பெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும் – முனைவர் இந்திரா

அனைத்து சமயங்களுமே பெண்களுக்கு எக்காலத்திலும் எதிரானவையே என்பது தெளிவான ஒன்று. சமயங்கள் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப் பட்டதோ அதைச் செய்யாமல் பெண்களை அடிமை செய்வதையும் அடக்குதலையுமே காலம் காலமாக செய்து கொண்டிருக்கின்றன.

பெண்களை மையமாகக் கொண்டே அனைத்து அடிமைச் சடங்கு களையும் சமயம் என்ற ஆணாதிக்க உணர்வு ஏற்படுத்தி இதன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டதோடு இன்றளவும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. எனவேதான் பெரியார் சமயம் என்பது மிகப் பொய் கற்பனை என்றும், முழுப்பொய் என்றும் மக்களை குறிப்பாக பெண்களை ஏமாற்றுவதற்காவே ஏற்படுத்தப்பட்டதென்றும் கூறுகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை பெண்கள் என்றாலே மென்மை யானவள் என்ற கருத்து நிலவுகின்றது.  அவள் இயல்பாகவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களை உடையவள் என்று கூறப்படுகிறது.

‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’                 – (களவு 8)

என்று தொல்காப்பியார் கூறுகின்றார். இவ்வியல்புகளை உடையவராக பெண்கள் இருப்பதால்தான் தலைவி தன் காதலைத் தலைவனிடம் நேரடியாகக் கூற இயலாதவளாக இருக்கின்றாள் எனத் தெரிகிறது.  ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருக்கவில்லை எனத் தெரிகிறது.

பெண் கொடுமையைப் பதிவு செய்யும் சமய இலக்கியங்கள்:

இதிகாச காலகட்டத்திலேயே பெண்களின் பெருமை சிதைக்கபட்ட வரலாறும் தொடங்கி விட்டது. இந்திய நாட்டு சமய இலக்கியங்கள் அனைத்துமே பெண்களின் கண்ணீர் காவியங்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.  இந்தியாவின் மாபெரும் இதிகாசமான இராமாயணமும் மகா பாரதமும் கணவன் எவ்வளவு தான் தீங்கிழைத் தாலும் அதை பொறுமையுடன் சகிப்பதுதான் இறை பக்திக்கு நெருக்கம் என்று போதித்துள்ளன.  இராவணன் கொல்லப்பட்டவுடன்  சீதை தீக்குளித்து தனது தூய்மையை நிலைநாட்ட வேண்டியிருந்தது.  அப்படியும் பின்னர் அவள் காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள் என்று உத்தர இராமயணம் விவரிக்கிறது.  இராமாயணத் தின் ஆரண்யகாண்டம் 13.5.6 இல் ‘உலகம் தோன்றுவது முதல் பெண்கள் தாமரைஇலையில் தண்ணீர் போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையு டையவர்கள்’ என்று பெண்மையை இழிவுபடுத் துவதை இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்ததை கண்கூடாகக் காணமுடிகிறது. பஞ்சபாண்டவர்களுக்கு மனைவியாக இருந்த திரௌபதியை ஈடாக வைத்து பகடையாடப்பட்டதால் அவள் தனது ஆடையை துச்சாதனன் பிடித்திழுக்க அவையோர் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டாள்.

இராமாயணமும் மகாபாரதமும் அக்காலங் களில் பல ஆண்கள் ஏராளமான பெண்களை மணந்தனர் என்று விவரிக்கின்றன.  இதனால் தான் பெண்களின் பெருமை குறையத் தொடங்கியது. ஏமாற்றப்பட்டதால் தான் அகலிகை இந்திரனிடம் தன்னை இழந்தாள் என்ற உண்மையை உணர்ந் தும்கூட அவளது கணவன் கவுதம முனிவன் அவளைக் கல்லாகும்படிச் சபித்தார்.

பாகவத ஸ்கந்தம் 4-14-42-8-4.36 இல் ‘ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர் களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்’ என்று அவலப் படுத்துவதிலிருந்து பெண்கள் மீதான வெறுப்பை உணரமுடிகிறது.

