தமிழர் – சிங்களர் முரண்பாடு கூர்மையடைகிறது இலங்கை தேர்தல் முடிவுகள்: உணர்த்தும் உண்மைகள்

இலங்கை தேர்தலில் சிங்கள பெரும் பான்மையே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராஜபக்சேயின் சகோதரர் இவர். இலங்கை அரசியல் சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் போட்டியிட முடியாது என்பதால் அவர் சார்பாக அவரது தம்பி நிறுத்தப்பட்டார்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்திய இராணுவம் அங்கே அமைதிப் படை என்ற பெயரில் சென்றபோது இந்திய இராணுவத்தை வெளியேற உத்தரவிட்டவர் அப்போது ஜெயவர்த்தனேயைத் தொடர்ந்து அதிபரான பிரேமதாசா. பிரேமதாசா விடுதலைப் புலிகள் ஒப்பந்தம் ஒன்றும் அப்போது உருவானது. சில மாதங்களில் பிரேமதாசா குண்டு வெடிப்பில் பலியானார். இலங்கையில் இப்போது ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். வடக்கு – கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களும் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்து, கோத்தபய ராஜபக்சேவை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகம் வாழும் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 90 சதவீத வாக்குகள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகவே விழுந்தன (41.99 சதவீதம்). சிங்களர் பகுதியில் வாக்குகள் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவாகவே விழுந்தன. 10 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் கோத்தபய ராஜபக்சே.

ராஜபக்சே அதிபராக இருந்தபோதுதான் தமிழர்கள் மீதான இறுதிக்கட்ட இனப்படுகொலை 2009 மே மாதம் நடந்தது. அப்போது இராணுவத் துறை செயலாளராக இருந்தவர் கோத்தபய ராஜபக்சே. சர்வதேச சட்டங்களை காலில் போட்டு மிதித்து இனப் படுகொலைக்கு ஆணையிட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இராணுவத்திடம் சரணடைவதற்காக வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப் புலிகள் முன்னணித் தலைவர்களையும் தமிழர்களையும் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இலங்கையிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்க குடியுரிமைப் பெற்று வாழ்ந்தவர். பிறகு மீண்டும் இலங்கை திரும்பியவர்.

தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் அவர்கள் மதம், இனம் என்ற அடையாளத்தையும் தாண்டி, தான் பிரதமர் என்ற பொறுப்போடு செயல்படுவேன் என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது ‘சடங்குக்கான’ பேச்சா அல்லது உண்மையின் வெளிப்பாடா என்பது இனி அவரது செயல்பாடுகள் வழியாகவே முடிவுக்கு வர முடியும்.

இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழர்-சிங்களர் முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்தியிருக் கிறது. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல், குண்டு வீச்சுகள் ஏதும் இல்லை என்பதைத் தவிர தமிழர் களின் உரிமைகளை அங்கீகரிக்கும் முன்னெடுப்புகள் ஏதும் நிகழவில்லை என்பதே உண்மை.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ‘கலப்பு விசாரணை’ ஒன்றை (இலங்கையும் சர்வதேச நாடுகளும் சேர்ந்து நடத்தும் விசாரணை) நடத்தும் தீர்மானத்தை 2015ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டது. ‘இனப் படுகொலை’ என்ற எல்லைக்கு வராமல், ‘மனித உரிமை மீறல்’ என்ற அடிப்படையில் விசாரணைக்கு உடன்பட்ட இலங்கை அரசு அது தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. அய்.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு கொழும்பில் காணாமல் போனோரைக் குறித்து நடவடிக்கை எடுக்கும் அலுவலகம் ஒன்றைத் திறந்தார்கள். காணாமல் போனவர்கள் என்றால் அவர்கள் இலங்கையின் சிறைக்குள்ளே இருக்க வேண்டும் அல்லது இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த உண்மைகள் வெளியே வரும்போது சர்வதேச சமூகத்துக்கு இலங்கை பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகும். எனவே கண்துடைப்புக்காகவே இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. நியாயமாக இந்த அலுவலகம் தமிழர் வாழும் பகுதியில்தான் திறக்கப்பட்டிருக்க வேண்டும். சிங்களர் பெரும்பான்மையினராக வாழும் கொழும்புவுக்கு வந்து தமிழர்கள் தங்கள் பிரச்சினைகளை அச்சமின்றி வெளிப்படுத்த முடியுமா? அது மட்டுமின்றி இந்த அலுவலகத்துக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ஷெவேந்திரா சில்வா என்ற இராணுவ அதிகாரி, இனப்படுகொலைக்குக் காரணமான அதிகாரிகளில் ஒருவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

இலங்கை அரசுப் பதிவேடுகள் அடிப்படை யிலேயே 65,000 தமிழர்கள் காணாமல் போனவர்கள். (நுகேடிசஉநன னளையயீயீநயசயnஉந) காணாமல் போனவர்கள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இலங்கை அரசு இருக்கிறது. காணாமல் போன தங்கள் குடும்பத்தினரைக் கண்டறிய வேண்டும் என்று பெற்றோர்கள் 1000 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். போராடிய பெற்றோர்களில் 53 பேர் தங்கள் குடும்ப உறுப்பினர் கதி என்னவாயிற்று என்பது தெரியாமலேயே உயிரிழந்து விட்டனர். இந்த நிலையில் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசும் ஏற்றுக் கொண்ட ‘மனித உரிமை மீறல்’ குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை அரசு தன்னை விடுவித்துக் கொள்ளும் என்று கோத்தபய ராஜபக்சே, சிங்களர்களுக்கு தேர்தலுக்குமுன் உறுதியளித்ததையும் குறிப்பிட வேண்டும். ஆக, மனித உரிமை மீறல் விசாரணை நடக்குமா என்பதே கேள்விக்குரியாகியிருக்கிறது.

