காஷ்மீர்: வரலாறும் துரோகமும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பின்னணியையும்

370 சிறப்புப் பிரிவு வழங்கிய உரிமைகளை படிப்படியாக இந்திய அரசு பறித்ததால் அம்மக்களிடையே உருவான எதிர்ப்பையும் சுருக்கமாக விவரிக்கிறது, கட்டுரை.

தங்கள் வாழ்வுரிமை பறிபோகும் என்ற பதற்றமே காஷ்மீர் மக்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பார்க்க மறுப்பவர்களால் காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்ள இயலாது.

இந்தியா விடுதலை பெற்றபோது 601 சமஸ் தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் இந்தியாவோடும், 49 சமஸ்தானங்கள் பாகிஸ்  தானோடும் இணைந்தன. மற்ற 3 சமஸ்தானங்கள் எவரோடும் இணைய மறுத்தன.

  1. ஜுனாகட் சமஸ்தானம்
  2. ஹைதராபாத் சமஸ்தானம்
  3. காஷ்மீர் சமஸ்தானம்

ஜுனாகட் சமஸ்தானத்தின் நவாப், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு சேர்ப்பதாக அறி வித்தார். இந்துக்கள் அதிகம் இருந்த இங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1948 பிப்ரவரி 7ல் இந்திய அரசாங்கம் படைகளை அனுப்பி, மக்களிடம் நேர்முக வாக்கெடுப்பு நடத்தி, இதனை இந்தியாவுடன் இணைத்தது.

ஹைதராபாத் சமஸ்தானம் (இன்றைய தெலுங்கானா பகுதி) மிகப்பெரியது. இங்கு மன்னராக இருந்த நிஜாம் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை. ரஜாக்கர்கள் என்ற பெயரில் வைத்திருந்த தன்னுடைய இராணு வத்தை வைத்து, முஸ்லிம் அல்லாதோரையும், தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்க முனைந்தார்.

இந்திய ராணுவம் 1948 செப்டம்பர் 13இல் ஹைதராபாத் சமஸ்தானத்தில் நுழைந்து, நிஜாமின் இராணு வத்தையும், கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தையும் ஒடுக்கியது. 1949 ஜனவரியில் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத் தில் ஹைதராபாத் நிஜாம் கையெழுத்திட்டார்.

ஜுனாகட், ஹைதராபாத் சமஸ்தானங்கள் பெரும் பான்மையாக இந்து மக்கள் வசிப்பவை யாக இருந்தன. ஆனால் மன்னர்கள் முஸ்லிம் களாக இருந்தனர்.

காஷ்மீர் சமஸ்தானத்தில் 90 சதவீதம் முஸ்லிம் மக்கள். ஆனால் மன்னன் இந்து. டோக்ரா வம்சத்தை சேர்ந்தவர் ஹரிசிங். ஹரிசிங்கின் மூதாதையர்களுக்கு காஷ்மீர் அரசுரிமை வந்ததே வேடிக்கையானது, கேவல மானது. அன்று காஷ்மீர் பஞ்சாப் சமஸ்தானத் தின் ஒரு பகுதியாக சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங், சீக்கியமன்னர் ரஞ்சித்சிங் என்பவரின் இராணு வத்தில் அவரது சதி வேலைகளுக்கு துணை நின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக காஷ்மீர் பகுதியை இனாமாகப் பெற்றார். இதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு, சீக்கியரையே தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கு துணை போனார்.

