ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி – பி.எஸ். கிருஷ்ணன்

இந்திய சமூகத்தில் ஒடுக்கப்படுகிற மக்களுக்கான இணையற்ற போராளி பி.எஸ்.கிருஷ்ணன். 1956-ல் ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தில் பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசின் செயலர் முதற்கொண்ட பல பதவிகளில் பணியாற்றியபோதும், ஓய்வு பெற்ற பின் மறையும் வரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்தவர். பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், அந்த சமூகங்களுக் குட்பட்ட மதச் சிறுபான்மையினரின் முன்னேற்றத் துக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர்.

இந்திய அரசு அதிகாரிகளில் பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வும் பணியும் அரிதினும் அரியவை. பார்ப்பன சமூகத்தில் பிறந்த அவர், சாதிகளை மேலிருந்து கீழ் நோக்கி அடுக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தன்னை உறுதியான சிப்பாயாக இணைத்துக் கொண்டார். எல்லாச் சமூகங்களும் சம இடம் நோக்கி நகர கீழேயுள்ள சமூகங்கள் மேல் நோக்கி வருவதற்கான இடங்களை உருவாக்குவதும் அதற்கான தடைகளை உடைப்பதும் முக்கியம் என்று கருதிச் செயல்பட்டார்.

“சாதி அமைப்பு இந்தியக் கலாச்சாரத்தின் கொடிய குற்றம்” என்பது அவரது அடிப்படைக் கருத்து. சமூகநீதி, தீண்டாமை, சாதிய அமைப்புக்கு எதிரான கடும் எதிர்ப்பு என்ற சமரசமற்ற சித்தாந் தத்துடன்தான் ஆட்சிப் பணியில் நுழைந்ததாகக் கூறியிருக்கிறார். அம்பேத்கர், காந்தி, நாராயண குரு, விவேகானந்தர், பெரியார், மார்க்ஸின் சித்தாந்தகளி லிருந்து வடித்தெடுத்ததுதான் தனது சித்தாந்தம் என்பார்.

உள்ளிருந்தே எதிர்த்தவர்

அரசையும் நிர்வாக இயந்திரத்தையும் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் போய்ச்சேர்கிற, செயலூக்கமுள்ள கருவியாக மாற்றுவதற்கு அவர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். சாதி – வர்க்க சமூகத்தின் கட்டமைப்பையும், இந்த அநீதியான அமைப்பை எவ்வாறு அரசாங்கங்கள் பாதுகாக்கின்றன என்பதையும், இந்த அமைப்புக்குள் பணியாற்றிக் கொண்டே எப்படி அவற்றை எதிர் கொள்வது என்பதையும் தன் பணிக்காலத்தின் பெரும் பாடமாக அளித்திருக்கிறார்.

ஜனநாயகத்தின் காவலர்களாகப் பணியாற்ற வேண்டியவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான நிர்வாக அறத்தை அவர் மற்றவர் களுக்கு வழங்கினார். அவர் கைகொண்ட புதுமையான நிர்வாக முறைகளும், புரையோடிப் போன சமூக அமைப்பின் மீதான தாக்குதலும் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு உள்ளாகின. மேலதிகாரி களால் பல முறை கிருஷ்ணன் பழிவாங்கப்பட்டார். பந்தாடப்பட்டார்.

இளம் ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திரப் பிரதேசத்தில் பணிபுரிந்தபோது, 1957-லேயே பட்டியலின மக்களின் சேரிகள், பழங்குடியினர் கிராமங்கள், பின்தங்கிய உழைப்போர் வசிக்கும் பகுதிகளில் அரசாங்க முகாம்களை நடத்தினார்; அதன் மூலம் இத்தகைய ஒடுக்கப்பட்டோருக்குத் தன்னம்பிக்கையும் கௌரவமும் அளித்தார். நிலமற்றவருக்கும் வீடற்றவருக்கும் விளை நிலங் களையும் வீட்டுமனைகளையும் விநியோகிக்கும் பிரம்மாண்டத் திட்டங்களைத் தொடங்கி நிறைவேற்றினார். இவையெல்லாம் ஆந்திரப் பிரதேச நிர்வாகத்தில் முக்கியமான மைல்கற்கள்.

ஒடுக்கப்பட்ட சாதியினரின் முழுமையான வளர்ச்சிக்கு இவர்களையெல்லாம் சமூகரீதியாக முன்னேறிய சாதிகளின் தற்போதைய வளர்ச்சிக்கு நிகராக உயர்த்த வேண்டும். அதை நிறைவேற்ற ஒருங்கிணைந்த சட்ட திட்டங்கள் தேவை. குறிப்பாக, தலித் மக்களுக்கான சிறப்புக்கூறு திட்டத்துக்கும், பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டத்துக்கும் தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அவற்றை அமலாக்குவதற்கான அதிகார நிறுவனங்களை அமைக்க வேண்டும். அத்தகைய பணிகளைச் செய்வதற்கான ஒரு செயல் திட்டத்தை கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். தனது இளைய கூட்டாளி களோடும் சமூக ஊழியர்களோடும் இணைந்து இந்தச் செயல் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தார்.

