காவி நிறக் குட்டிக்கு பாலும் கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.! உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

காவி நிறக் குட்டிக்கு பாலும்
கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.!
உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி
உச்சநீதிமன்றம் இந்திய அரசியல் சட்டத்தில் மிக முக்கிய அங்கம்.அரசியலமைப்புச் சட்டம் அதன் பாதையில் பயணிக்கின்றதா எனக் கண்காணிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் காவல் நாயாக விளங்கும் மக்களாட்சியின் மூன்று பெரிய தூண்களில் ஒன்று.
ஆனால் இன்று அந்த  தூண் கறையான் அரித்து உளுத்துப் போனதற்கு சமூக நீதி என்ற பாதுகாப்பு இல்லாததே முக்கிய காரணம்.
உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கு எட்டாத எட்டிக்காயாகவும் அங்கு கட்சிக்காரர்களைப் பொறுத்தும் வழக்கறிஞர்களுக்கு ஏற்பவும்  தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன என பொதுமக்கள் நம்பிக்கை இழந்ததற்கும் அதுவே காரணம்.
மெட்றாஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக விசாரணை நீதிபதி பதவியில் இருந்து உயர்வு பெற்ற  தமிழகத்தைச் சேர்ந்த  திருமிகு
ஏ. வரதராஜன் பின்னர் 10.12.1980 அன்று திருமதி இந்திரா காந்தி அமைச்சரவையில்  ஆந்திராவைச் சேர்ந்த துணிச்சலான திருமிகு பி.சிவசங்கர் அவர்கள்  சட்ட அமைச்சராக இருந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.
1985 ஆம் ஆண்டு வங்கத்தைச் சேர்ந்த   பி.சி.ரே காங்கிரஸ் ஆட்சியின்போது தலைமை நீதிபதி பிஎன் பகவதியால்  உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் 1991 வரை பதவி வகித்தார்.
1989  ஆம் ஆண்டு
ஆந்திராவைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி கடிகித்தலா ராமசாமி என்ற  கே.ராமசாமி உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில் புகழ்பெற்ற தீர்ப்புகள் பல வழங்கிய அவர் வழங்கிய குமாரி மாதிரி பாட்டில் , அப்பா பாலு இங்லே ஆகியன குறிப்பிடத்தக்கன.
1991 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கேரளாவின்  கோணகுப்பக்காட்டில் கோபிநாதன்  பாலகிருஷ்ணன் என்ற கே.ஜி .பாலகிருஷ்ணன் 1985 ஆம் ஆண்டு கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும்  08.06.2000 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பின்னர் 2010 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்றார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 23.05.2019 அன்று பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதியான பி ஆர் கவாய் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.அவர்
கேரளா, பிகார் மாநிலங்களில் ஆளுநராகவும்,இந்திய குடியரசு கட்சியிலிருந்து பிரிந்த இந்திய குடியரசு கட்சி (கவாய்)பிரிவு தலைவரும்  புத்த மதத்தைப் பின்பற்றுபவருமான  ஆர்.எஸ்.கவாய் அவர்களது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை மேயராக 1945 ஆம் ஆண்டில்  பதவி வகித்த நமச்சிவாயம் சிவராஜ் அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் முதல் தலைவர்.
மேற்சொன்ன ஐந்து நீதிபதிகள் மட்டுமே இதுகாறும் உச்சநீதிமன்றத்தில் பதவிவகித்த, வகிக்கும் பட்டியல் சமூக நீதிபதிகள்.
1950 ஆம் ஆண்டு எச்.ஏ.கனியா முதல் 2020 ஆண்டு  அர்விந்த் போப்டே வரை கடந்த 70 ஆண்டுகளில் 47 தலைமை நீதிபதிகளின் தலைமையில் பதவி வகித்த 247 உச்சநீதிமன்ற நீதிபதிகளில்,  பட்டியல் வகுப்பைச் சேரந்தவர்கள் வெறும் ஐந்து பேர்கள்  மட்டுமே என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.
2011 ஆம் ஆண்டின் பட்டியல் வகுப்பினருக்கான தேசிய ஆணையம் தனது மிகச் சிறந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறது.