இத்துடன் மனுதர்மமும் பெண்களைப் பற்றிய மிகமோசமான கருத்துகளைக் கூறத் தயங்கவில்லை. மனு 2.213 இல் இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள் என்று கூறுவதிலிருந்து பெண் ஒரு போகப் பொருளாக இருந்த நிலையை அறிய முடிகிறது.  படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும் (மனு 9:16) என்பதிலிருந்து அன்றைய நிலையில் பெண்கள் எந்தவித அளவிற்கு மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என உணர இயலுகிறது.  இப்படிப்பட்ட மனுதர்ம நூலை அம்பேத்கர் அவர்கள் வீதியிலிட்டு எரித்த செயல் மிகச் சரியான ஒன்றாகும்.

அனைத்துச் சமயங்களிலும் பெண்களின் நிலை:

இவ்வாறாக மகாபாரத காலம் தொடங்கி சிறுமைப் படுத்தப்படுவது பொறுக்க முடியாத அளவிற்குப் போனதால்தான் பல இந்துப் பெண்கள் பௌத்த மதத்திலோ சமண மதத்திலோ தங்களை இணைத்துக் கொண்டு பிக்குணி களாகவும் மாறத்தலைப்பட்டனர்.  அதனால் தான் புத்தரின் முக்கிய சீடர்களில் பெண்களும் இருந் தனர்.  அதேபோல் மகாவீரரின் சீடர்களாகவும் துறவிகளாகவும் பெண்கள் மாறினர்.

வேதகாலப் பெண்களுக்கு தங்கள் கணவர்களைத் தேடிக்கொள்ள கிடைத்த உரிமை பின்னர் வந்த பெண்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மையாகும்.  அடுத்து வந்த காலக்கட்டங்களில் பெண்கள் தங்களது குடும் பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகவே இருந்தனர், இருக்கின்றனர்.  ஆண்கள் மட்டும் பல துணைவியரை மணந்துகொள்ள இந்திய சமூகம் அனுமதித்தது; அனுமதிக்கிறது. தன் மனைவியை யும் பக்திக்காக விட்டுக் கொடுத்த நிலையை இந்து தர்மத்தில்தான் காண இயலுகிறது.  இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம்.  உடனே மனைவியை அவர் விட்டுக் கொடுத்து விட்டாராம்.  பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க தனது மனைவியை வெட்டிச் சாய்த்தார்.  உடனே பரமசிவன் இயற்பகை நாயனாரின் பக்தியை மெச்சி அவரை தன்னுடன் மோட்சத்துக்கு அழைத்துச் சென்ற புராணக் கதையில் பெண்ணின் நிலை எவ்வளவு இழிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆழ்வார் வீட்டில் ஒரு வைணவ பக்தன் உணவருந்த சென்றான்.  உணவு சமைக்க பொருள் இல்லாத நிலையில் கடையில் கடன் உதவி கேட்க, அவன்- இவன் மனைவியைக் கேட்டான்.  ஆழ்வாரும் தன் மனைவியை விட்டுக் கொடுத்து விருந்து வைத்த நிகழ்ச்சியில் பெண் எவ்வித முடிவு எடுக்கும் சுதந்திரமின்றி அடிமையாக  இருந்த நிலை தெரிய வருகிறது.

வடஇந்தியாவில் நிகழ்ந்த இசுலாமியர் களின் ஆக்கிரமிப்பு காரணமாக முசுலீம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் பர்தா அணியத் தொடங்கினர்.  இன்றும் அந்த மரபு தொடர்கிறது. வீட்டை விட்டு வெளியே காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் நாட்டியக்காரிகளாகவும் வேசைகளாகவுமே கருதப்பட்ட காலகட்டமே முகலாயர்களின் ஆட்சிக்காலம்.  அவர்களால் தோற்கடிக்கப்பட்ட இராசபுதன மன்னர்களின் மனைவிகளெல்லாம் எங்கே மாட்டிக் கொண்டால் தாம் சீரழிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவே கணவனின் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறினராம். மீரா போன்ற பக்தைக்கு தான் விரும்பிய பகவான் கிருஷ்ணனை தொழக்கூட அனுமதி கிடைக்கவில்லை.

பெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்:

இதுவரை நோக்கிய நிகழ்வுகளிலிருந்து சமயமானது எந்த அளவிற்கு பெண்களை அடிமைப்படுத்தியும் கற்பு என்ற போர்வையைத் திணித்தும் இருந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. தந்தைபெரியார் அவர்களும் இதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தொடர்புடையதல்ல என்பதும் ஆரியமொழியில் கற்பு என்ற சொல்லிற்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப் படுகிறது என்பதும் பெரியாரின் கருத்தாகும். இந்துசமயம் கற்பு என்பதற்கு பெண் என்பவள் பதியைக் கடவுளாகக் கொண்டவள். பதிக்கு அடிமையாக இருப்பதையே விரதமாகக் கொண்டவள். பதியைத் தவிர வேறு யாரையும் கருதாதவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன் பதி என்ற வார்த்தைக்கு அதிகாரம், எசமான், தலைவன் என்கின்ற பொருள் இருப்பதால் அடிமைத் தன்மையை புலப்படுத்துகின்றது.

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது சமயங்கள் எந்த வொரு வார்த்தையையும் அடையாளத்தையும் குறிப்பிடவில்லை. இதற்கு ஆணாதிக்கமே காரணமாகும். அதனால் தான் பெரியார் கூறுகிறார், ‘ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும்  ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்று வதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது ஓநாய்களால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர் களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பன ரல்லாதவர்களுக்கும் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்” என்று.

இந்துமதத்தில் அறுபதாயிரம் பெண்கள் வரையிலும், இஸ்லாமிய மதத்தில் நான்கு பெண்கள் வரையிலும் கிறித்துவ மதத்தில் எவ்வளவு பெண்களை மணம் செய்து கொள்ள முடியுமோ அதுவரையிலும் மணம் செய்து கொள்ளலாம் என்று காணப்படும் நிலை அனைத்து சமயங்களுமே பெண்களை இழிவு படுத்துவதையே குறிக்கோளாகக் கொண் டுள்ளதைத் தெளிவாக அறிய முடிகிறது.

பொதுவாகவே சமயம் மனிதனின் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.  குறிப்பாக பெண்களின் முன்னேற்றத் திற்கு எதிராவுள்ளது. சமயத்தினால் உண்டாகின்ற சமுதாய இழிவுகளைப் போக்கப் பெரியார், மக்களுக்குப் பகுத்தறிவு விளக்கங்களைக் கொடுத்தார். சமயம் என்பது மக்களின் கூட்டு வாழ்க்கைக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டுமேயொழிய தடையான ஒன்றாக இருக்கிறது.  எனவே அனைவரின் அமைதியான வாழ்க்கைக்குச் சமயத்தின் ஆதிக்கம் இல்லாத ஓர் உலகத்தை படைக்கவே பெரியார் விரும்பினார்.  பெரியாரின் பகுத்தறிவு ஒளியில் தாழ்ந்த தமிழகம் பெண்ணடிமையை ஒழித்த லிலும் பெண் முன்னேற்றத்திலும் தலை நிமிர்ந்து நின்றது, நிற்கின்றது.

கட்டுரையாளர் : பூம்புகார் கல்லூரியில் பேராசிரியர்

பார்வை நூல்கள்:

  1. பெண் ஏன் அடிமையானாள்? –தந்தைபெரியார் எதிர் வெளியீடு பொள்ளாச்சி.
  2. பெரியார் ஈ.வெ.ரா- ஆறு அழகப்பன் சாகித்திய அகாதெமி சென்னை.
  3. விடுதலை – தந்தை பெரியார்
  4. தமிழ்க் கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம் – சே. இராசேந்திரன், பூமணி பதிப்பகம், சென்னை.
  5. அம்பேத்கர் இன்றும் என்றும் – விடியல் பதிப்பகம், கோவை.

நிமிர்வோம் நவம்பர் 2019 மாத இதழ்

You may also like...