வந்து விட்டார் செந்தமிழ் காவலர்

ஆடிட்டர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடை என்றார். தி.மு.க. என்ற நெருப்பை அணைக்க ‘கங்கை ஜலத்துக்கு’ காத்திருக்க முடியாது; ‘ஆத்து வாசல்ல’ (வீடு என்பதற்கு அவாள் பயன்படுத்தும் மொழி) உள்ள சாக்கடைத் தண்ணீரையும் பயன்படுத்த வேண்டியதுதான் என்பது ‘அவாளின்’ கருத்து.

“ஆமாம். ஊழல் என்றாலே, ‘பிரம்மா’வின் நெற்றியில் பிறந்தவாளுக்கு சுத்தமாகப் பிடிக்காது; அவ்வளவு சுத்த சுயம்பிரகாச தங்கக் கட்டிகள்; அது சூத்திரர்களுக்கு மட்டும் தான்; ஜெயலலிதாவுக்கு பொருந்தாது! ஜெயலலிதாகூட ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை பெற்றவர் தான்; 100 கோடி அபராதம் வேறு; ஆனால், தி.மு.க. தான் ஊழல் கட்சி; ஜெயலலிதா புரட்சித்  தலைவி” என்பார்கள்.

மோடி நேர்மையின் சின்னம் என்பார்கள். அவர், சென்னை அரசு விழாவில் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு ‘மலர்தூவி’ மரியாதை செலுத்திய காட்சியை தொலைக்காட்சிகளில் எல்லோரும் பார்த்தார்கள். அரசுப் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, சொத்துகளைக் குவித்திருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் எழுதியே காட்டியிருக்கிறது. அதனால் என்ன? அதிகார அரசிய லுக்காக எந்த நிலைக்கும் போவது ‘பாவ’மில்லை! ‘தர்மத்தைக் காக்க கொலை செய்; பரவாயில்லை’ என்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தவன் தானே பகவான் ‘கிருஷ்ணன்’.

இப்போதெல்லாம் தமிழ்மொழி மீது மோடிக்கு அவ்வளவு ‘பாசம்’ இப்போது பொங்கி வழிகிறது. அரசியலுக்காக ஜெயலலிதா படத்துக்கு பூ போடுவார் என்றால், ஓட்டுக்காக தமிழுக்கு ‘ஜே’ போடுவார். அவ்வையார், பாரதி, திருவள்ளுவரின் குறள் பற்றி எல்லாம் பேசுகிறார். படைப்புத் திறன் மிகுந்த அறிவாளிகளைக் கொண்டது தமிழ்நாடு என்கிறார். ஆனால், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களாக வேறு மாநிலத்துக்காரர்களை இறக்குமதி செய்வார். செம்மொழி சிறப்பு பெற்ற தமிழுக்கு நிதி ஒதுக்க மாட்டார். பேசுவதற்கே ஆளில்லாத சமஸ்கிருதத்துக்கு மட்டும் கோடியாக நிதி; தனிப் பல்கலைக் கழகங்கள்; பள்ளிகள் தோறும் சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு கொழுத்த சம்பளத்தில் வேலை; அரசுத் திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர்; வேதத்தில் கூறப்படும் ‘சரசுவதி நதி’ பற்றி ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு; இப்படி அரசுப் பணத்தை வாரி வீசுவார்!

மற்றொரு புறம் இந்தித் திணிப்பு; தமிழ்நாட்டின் ‘கேந்திர வித்யாலயா’வில் சமஸ்கிருதம், இந்திக்குத் தான் அங்கீகாரம்; சமஸ்கிருதம் படித்தால் தான் 6ஆம் வகுப்பில் தேர்ச்சி; தமிழாசிரியர்கள் நியமனங்களே கிடையாது; ஆனால், பா.ஜ.க. ஆட்சி தான் தமிழை வளர்க்கிறது என்கிறார் எச். ராஜா. விட்டால், ‘செந்தமிழ்ப் புலவர்’, ‘தமிழ்மொழிச் செம்மல்’ என்று மோடிக்கு பட்டம் சூட்டி விடுவார்கள்.

சரி; தமிழ் மீது ‘திடீர் காதல்’ வந்து விட்டது? ஆனால் தமிழர்கள் மீது மட்டும் தான் ‘கசப்பு’ வெறுப்பு. தமிழ்நாட்டின் மத்திய அரசு அலுவலகங்களில் பொதுத் துறை நிறுவனங்களில் இந்திக்காரர்கள் தான் குவிந்து கிடக்கிறார்கள். தமிழ்நாட்டுக் காரன் போனால், ‘இந்தி பேசத் தெரியுமா?’ என்று இந்தி யிலேயே கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது. இப் போது தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் தமிழ்ப் பயிற்சித் திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டு பொதுத் துறை வங்கிகளில் வேலை செய்யும்  6000 இந்திக்காரர்களுக்கு தமிழ்ப் பேச பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னை பல்கலைக்கழகத்தோடு இதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.

சுமார் ஒரு கோடி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை இல்லை. வடநாட்டுக்காரர்களை இங்கே வேலைகளில் குவித்து வைத்துக் கொண்டு அதற்கு வங்கி செலவிலேயே தமிழ் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்களாம். வாடிக்கை யாளர்களிடம் அவர்கள் இனிமையான தமிழில் பேசப் போகிறார்களாம். அதாவது மோடியின் தமிழ்ப் ‘பற்று’ போல!

உ.பி.யிலோ, பீகாரிலோ, இராஜஸ்தானிலோ, ம.பி.யிலோ பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் அங்கே அரசுப் பணிகளில் அமர்ந்து கொண்டு இந்திப் பயிற்சி பெற்று வடநாட்டுகாரர்களிடம் இந்தியில் ‘இனிமையாகப்’ பேச பயிற்சி தருவார்களா? அப்படி ஒரு நிலையை கற்பனைகூட செய்ய முடியுமா?

தமிழன் மட்டும் அவ்வளவு ஏமாளி! இளிச்சவாயன்!

அவ்வையாரையும் வள்ளுவரையும் பாரதியையும் பேசும் ‘தமிழ் ஜீ’க்களே!

ஊழல் எதிர்ப்பு ‘உத்தமர்’களே!

உங்கள் தமிழ்ப் பற்று ஊழல் எதிர்ப்புகளுக்கு உள்ளே பதுங்கி நிற்பது பார்ப்பனியம் – மனுதர்மம்!

சொரணையுள்ள தமிழன் இப்படித் தான் கேட்பான்!

–  இரா

 

பெரியார் முழக்கம் 18022021 இதழ்

You may also like...