மானாட, மயிலாட

(சசிகலா, ஊழல் வழக்கிலிருந்து தண்டனைப் பெற்று விடுதலையாகி வருவதைக் கொண்டாடி மகிழ்வதைக் கண்டு குமுறி ஒரு வாசகர் மின்னஞ்சல் வழியாக அனுப்பியது.)

தாய்த் திருநாட்டை

தளை கொண்ட எதிரியை

மூண்டெழுந்த போரில்

வீழ்த்தி வாகை சூடி

வீதிவலம் வருகின்ற

வெற்றித் திருவுருவை

வாழ்த்தி வரவேற்க

முழங்கிடு சங்கே! ஆடிடு மயிலே!

அரண்மனை நீங்கி

அரியணை துறந்து

கானகம் ஏகி

கடுந்தவம் புரிந்து

மானுட வாழ்வின்

துக்கம் நீங்க

மருந்தொன்று தாங்கி

போதிமரத்து மனிதர் வருகிறார்

கொட்டுக பறையே! கூவிடு குயிலே!

எங்கோ பிறந்து வளர்ந்து

இங்கு வந்து, ஏழையின் துயர்கண்டு

பசி, பட்டினி பாழ்நோய் போக்க

தனித்த நின்று தவ வாழ்க்கைக் கொண்டு

ஈ(க) என இரந்து இழிமொழி சுமந்து

தள்ளா வயதிலும் உலகம் சுற்றி

நிதி திரட்டி விழிநீர் துடைக்கும்

ஏந்தல் வருகிறார்

மகுடமே ஒலித்திடு! மான்களே ஆடுங்கள்!

சாதி மத பேதம் மாய்த்திட

சாமானியனின் முதுகு நிமிர்ந்திட

(தன்) வாழ்நாளெல்லாம் போராடி

வீழ்ந்து கிடந்த மானுடத்தை

வெளிச்சப் பாதைக்கு அழைத்து வரும்

தீரம் மிக்க அறப்போராளி

(நம்) திசை நோக்கி வருகிறார்

மேகங்களே பொழியுங்கள்!

மலர்களே சிரியுங்கள்!

– பிரியங்கா

 

பெரியார் முழக்கம் 11022021 இதழ்

You may also like...