இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கும், மோடி ஆட்சி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஷிப்பிங் கார்ப்பரேசன், கன்டெய்னர் கார்ப்பரேசன், தெரி நீர்மின் உற்பத்தி கார்ப்பரேசன், வடகிழக்கு மின்சக்தி கார்ப்பரேசன் ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க முடிவெடுத் துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இவையனைத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள்.  மத்திய அரசு எதிர் கொள்ளும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப் பதற்காகத் தான் இந்த முடிவு என்கிறார் அமைச்சர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை பொதுத்துறை நிறுவனங்கள். அவற்றைத்  தனியாருக்கு விற்பது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே பாதிக்கப்படுவதில் போய்த்தான் முடியும்.

வளர்ச்சியின் அடித்தளம்

பொதுவாக கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு, எரிவாயு, உருக்கு, மின்சாரம், நிலக்கரி, சிமெண்ட், உரம் ஆகிய 8 தொ ழில்களை பொருளாதாரத்தின் முதன்மையான தொழில்கள் என்று அரசு அடையாளப்படுத்துகிறது. இதன் பொருள்,  ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சிக்கு இவை அடிப்படையானவை என்பதே.  இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள்தான் கடந்த 72 ஆண்டுகளில் நமது தேசம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகின்றன.  தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந் நிறுவனங்கள் வரியாக, ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் செலுத்தி உள்ளன. இம்மாதிரியான பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனி யாருக்கு விற்கக்கூடாது. அப்படி விற்பது விதைநெல்லை வீசியெறியும் விபரீதமன்றி வேறென்ன?

நட்டத்தில் இயங்குபவை அல்ல!

மேற்கண்ட பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குபவை அல்ல. இவை யனைத்துமே இலாபமீட்டி வருபவை.  பாரத் பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் கடந்தாண்டு வருமானம் ரூ.3,37,622 கோடி. இலாபம் மட்டும் ரூ.11,964 கோடி. (மத்திய அரசுக்கு செலுத்திய வரி மட்டும் ரூ.40,347 கோடி).

கன்டெய்னர் கார்ப்பரேசன் நிறுவனத்தின் வருவாய் ரூ.7,214 கோடி. இலாபம் ரூ.1,789 கோடி.

ஷிப்பிங் கார்ப்பரேசன் நிறுவனத்தின் கடந்தாண்டு வருமானம் ரூ. 4,144 கோடி. இலாபம் மட்டும் ரூ.611.24 கோடி.

வடகிழக்கு மின்சக்தி நிறுவனத்தின் கடந்தாண்டு வருவாய் ரூ.1,632 கோடி. இலாபம் ரூ. 293 கோடி.

தெரி நீர் மின் உற்பத்தி நிறுவனத்தின் கடந்தாண்டு வருவாய் ரூ. 272.8 கோடி. இலாபம் ரூ.77.1 கோடி.

இவ்வாறு அரசின் வருவாய்க்கும்,நாட்டின் பொருளா தாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்குகிற இத்தகைய பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது பொருளாதார வளர்ச்சியை கடுமையாக முடக்கிவிடும்.

பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி

சுதந்திரமடைந்த 1947இல் இந்தியாவினுடைய பெட்ரோலிய பொருட்களின் தேவை 27.2 இலட்சம் டன். இந்தத் தேவை பெரும் பான்மையாக இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்பட்டது. காரணம் அன்றைய உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் 3 இலட்சம் டன் மட்டுமே. அப்போது பெட்ரோலியத்தொழில் முழுக்க முழுக்க பர்மா ஷெல், இஎஸ்எஸ்ஓ, கால்டெக்ஸ் ஆகிய மூன்று வெளிநாட்டுப் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.  எண்ணெய், எரிவாயு  உற்பத்திக்காக  பல பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்கிய பிறகோ நிலைமை முற்றிலும் மாறியது.