‘நீதிபதிகளின் தீர்ப்புகள் அவர்களது சமூக பின்னணிபடியே அமைகின்றன பெரும்பாலான நீதித்துறையின் மேலடுக்கில் பணியாற்றும் நீதிபதிகளின்  தனிப்பட்ட  சாதி விருப்பு வெறுப்புகள் அடிப்படையிலேயே அத்தீர்ப்புகள் அமைகின்றன.
உதாரணமாக மண்டல் கமிஷன் தொடர்பான   இந்திரா சாஹ்னி என்ற   பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டு வழக்கில் அவ்வழக்கிற்கு தொடர்பில்லாமல்  பட்டியல் வகுப்பினருக்கான பதவி உயர்வுக்கான ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையான சமத்துவத்தைப் பேண உயர் நீதித்துறையில் சமூகத்தின் அனைத்து வகுப்பினருக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ஆனால் நீதித்துறை மேலடுக்கு இந்தியாவின் ஒரு விழுக்காட்டைச் சேர்ந்த உயர் வகுப்பினருக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் மட்டுமே ஏகபோக உரிமையாக்கப்பட்டுள்ளது.
பாஜக வின் பிரமுகரான கரியா முண்டா அறிக்கையின்படி 01.05.1998 அன்று இந்தியா முழுக்க 481 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 15 பேர்கள் மட்டுமே பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்.
2011 ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க உள்ள  21 உயர்நீதிமன்றங்களில் 850 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 24 பேர்கள் மட்டுமே பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
2011 ஆம் ஆண்டில் 14 உயர்நீதிமன்றங்களில் ஒரு பட்டியல் வகுப்பை சேர்ந்தவரோ அல்லது  பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரோ கூட பதவி வகிக்கவில்லை. அதே காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்திலும் 31 நீதிபதிகளில்
பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
திருவாளர்கள் பி.சிவசங்கர்,பி.சங்கரானந்த்,
எச்.ஆர்.பரத்வாஜ் ஆகியோர் ஒன்றிய அரசின்  சட்ட அமைச்சர்களாக இருந்தபோது அனைத்து மாநில தலைமை நீதிபதிகளுக்கும் பெண்கள்,சிறுபான்மையினர், பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரை செய்ய வேண்டி  கடிதங்களை எழுதினர் ஆனாலும் மாற்றம் ஏதுமில்லை.
உயர்நீதிமன்ற அலுவலர்களிலும் இந்தியா முழுக்க இட ஒதுக்கீடு பின்பற்ற படவே இல்லை.டெல்லி மற்றும் பாம்பே உயர்நீதிமன்றங்களில் பணியாளர்கள் ஒருவர் கூட பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை’.
என மேற்சொன்ன பட்டியல் சமூகத்தினருக்கான  தேசிய ஆணைய  அறிக்கை குறிப்பிடுகிறது.
23 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசம், ஒன்பது கோடிகளுக்கு மேல் கொண்ட பிகார், எட்டு கோடிகளுக்கு மேல்  கொண்ட மத்திய பிரதேசம், ஏறத்தாழ எட்டு கோடிகளைத் தொடும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நீதிமன்றங்கள் முழு பண்ணையடிமை feudal  மனநிலையில் இயங்குவது ஆச்சரியமளிக்கவில்லை.அம் மாநிலங்கள் ஒரு பட்டியல் சமூக நீதிபதியைக்கூட உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பவில்லை.
உயர்சாதி எனத் தன்னை கருதிக்கொள்ளும் அலகபாத் உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் தனக்கு முந்தைய பட்டியல் சமூக நீதிபதியின் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் அவரது நாற்காலியையும் அறையையும் பயன்படுத்துவதற்கு முன் கங்கை நீரால் சுத்திகரிப்பு செய்த நிகழ்வை உச்ச நீதிமன்றத்தின் அப்பா பாலு இங்லே தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி சுட்டிக்காட்டுகிறார். எவ்வளவு மனப்பிறழ்வு கொண்ட சீழ்பிடித்த  சமூகத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதில் மகிழ்ச்சி அடையலாம் .
