‘ஜெய் பீம்; ஜெய் பெரியார்’ முழக்கங்களுடன் பெங்களூரில் சுயமரியாதைத் திருமணம்

7.12.2019 சனிக்கிழமை அன்று பெங்களூர் ‘கற்பி, ஒன்று சேர்’ அமைப்பின் ஏற்பாட்டில், பெங்களூர் சேஷாத்திரிபுரம் ஏ.வி. வரதாச்சாரி நினைவு அரங்கில் வேலூர், அங்கராங்குப்பம், கலா-கோவிந்தன் இணையரின் மகன் சிவக்குமார் – திருவள்ளூர் மாவட்டம் மாலம்மாள்-ஆனந்தன் இணையரின் மகள் அன்னபூரணேசுவரி ஆகியோரின் ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தார். அன்று காலை 11 மணியளவில் பகுத்தறிவு, ஜாதியொழிப்பு இன்னிசை நிகழ்வோடு நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை ஹெப்பால் பழங்குடி மக்களின் கலை நிகழ்வு, ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறையிசை நடந்தது. நண்பகல் உணவுக்குப் பின்னர் நாத்திகனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ நிகழ்ச்சி நடந்தது.

பிற்பகல் 4.30 மணியளவில் கழகத் தலைவர் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா தொடங்கியது. விழாவின் தொடக்க உரையை மைசூர் உரிலிங்கப்பட்டி மடத்தின் அருட்திரு ஞானப் பிரகாச சாமிகள் ஆற்றினார். தனது உரையில் பார்ப்பனர்களையும், சமஸ்கிருத மந்திரங்களையும் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதை மிக விளக்கமாக எடுத்துரைத்தார். தத்துவ இயலில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்ற அவர், சமஸ்கிருத மந்திரங்களின் இழிவான பொருளினை விரிவாக விளக்கினார். அழைப்பிதழில் போட்டிருந்த கடவுள் மறுப்பு வாசகங்களைப் படித்துக் காட்டி, இம்முழக்கங்களை பசவப்பரின் வசனங்களுடன் பொருத்திக் காட்டியதோடு, ஜெய்பீம், ஜெய் பெரியார் என்ற முழக்கங்களே நம் உணர்வுகளை வெளிப்படுத்தும்; பார்ப்பனிய மேலாண்மையை வீழ்த்தும் என்று விளக்கி, ஜெய் பீம், ஜெய் பெரியார் என்ற முழக்கங்களோடு தனது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் முனைவர் சமதா தேஷ்மானே, பெரியாரியர் கலைச் செல்வி, தலித் சமரசேனைத் தலைவர் கணேஷ் கொலகெரி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலன், கற்பி, ஒன்றுசேர் அமைப்புத் தலைவர் ஜார்ஜ், தலித் சங்கத் சமிதியின் மாநிலத் தலைவர் எம்.சி. நாராயணன் ஆகியோரின் வாழ்த்துரை, விளக்கவுரையைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதைத் திருமணத்தை ஏன் பெரியார் அறிமுகப்படுத்தினார் என்பதை விளக்கி உரையாற்றிய பின்னர் வாழ்க்கைத் துணை ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறச் செய்து நிறைவு செய்தார். விழாவின்போது சுயமரியாதைத் திருமணம் குறித்த பெரியாரின் உரை, பக்தர்களுக்கு நூறு கேள்விகள் ஆகியவை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவ்விரு நூல்களும் விழாவுக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 12122019 இதழ்

You may also like...