அரசுப் பள்ளிகளில் பட்டியல் பிரிவு குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய பணிப்பதா? சட்ட நடவடிக்கை எடுக்க, கோவை மாநகர் கழகம் புகார்

கோவை மாநகர கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 காலை 11 மணியளவில் வ.உ.சி. பூங்கா அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.  அதில்கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  1. தோழர் ஃபாரூக் நினைவு நாளை ஒட்டி 17.03.2020 அன்று  அண்ணாமலை அரங்கில் கருத்தரங்கம் மற்றும் மறைந்த  தோழர்கள் பேராசிரியர் அன்பழகன்,  ஆசிட் தியாகராஜன், இராவணன் ஆகியோரது படத்திறப்பு நடத்துவது.
  2. 09.03.2020 திங்கள் கிழமை அன்று அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளை  கழிவறைகளை அகற்ற வற்புறுத்தும் ஜாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு துறை ரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து ஆசிரியர்கள் ஜெயந்தி, குமரேஷ்வரி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் காலை 10 மணிக்கு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது .

இதில் தோழர்கள் செ. வெங்கடேசன்,  ச. மாதவன், ஆ.சுரேஷ்,  நா.வே. நிர்மல்குமார் ப.கிருட்டிணன்   மா.நேருதாசு ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் முடிவின்படி 9.3.2020 திங்கள் அன்று  கோவை  மாவட்டத்தில் சில அரசு பள்ளிகளில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட குழந்தைகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கும் ஜாதிய தீண்டாமை  கொடுமைக்கு துறை ரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுப்பதை கண்டித்து உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மனுவை அளித்தோம். அப்போது மாவட்ட ஆட்சியர் ராஜாமணி  பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார். அப்போது தோழர்கள் இன்றைய இந்திய சமூக சூழலில் குறிப்பாக கிராமத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதி ரீதியாக பாதிக்கப்படும் போது தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் புகார் அளிக்க வருவது என்பது நடைமுறை யதார்த்தத்தில் சாத்தியமில்லை. பாதிக்கப்பட்ட உடன் புகார் கொடுத்தார்கள் அதற்கு அந்தப்  புகாரின் மீது இப்போது வரை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் நீங்கள் எடுக்கும் துறைரீதியான நடவடிக்கை மீண்டும் மீண்டும் இந்த ஜாதிய தீண்டாமைக் கொடுமை பள்ளிகளில்  தொடர்வதை ஆதரிப்பதாகவே தான் எங்களால் பார்க்க முடிகிறது என்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கருத்தை முன்வைத்தார்கள். நிகழ்வில் தோழர்கள்  சூலூர் பன்னீர் செல்வம், நேரு தாஸ்,  நிர்மல்குமார், வெங்கட், கிருஷ்ணன், இயல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 12032020 இதழ்

You may also like...