கிருஷ்ணனின் பெருங்கனவுகள்

பல சட்டங்களும், அரசியல் சாசனத் திருத்தங் களும் கிருஷ்ணனின் கனவில் உதித்து, கரங்களில் வடிவம் பெற்றவை. அப்பட்டியல் நீளமானது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்க வழி வகுக்கும் 65 ஆவது அரசியல் சாசனத் திருத்த சட்டம் – 1990, புத்த மதத்தில் இணைந்த தலித் துகளைப் பட்டியல் சாதி யினர் என்று அங்கீகரிப் பதற்கான சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் – 1989, பிறகு அதன் திருத்தச் சட்டம் 2015, மனித கழிவகற்று வோரைப் பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் 1993, பிறகு அதன் மேம்பட்ட வடிவமான அவர்களின் மறு வாழ்வுக்கான சட்டம் 2013 என அது நீள்கிறது.

பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் 1978, மாநிலங்களின் சிறப்பு உட்கூறுத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, மாநிலங்களின் பட்டியல் சாதியினர் வளர்ச்சி கார்ப்பரேஷனுக்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டம் போன்ற பல திட்டங்களின் கர்த்தாவும் அவரே.

நீதிமன்றத்திலும் அவரது பணி தொடர்ந்தது. மத்திய நல்வாழ்வுத் துறையின் செயலாளராக 1990-ல் பணியாற்றியபோது ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டுவந்த தேசிய அளவிலான அங்கீகாரத்தையும் இடஒதுக்கீட்டை யும் வழங்க வேண்டும் என்று அவர் மத்திய அரசை அறிவுறுத்தி இணங்க வைத்தார்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றும் அந்தத் திட்டத்தை வி.பி.சிங் அரசு கொண்டுவந்ததன் பின்னணியில் அவரது அபார முயற்சிகள் இருந்தன. அந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டன. அதைப் பாதுகாப்பதற்கான முக்கியமான அடிப்படைகளை அமைத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வாதத்தை வெற்றி பெற வைத்தார். இடஒதுக்கீட்டுக்கான சட்டரீதியான அடித்தளத்தை இதன் மூலம் உருவாக்கினார்.

கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது அதை எதிர்த்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்தன. அப்போது மத்திய அரசு 2006இல் பி.எஸ்.கிருஷ்ணனின் உதவியை நாடியது. அவரது பணிகளின் மூலமாக அந்த இட ஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசன ரீதியான அடிப்படை இருக்கிறது என்று 2008இல் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.

இஸ்லாமியர்களில் சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை இனம் கண்டறிவதற்கான ஆலோசகராகப் பணியாற்ற வேண்டுமென ஆந்திர அரசு அவரை 2007இல் கேட்டுக்கொண்டது. அவரது அறிவியல்பூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு 4ரூ இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆந்திர அரசு இயற்றியது. அச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் ஆந்திராவின் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நடந்தபோது அவற்றை எதிர்கொண்டு ஆந்திராவின் சட்டத்தை வெற்றிபெற வைக்கும் பணிகளையும் அவர் செய்தார்.

வர்ண-வர்க்க சங்கமம்

இந்திய சமூகத்தின் ஆதார அமைப்பு வர்ணமா, வர்க்கமா என்ற விவாதங்களைத் தாண்டி வர வேண்டும் என்று கருதினார். மார்க்ஸியமும் தலித்தியமும் சங்கமிக்க வேண்டும் என்றார். வர்ண-வர்க்க அடித்தட்டினரை இணைக்கும் முயற்சிகள் தொடங்க வேண்டும் என்றார். பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் நிலமற்ற விவசாயிகளும், ஏராளமான கைவினைஞர், சேவை சாதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களையும் தலித்துகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அதுவே வர்ண-வர்க்க சங்கமமாகும்.

இந்த இணைப்பு நிலமற்ற அனைவருக்குமான நில விநியோகத்துடன் தொடங்க வேண்டும் என்று கருதினார்.

சமூகநீதி குறித்த நூல்கள், ஆவணங்கள், கட்டுரைகள், வரைவுகள் பல அவர் எழுதியுள்ளார். எண்பது வயதைத் தாண்டிய பிறகும், தனது இளைய தலைமுறை நண்பர்களுடனும் சமூக ஊழியர்களோ டும் இணைந்து கடுமையாகப் பணியாற்றி வந்தார்.

அதற்காக இறுதி வரை நாடு முழுதும் பயணித்து வந்தார். நீதியின் மீதும், மனித உரிமைகள் மீதும், இந்திய அரசியல் சாசனத்தின் லட்சியக் கண்ணோட் டத்தின் மீதும், அனைத்து இந்தியர்களின் சமூக ரீதியான, பொருளாதாரரீதியான முன்னேற்றத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கிருஷ்ணனின் மறைவு ஈடு செய்யவியலா இழப்பு. அவரது இலட் சியங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது தான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

– வே.வசந்தி தேவி

முன்னாள் துணைவேந்தர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

(‘தமிழ் இந்து’ ஏட்டில் எழுதிய கட்டுரை)

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...