138 கோடி மக்கள் தொகையில் கால்பங்கிற்கு மேல் 16.6 % பட்டியல் சமூகத்தினரும் 8.6 % பழங்குடி சமூகத்தினரும் வாழும் இந்தியாவில் சுதந்திரம் கிடைத்து 30 வருடங்கள் ஒரு பட்டியல் மற்றும் பழங்குடி சமூக நீதிபதி இல்லாமலேயே நிலச்சீர்திருத்தச் சட்டங்கள்  , வங்கிகள் தேசிய மயம், கேசவானந்த பாரதி,  மன்னர்மானிய ஒழிப்பு
போன்ற வழக்குகள் நிலவுடமை சமூகத்தினரால் தீர்மானிக்கப்பட்டது நகைப்பிற்கு இடமான நிகழ்வு.
கே.சி.வசந்தகுமார் வழக்கில் கர்நாடகாவின்  இட ஒதுக்கீட்டு முயற்சியை தகர்க்கும் தீர்ப்பை வழங்கிய ஐவரில் நால்வர் பிராமணர்கள் என நீதிபதி தேசாய் ஜோக் அடித்ததாக எதிர்கால நீதிபதியாக வாய்ப்பு ஒளிமயமாக உள்ள வழக்கறிஞர்
அபினவ் சந்திரசூட் பெங்குயின் வெளியீடான  தனது சுப்ரீம் விஸ்பர்ஸ் supreme whispers 2018 நூலில் குறிப்பிடுகிறார் .அத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சந்திர சூட் , டி.ஏ.தேசாய், ஏ.பி.சென்,ஈ.எஸ்.வெங்கட்ராமையா ஆகியோரில் பிராமணரல்லாதவர் நீதிபதி சின்னப்பரெட்டி மட்டுமே.
அதே நூலில் 1988 ஆம் ஆண்டு நீதிபதி காலித், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட்( தற்போதைய நீதிபதி சந்திரசூட்டின் தந்தை) மற்றும் பாதக் ஆகியோர் பிராமண நீதிபதிகளை மட்டும் நியமிக்க ஆர்வம் காட்டியதாக குற்றம் சாட்டியதைக் குறிப்பிடுகின்றார்.
60 கோடி பெண்களைக் கொண்ட இந்தியாவின்
வர்ணாசிரம உச்ச நீதிமன்றத்தில் பெண்களின் நிலையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை கடந்த 70 ஆண்டுகளில் எட்டே எட்டுப் பெண் நீதிபதிகளே பதவி வகித்துள்ளனர்.
பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பற்ற உச்ச நீதிமன்றத்தால் ஏற்படும்  சமூக சிக்கல்களை அவ்வாறு தீர்ப்பளிக்கும் உயர் வகுப்பு  நீதிபதிகளால்  கற்பனை செய்யக் கூட முடியாது.
கொரானோ காலத்தில் 22.04.2020 அன்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா,இந்திரா பானர்ஜி,வினீத் சரண்,எம் ஆர் ஷா, அனிருத்த போஸ் ஆகியாரது அரசியலமைப்புச்சட்ட அமர்வு செப்ரோலு லீலா பிரசாத் ராவ் chebrolu leela prasad rao  வழக்கில் ஒரு தீர்ப்பளித்தனர்.
ஆந்திரப்பிரதேசத்தில் பழங்குடிப் பகுதி மாணவர்களுக்கு பழங்குடி ஆசிரியர்கள் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்ற ஆந்திர அரசு விதிகள் செல்லாது எனவும் அவ்வாறு செய்வது
100 % இட ஒதுக்கீடு எனவும் அது அருவருக்கத்தக்கது  obnoxious எனவும்  தீர்ப்பளித்தது.
அரசியலமைப்புச்சட்டத்தின்
5 ஆவது அட்டவணையின் கீழ் வகைபாடு செய்யப்பட்ட பழங்குடிப் பகுதியைப்பற்றியோ, பழங்குடி கலாச்சாரம் குறித்தோ,  சமஸ்கிருதத்திற்கும் பாட்டனான பழங்குடி மொழி குறித்தோ எவ்வித அறிதல் இல்லாத தீர்ப்பு அது.
ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் நியாயமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றியதன் அடிப்படை
பிற்படுத்தவர்கள் குறித்த மண்டல் கமிஷன் தீர்ப்பின்   காரணங்களால் என்றால் நகைக்காமல் என்ன செய்வது .