பஞ்சாப் சமஸ்தானத்தை கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள், இழப்பீட்டுத்தொகையாக சீக்கியர்கள் 75 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையேல் காஷ்மீரை பிரிட்டி ஷாருக்கு விட்டுத்தர வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர். 75 லட்சம் தர பஞ்சாப் சமஸ்தானம் ஒப்புக்கொண்டாலும், அதனால் தொகையைக் கொடுக்க  முடியவில்லை. குலாப்சிங் தொகையை தர முன்வந்த தால் காஷ்மீர் அரசுரிமை குலாப்சிங் வசம் சென்றது. குலாப்சிங் மகன்தான் ஹரிசிங். காஷ்மீர் குலாப்சிங் வசம் வந்ததற்குப் பெயர்தான் அமிர்தசரஸ் ஒப்பந்தம். 1846ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒரு விற்பனைப் பத்திரத்தின் மூலம் அரசுரிமையைப் பெற்ற மன்னர் ஹரிசிங், காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேர விரும்பாமல் தனியே சுதந்திர  நாடாக இருக்க விரும்பினார். 1947 ஜூலை மாதத்தில் மவுண்ட்பேட்டன்- ஹரிசிங் சந்திப்பு நடந்தது. மவுண்ட்பேட்டன் காஷ்மீர் பாகிஸ்தானோடு சேர வற்புறுத்தினார். ஹரிசிங் அதற்கு சம்மதிக்க வில்லை. மறுபக்கம், ஹரிசிங்கின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்தது. மன்னரின் கொடுங் கோலாட்சிக்கும், வெள்ளை  ஏகாதிபத்தியத்திற் கும் எதிராக மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிகளாகவும், நிலமானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டும், சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாமலும், மரங்கள் வெட்டக்கூட முடியாமலும் துன்புறுத்தப்பட்டனர்.

தேசிய மாநாட்டுக் கட்சி

1924 முதலே தீவிரமடைந்திருந்த மக்கள் போராட்ட த்தில், 1931இல் முஸ்லிம் மாநாடு என்ற இயக்கம் துவங்கி, 1939இல் தேசிய மாநாட்டுக் கட்சியாக உருவெடுத்தது. தேசிய மாநாட்டுக் கட்சி மன்னருக்கு எதிராகவும், வெள்ளையருக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரமாக நடத்தியது.

தேசிய மாநாட்டுக்கட்சி மன்னருக்கு எதிராக போராடிய நிலையில், மன்னருக்கு ஆதரவாக பிரஜா பரிஷத் என்ற அமைப்பு செயல்பட்டது. பிரஜாபரிஷத் என்பது வேறு எதுவுமல்ல; ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் அந்தப் பெயரில்தான் காஷ்மீரில் செயல்பட்டது. காஷ்மீர் இந்தியாவுடன் இணையக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அன்று கடுமையாக வலியுறுத்தினர். வெள்ளையர்கள் காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென இங்கும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென அங்கும் பேசி, இருவருக்கும் இடையே ஆயுதப்போரை மூட்டி விட்டார்கள். வெள்ளையர்களால் தூண்டி விடப்பட்ட பட்டாணிய இனக்குழுப்படை 1947 அக்டோபர் 22இல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து காஷ்மீருக்குள் நுழைந்தது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கப் போகிறோம் என்ற கோஷத்துடன் நுழைந்த அவர்கள் முசாபர்பாத், டோமல், ஊரி, பாரமுல்லா ஆகிய நகரங்களைப் பிடித்தனர். அக்டோபர் 26இல் பட்டாணியர்கள் படை காஷ்மீர் சமஸ்தான தலைநகர் ஸ்ரீநகரை நெருங்கியது. அதை எதிர்கொள்வதற்கு பதிலாக மன்னர் ஹரிசிங் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.

