பார்ப்பனர்கள் வன்முறைப் பேச்சுகள்: அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்தோடு இரு பிரிவினருக்கு மிடையே மோதலையும் பதற்றத்தையும் உருவாக்கிடும் கருத்துகளைத் தெரிவித்த பார்ப்பனர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில் 22.11.2019 அன்று நடந்த சென்னை செய்தியாளர் சந்திப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார். புகார்கள் தரப்பட்டு வழக்குப் பதிவு செய்த பிறகும் கைது செய்யப்படாததோடு, புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுப்பதையும் பேட்டியில் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். பேட்டி விவரம்:

“கேரளாவில் நடந்த பிராமணர் உலக மாநாட்டில் பேசிய வெங்கடகிருஷ்ணன் என்ற பேராசிரியர் ஜாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தியதோடு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை நாயுடன் ஒப்பிட்டும் பேசினார். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில்  அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகை திருவள்ளுவன் நேரில் காவல்துறையிடம் புகார் அளித்தார். 153ஏ, 153பி, 5.5ஏ, 5.5பி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. கைது செய்திருக்க வேண்டும். ஆனால் கைது செய்யவில்லை. அய்.அய்.டி.யில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா என்ற இஸ்லாமிய மாணவி, தனது தற்கொலைக்குக் காரணம் சுதர்சன பத்மநாபன் என்று மரண வாக்குமூலம் போல தனது கைபேசியில் பதிவு செய்த பிறகும் அவரை கைது செய்யவில்லை. வழக்குப் பதிவு செய்வதற்குக்கூட காலம் கடத்துகிறார்கள்.  உள்துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்தவரை  சுவர் ஏறிக் குதித்து கைது செய்யும்போது, இவர்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை!

கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்துப் பேசிய கருத்துக்காக எச். ராஜா, வைரமுத்து பிறப்பையே கேள்விக் கேட்டுப் பேசினார். நாங்கள் ஆண்டாள் குறித்து கொளத்தூரில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்தோம். கருத்தரங்கு நடப்பதற்கு முந்தைய நாள் அதைக் குறிப்பிட்டு எங்களுக்கும் சோடா புட்டி வீசத் தெரியும்; சைக்கிள் செயினை சுழற்றத் தெரியும் என்று மன்னார்குடி ஜீயர் வன்முறையைத் தூண்டி விட்டார். காவல்நிலையத்தில் புகார் தந்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களில் 30 சதவீதம் பேர் தான் ஒழுக்கமானவர்கள் என்று பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார் தந்தும் நடவடிக்கை இல்லை. காயத்ரி ரகுராம் என்ற நடிகை, ‘சேரி கலாச்சாரம்’ என பேசிய பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. காஞ்சி விஜயேந்திரன், தமிழ்த் தேசிய நாட்டுப் பண் தமிழ் வாழ்த்துப் போடும்போது எழுந்து நிற்க மறுத்தார். ‘தேசிய கீதம்’ பாடும்போது எழுந்து நிற்கவில்லை என்றால் தேசிய அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது விஜயேந்திரன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மக்கள் மதிக்கக்கூடிய அரசியல் தலைவர் திருமாவளவன், இந்துக் கடவுள்களைப் கேவலப்படுத்தி விட்டதாக அர்ஜுன் சம்பத் கூறினால் உடனே காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. இந்து மதத்தின் பெயரால் கட்சி நடத்துகிறவர்கள் இந்து மதம் என்ன கூறுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு கட்சி நடத்த வேண்டும். அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரி எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்தாவது புரிந்து கொள்ள வேண்டும். ‘சூத்திரன்’ என்று மனு சாஸ்திரம் இழிவு படுத்தியது. இது பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்னவென்றால் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்பதுதான்.

பார்ப்பனர் என்றால் எதை வேண்டு மானாலும் பேசலாம். அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதுபோல் செயல்படுவதை பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. புகார் தரப்பட்டவர்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கொளத்தூர் மணி கூறினார்.

பேட்டியின்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன் ஆகியோர் உடனிருந்தார்.

பெரியார் முழக்கம் 28112019 இதழ்

You may also like...