தற்போது இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.20 கோடி டன். இதில் 2.29 கோடி டன் அளவுக்குப் பொ துத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்வது 90.6 இலட்சம் டன் மட்டுமே.  இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் 14.88 கோடி டன் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு; 9.6 கோடி டன் தனியார் நிறுவனங்களின் பங்கு.  எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் எரிசக்திதான் தொழில், விவசாயம், சேவைத்துறை, ஏன் இந்திய பொருளா தாரத்திற்கே ரத்த நாளமாக விளங்கியது, விளங்கி வருகிறது.

தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக…

கச்சா எண்ணெய் உற்பத்திக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் ஆய்வு செய்து எண்ணெய் படுகைகளைக் கண்டுபிடித்து 48 எண்ணெய் கிணறுகளை  அமைத்தது. ஆனால், அந்தக் கிணறுகள் அனைத்தையும் மத்திய அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டுத் தனியார் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்து விட்டது. மேலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தினுடைய ரூ.40,000 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகள் அனைத்தையும் ஓஎன்ஜிசி நிறுவனம் வாங்கிக் கொள்ள மத்திய அரசு கட்டளையிட்டது. இதனால் மத்திய அரசுக்கு ரூ. 40,000 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனம் வேறு பல பகுதிகளில் எண்ணெய் எரிவாயு பணிகளை  விரிவாக்கம் செய்ய முடியாமல் நெருக்கடிக்கு உள்ளானது. இந்த நெருக்கடியைச் சாக்கிட்டுத் தனியார் வந்து புகுவதற்கு வழி செய்யப்படும் என்று விளக்கத் தேவையில்லை.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உள்நாட்டு, வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சாதகமான கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிற போதிலும், இந்தியாவினுடைய பெட்ரோலிய பொருட்களின் தேவையை கணிசமான அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களே பூர்த்தி செய்து வருகின்றன. குறிப்பாக  பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 2.75 கோடி டன் சுத்திகரிப்பு செய்கிறது. மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வரி செலுத்துவதோடு, ரூ. 11 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டித் தருகிறது. இந்த நிறுவனத்தை முழுவதுமாக தனியாருக்கு விற்றுத் தன்னுடைய நிதி நெருக்கடியை ஈடுகட்டப் போவதாக மத்திய அரசு கூறுவதை என்னவென்பது? இதனுடன் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்துஸ்தான் பாரத் எண்ணெய் நிறுவனத்தினுடைய பங்குகளை வாங்கியது ஓஎன்ஜிசி;  தற்போது அப்பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட மத்திய அரசு நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தையும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி விட்டால் பொதுத்துறை நிறுவனங்களை விட ரிலையன்ஸ் நிறுவனம் கூடுதலாக எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் வாய்ப்பு உருவாகும். இது எதிர்காலத்தில் எண்ணெய் விலையை ரிலையன்ஸ் கம்பெனி தீர்மா னிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆபத்து உருவாகும்.

நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் முடிய மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.47 லட்சம் கோடி.  பற்றாக் குறையைப் போக்க ரிசர்வ் வங்கியை வற்புறுத்தி ரூ. 1.76 லட்சம் கோடி மத்திய அரசு பெற்ற கதை நமக்குத்தெரி யும். அதேவேளையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச் சலுகையை இதே அரசு அளித்தது. ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக்கடனை ரத்து செய்து சலுகையளித்ததையும் அனைவரும் அறிவோம். மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வெட்டி சுருக்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கோடி கோடியாய் சலுகை அளித்து இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை பொதுத்துறை நிறுவனங்க ளை விற்பதன் மூலம் ஈடுசெய்ய மத்திய அரசு முடி வெடுத்துள்ளது.

1991ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் ஆட்சியாளர்களும், பாஜக ஆட்சியாளர்களும்  மத்திய அரசின் நிதிப் பற்றாக் குறையை போக்குவதற்காக என பொதுத்துறைப் பங்குகளை விற்று வந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியாவது நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை முற்றாக விற்பனை செய்தது. பாஜக அரசோ கோடி கோடியாய் இலாபமீட்டித் தருகிற பொதுத்துறை நிறுவனங்களையே விற்று வருகிறது.

நன்றி: ‘தீக்கதிர்’

பெரியார் முழக்கம் 05122019 இதழ்

You may also like...