‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு கூறுகிறது மனுசாஸ்திரத்தை அமுல்படுத்தும் உ.பி. – கர்நாடக பா.ஜ.க. ஆட்சிகள்
‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜன. 9, 2021) தீட்டியுள்ள தலையங்கத்தின் தமிழாக்கம்.
ஏழ்மையில் உழலும் ‘பிராமணப்’ பெண் களுக்கு உதவி செய்ய விரும்புவதாக கருநாடக அரசு கூறுகிறது. இப்படி அந்த அரசு கூறுவதால், அந்தப் பெண்களின் உண்மையான வாழ்க்கை நெருக்கடிகளுக்கும், பெண்கள் என்ற அடிப்படையிலான பாதிப்புகளுக்கும் உதவிட முன் வந்திருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அப்படி கருநாடக அரசு கருதிப் பார்க்கவில்லை. மாறாக உண்மையான பாதிப்பு என்ற பார்வையிலிருந்து விலகி அவர்களுக்கு சமூகத்தில் மிகவும் பயன்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பிரச்சினைக்காக கவலை எடுத்துக் கொண்டிருக்கிறது. ‘பிராமணர்’களாகவே பிறந்த அவர்கள் காலம் முழுதும் ‘பிராமணர்’ களாகவே வாழ வேண்டும் என்பதே அரசின் கவலை. இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. ஒன்று பிராமணப் ‘பெண்கள்’ திருமணத்துக்கான உதவித் திட்டம்; மற்றொன்று அவர்கள் ‘பிராமண அர்ச்சகர்’களையே திருமணம் செய்து கொள்ள உதவிடும் திட்டம்.
ஜாதி அமைப்பு, ஜாதிகளுக்குள்ளே நடத்தப் படும் திருமணங்கள் வழியாகக் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது. அதன் வழியாக ‘ஜாதித் தூய்மை’ உறுதிபடுத்தப்படுகிறது. இப்போது ‘பிராமணப்’ பெண்கள் பிராமணர் களாகவே ‘ஜாதி தூய்மையைக் காப்பாற்ற’ அரசாங்க நிதியை செலவிட முன் வந்துள்ளது, கர்நாடக அரசு.
பிராமணப் பெண்களின் உண்மையான பாதிப்புகளுக்கு ஏதேனும் உதவி செய்ய அரசு நேர்மையாக விரும்புமானால், அவர்களின் படிப்புக்கு உதவித் தொகை வழங்கலாம்; வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை வழங்கலாம்; ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்து வைப்பதை மாற்றி வேறு ஜாதியில் திருமணம் செய்ய உதவலாம். ஆனால், இப்போது கருநாடக அரசு அறிவித்துள்ள திட்டங்களோ இவர்களை பொருளாதார ரீதியாகவோ அல்லது சமூக ரீதியாகவோ உயர்த்தக் கூடிய திட்டமல்ல; ஜாதிக்குள் இருத்தி வைக்கும் திட்டம்; பிற ஜாதி யினரைப் போலவே பிராமணர்களிலும் ஏழைகள் இருக்க முடியும்தான். ஆனால், இவர்களின் ஏழ்மைக்கு பிறந்த ஜாதி ஒரு காரணம் அல்ல; சொல்லப் போனால் பரம்பரை பரம்பரையாக இவர்கள் ஜாதி யின் பெயரால் பெற்று வரும் பெருமைகள், இவர்களின் பொருளாதாரத் தடைகளை உடைத்து மேம்பாடடையச் செய்து விடும். (Of course Brahmins can be poor, just as those from other castes, but their caste is not the reason for their poverty. If anything, their inherited social prestiege might even make up for economic hardship)
‘பிராமணப்’ பெண்களின் சமூகச் சூழலை ஒடுக்கப்பட்ட ஜாதிப் பெண் களோடு ஒப்பிட முடியாது. வரலாற்று ரீதியாக இந்தப் பெண்கள், உடல் உழைப்பாளிகளாக கீழான வேலைகளை செய்கிறவர்கள்; முன்னேறும் வாய்ப்புகள் இன்று வரை மறுக்கப்படு கிறவர்கள்; அதற்கான சமூக உறவுகளும் அவர்களுக்கு இல்லை. இன்று வரை வேலைகளில் பாகு பாடுகளையும் ஜாதி ஒதுக்குதல்களையும் சந்திக்கிறார்கள்.
உ.பி. அரசோ (பா.ஜ.க. ஆட்சி) பெண்கள் வேறு மதத்தவரைத் திருமணம் செய்ய தடை விதிக்கும் சட்டம் கொண்டு வருகிறது. கருநாடக பா.ஜ.க. ஆட்சி பெண்களை தங்கள் ஜாதிக்குள்ளேயே இருத்தி வைப்பதற்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. இரண்டு ஆட்சிகளுமே இந்திய அரசியல் சட்டம் வழங்கும் உறுதி மொழியைக் காப்பாற்றுவதை விட்டு விட்டு ‘மனுஸ்மிருதி’யை செயல்படுத்திக் கொண்டிருக் கின்றன. (They are both operationalising the Manusmirithi rather than upholding the promise of the Indian Consitution) – என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் கூறுகிறது.
‘மனுஸ்மிருதி’ இப்போது எங்கே இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைப் பார்த்து தமிழ்நாடு பார்ப்பனர்கள் சீறிப் பாய்ந்தார்கள். இதோ, கருநாடக, உ.பி. பா.ஜ.க. ஆட்சிகளே மனுஸ்மிருதியைத் தான் அரசு திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடே கூறுகிறது.
இதற்கு என்ன பதில்? (செய்தி – 2ஆம் பக்கம்)
பெரியார் முழக்கம் 14012021 இதழ்