழர் அறிவரசு கொள்கைப்படியே இறுதி நிகழ்வு எந்தவித, ஜாதி, மத சடங்குகள் இல்லாமல் கருப்புத் துணியும், கழகக் கொடியும் போர்த்தி, கழகப் பெண் தோழர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை மெஹந்தி ஆகியோர் அவரது உடலை தூக்கினர். துடியலூர் மின் மயானத்தில் அறிவரசு உடல் மாலை 5:30 மணியளவில் எரியூட்டப்பட்டது. இல்லத்தில் இருந்து மின் மயானம் வரை கழகத் தோழர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே வந்தனர்.

கடந்த 09.02.2020 அன்று கோவையில் நடைபெற்ற நீலச்சட்டை பேரணியில் குடும்பத்துடன் தன்னை கழகத்தில் அறிவரசு இணைத்துக்கொண்டார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பெரியாரியல் பயிலரங்கில் குடும்பத்துடன் பங்கேற்றார்.

பெரியாரியலை தேர்வு செய்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து இந்த அமைப்பில் சேரும் முடிவை தேர்வு செய்து ஆர்வத்துடன் பணியாற்ற வந்த ஒரு இளைஞர், ‘திடீரென’ இப்படி ஒரு மரணத்தை சந்தித்து விட்டார். இலட்சியத் துடிப்புள்ள ஒருஇளைஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாத சமூகத்துக்கான இழப்பு. திடீர் பிரிவால் கடும் துயரத்தில் மூழ்கி இருக்கும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி, கோவை மாநகர செயலாளர் நிர்மல், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு ஆகியோர் உட்பட திருப்பூர், கோவை மாவட்டக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 25022021 இதழ்

You may also like...