கோவில்களில் 100% ஒரே சாதியினரே பணியாற்றுவதை 100% இட ஒதுக்கீடு எனச் சொல்லாத உச்ச நீதிமன்றம் அதை வழக்காறு எனக் கருதுகிறது,  ஆனால் பழங்குடி மக்களுக்கான கலாச்சார உரிமைகளில் ஒன்றான மொழி உரிமையை பழங்குடி ஆசிரியர்களே நிறைவு செய்ய இயலும் என்ற புரிதல் இல்லாததற்கு உச்ச நீதிமன்றத்தில் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு போதுமான பங்களிப்பு திட்டமிட்டு மறுக்கப்படுவதே காரணம்.
1998  ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நூறாம் வயல் என்ற காணி தொல்குடி குடியிருப்பில் இருந்த பள்ளியை பாம்புகள் வருகின்றன என காரணம் காட்டி தூரத்தில் இருக்கும்  சமவெளி பகுதிக்கு மாற்றியதை எதிர்த்து பழங்குடி மக்களுக்காக முறையிட்ட  வழக்கை மெட்றாஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சிவராஜ்பட்டீல் தள்ளுபடி செய்தது நினைவுக்கு வருகின்றது.
ஆந்திராவைப் போன்றே தமிழகத்திலும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கும் , கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கும் அதே போன்ற விதிகள் நடைமுறையில் உள்ளன.அவையும் தற்போது பாதிப்புக்கு உள்ளாகும்.
16.03.2015 ஆம் ஆண்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார் அதில் தமிழகத்தின் விசாரணை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதிகளில் 209 பேரில் 17 பேர்களே உயர் வகுப்பினர் எனவும் 34 பேர்கள் பட்டியல் சமூத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 109 பேர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அது போன்றே 194 முது நிலை உரிமையியல் நீதிபதிகளில் ஏழு பேர்கள் மட்டுமே உயர்வகுப்பினர் எனவும் இளநிலை உரிமையியல் நீதிபதிகளில் 468 பேர்களில் 12 பேர்கள் மட்டுமே உயர் வகுப்பினர் எனவும் குறிப்பிட்டிருந்தார் இந்நீதிபதிகள் தகுதி அடிப்படையில் தேர்வுகள் நேர்காணல் அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்றவர்கள்.
தமிழகத்தில் உயர்நீதிமன்றத்திலும்  சூழல் கொஞ்சம்  பரவாயில்லை எனலாம் ஆனால் அதுவே நீடிக்குமா எனக் கூற இயலாது.
பிகாரில் 2017 ஆம் ஆண்டுவரை விசாரணை நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு எதுவும் இல்லை.
பசுப்பட்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிகார்,சத்திஸ்கர்,உத்தர் காண்ட் மாநிலங்களால் ஒரு பட்டியல் சமூக நீதிபதியைக்கூட கடந்த 70 வருடங்களில் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லை .இத்தனைக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 160.
பட்டியல் சமூக வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் தகுதியில்லை என்று கூறுவது சகிக்க முடியாத சாதி வெறி incorrigible bigot  என தேசிய பட்டியல் சமூக ஆணையம் தனது 2011 ஆம் ஆண்டு அறிக்கையின் நாலாவது பக்கத்தில் குறிப்பிடுகிறது.
பாரதி கனவு கண்ட அழகிய  வெள்ளை நிறப் பூனையான இந்தியா தனது குட்டிகளை சமமாக நடத்தவில்லை அது காவி நிறக்குட்டிக்கு பாலும் கருஞ்சாந்து நிறக்குட்டிக்கு காலும் காட்டுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தந்த கோபுரங்களுக்கு வெளியே பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்கள் தங்களுக்கும் கதவு அகலத் திறக்குமெனக்  காத்திருக்கின்றன.
தி.லஜபதி ராய்
14.05.2020
பின் குறிப்பு: பட்டியல் சமூக ஆணைய அறிக்கையை தேடி எடுத்து கொடுத்த
மகபூப் ஃபாசிலுக்கும் கட்டுரைக்கு புள்ளி விபரங்கள் தேட  உதவிய சீனி செய்யது அம்மாவுக்கும் நன்றி.!

You may also like...