தங்களுக்கான வரலாற்று அடிப்படையிலான தாயகத்தையும் தனித்துவமான மொழி இன அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்த தமிழர்கள் தங்களுக்கான சுயாட்சியை நிறுவிக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். கடந்த காலங்களில் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுகள் குறித்த உடன்பாடுகளை இலங்கை அரசு மதிக்காத நிலையில்தான் ‘தமிழ் ஈழம்’ என்ற இலட்சியப் போராட்டத்தை விடுதலைப்புலிகள் தொடங்கினார்கள்.  ஆயுதப் போர் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கையின் அரசியல் சட்டம் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுகளை வழங்கி மாற்றியமைக்கப்படும் என்று இலங்கை அரசு தந்த உறுதி மொழியில் எந்த முன்னெடுப்பும் இல்லை. “இலங்கை ஒற்றை ஆட்சிதான்” என்று தேர்தல் முடிவுக்குப் பிறகு சிங்கள தீவிரவாதிகள் பேசத் தொடங்கி விட்டார்கள்.

இந்தியாவின் நிலை என்ன?

காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவுமே இருந்தது. செல்வாக்கு மிக்க பார்ப்பன அதிகாரவர்க்கம் தமிழர்களுக்கு ஈழத்தில் உரிமைகளோ, விடுதலையோ கிடைத்து விட்டால், தமிழ்நாட்டில் அது எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத் துடனேயே செயல்பட்டது. காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பா.ஜ.க. ஆட்சியும் இதே கொள்கையை இன்னும் தீவிரமாக பின்பற்றி வருகிறது.

இது குறித்து சுகாசினி ஹரிதார் என்பவர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (நவம். 18, 2019) எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

கோத்தபய ராஜபக்சே சீனாவுக்கு ஆதரவாகவே செயல்படுவார் என்ற கருத்து பொதுவாக நிலவினாலும் இலங்கையில் இந்திய தூதரக அதிகாரிகள் கோத்த பயவுக்கு ஆதரவாகவே இருந்தனர் என்றும் தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை கோத்தபயவை சந்தித்து இந்தியா-இலங்கைக்குமிடையே பாரம்பர்யமாக தொடரும் உறவுகள் நீடிக்க  வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் தெரிவித்ததாகவும் அந்த கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு-கிழக்கு மாநிலங்களில் பதட்டங்களைத் தவிர்க்க தனக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்று கோத்தபய இந்திய அதிகாரிகளிடம் கூறியதாகவும் கட்டுரையாளர் சுட்டிக் காட்டுகிறார்.

2014ஆம் ஆண்டு இதே கோத்தபய புதுடில்லி வந்தபோது அவரிடம் கொழும்புத் துறைமுகத்தில் சீன போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்திய அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கோத்தபயவிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும்கூட அடுத்த ஒரு வாரத்தில் சீன கப்பல் படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் நிலைகொள்ள இலங்கை அரசு அனுமதித்தது. ஆனால் காலப் போக்கில் எதிர்ப்புகள் மறைந்து இந்தியாவுடன் சுமூக நிலை உருவாகிவிட்டது என்று கட்டுரை கூறுகிறது.

மெஜாரிட்டிகள்தான் ஆள வேண்டும்; மைனாரிட்டிகள் அடங்கிப் போகவேண்டும் என்பது ஜனநாயகத்துக்கும் சமநீதிக்கும் எதிரானது. மெஜாரிட்டி, மைனாரிட்டி என்ற கோட்பாடுகளைவிட ‘ஈக்வாலிட்டி’ (சமத்துவம்) என்பதே ஒரு ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம்.

“இந்துக்கள் மெஜாரிட்டி- எனவே இது இந்துக்கள் நாடு; மைனாரிட்டிகள் அடங்கிப் போக வேண்டும்” என்று இந்தியாவில் சங்பரிவாரங்களும் பா.ஜ.க.வும் பேசும் ‘மதவாதம்’ – ஜனநாயக அமைப்புக்கு எதிரானது. ‘இந்து’ இந்தியா என்ற ‘பெரும்பான்மை’ வாதம், தமிழர்களுக்கு எதிராக நிற்பது போலவே, இலங்கையின் சிங்கள மெஜாரிட்டி வாதம், ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராகவும், தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும், சர்வதேச நிர்ப்பந்தங்களை  உருவாக்குவதுதான் இப்போது உலகத் தமிழினத்தின் முதன்மை செயல் திட்டமாக இருக்க முடியும்.       – ‘இரா’

 

பெரியார் முழக்கம் 21112019 இதழ்

You may also like...