மாறாக, ஸ்ரீநகரை பட்டாணியர் படை கைப்பற்றாமல் தடுக்க காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவும், தேசிய மாநாடு கட்சித் தலைமை யும் இந்திய இராணுவ உதவியை நாடினர். படையெடுப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவிய மவுண்ட்பேட்டன் உதவி செய்ய மறுத்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே படை அனுப்ப முடியும் எனக் கூறினார். இந்த நெருக்கடிக்குப் பிறகுதான் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்து கையொப்பமிட்டார். படைகளை விரட்ட உதவி கோரினார். இந்திய அரசு அக்டோபர் 27 அன்று ராணுவத்தை விமானம் மூலம் ஸ்ரீநகரில் இறக்கியது. பாகிஸ்தானின் பட்டாணிப் பிரிவு படையுடன், பாகிஸ்தானின் இராணுவமும் நுழைந்து, இந்திய இராணுவத்துடன் மோதியது.  இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்திய ராணுவத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தலைமை தாங்கி சண்டையிட்டது ஒரே நபர்தான். அவர்தான் அன்றைய பிரிட்டிஷ் ஜெனரல் ஆக்கின்லேக் என்பவர். ஊடுருவல் படைகளை காஷ்மீரின் பெரும் பகுதியிலிருந்து, இந்திய படைகள் விரட்டிவிட்டன. ஆனால் காஷ்மீரின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேறும் முன்பு ஐ.நா. மற்றும் மவுண்ட்பேட்டன் தலையீட்டால் போர்  நிறுத்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் படைகள் கைப்பற்றிய பகுதி “ஆசாத் காஷ்மீர்” என்ற பெயரில் இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ளது. நாம் அதை ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று சொல்கிறோம். இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையின் மையப்புள்ளி இந்த ஆசாத் காஷ்மீர்தான்.

காஷ்மீர் பிரச்சனை 1947 டிசம்பர் 31 அன்று ஐ.நா பாதுகாப்புக் குழுவின் பரிசீலனைக்கு இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டது.  ஐ.நா. சபை கமிஷன் ஒன்றை அமைத்தது. அமெரிக்கா வும் – இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டன. 1948இல் வசந்த காலத்தில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தம் 1949 ஜனவரி 1ல் அமலுக்கு வந்தது. காஷ்மீரில் ஐ.நா நிர்வாகத்தால் பொது வாக்கெடுப்பு நடத்தவும் அமெரிக்க முன்னாள் கடற்படை தளபதி செஸ்டர்நிமிட்ஸ் என்பவரை வாக்கெடுப்பு அதிகாரியாகவும் நியமித்து ஐ.நா தீர்மானம் போட்டது. வருடத்திற்கு 45,000 டாலர் ஊதியமும் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐ.நா வின் இந்த முடிவை இந்தியாவும், தேசிய மாநாட்டுக் கட்சியும் நிராகரித்தன. இந்தியா, ஐ.நா. மூலமாக ஏவப்படும் அமெரிக்க சதியை நிராகரித்த பின்பு, 1950 மார்ச் 14இல் ஐ.நா பாது காப்புக் கவுன்சிலில் மற்றொரு தீர்மானம் போட்டது. அதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க சர் ஓவன் டிக்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் ஆஸ்திரேலியத் தூதராக செயல்பட்டுவந்தார். 1950 மே 27 டிக்சன் இந்தியா வந்தார். இந்தியா-பாகிஸ்தான்தலைவர்களுடன் விவாதித்துவிட்டு 1950 செப்டம்பர் 15 தனது அறிக்கையை ஐ.நா.விற்கு அளித்தார். டிக்சன் ஐ.நாவிற்கு கொடுத்த அறிக்கை இதுதான்;

  1. காஷ்மீர் சமஸ்தானம் முழுதும் வாக் கெடுப்பு நடத்தாமல், காஷ்மீர் பள்ளத் தாக்குப் பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்துவது. அதன்படி முடிவெடுப்பது.
  2. காஷ்மீரின் வடபகுதியும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியும் பாகிஸ்தானுடன் இணைக்கப்படும்.

இந்த ஆலோசனையை பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ஒரு நிபந்தனையுடன் ஏற்றார். என்னவெனில் ஷேக் அப்துல்லா தலைமையிலான நிர்வாகத்தை நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். டிக்சன், லியாகத் அலிகான் ஆகிய இருவரின் ஆலோசனை களையும் இந்தியா ஒட்டு மொத்தமாக நிராகரித்து, அமெரிக்க சூழ்ச்சியிலிருந்து தப்பியது.

ஷேக் அப்துல்லா உறுதி

காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள் தான். ஆனால் மதச்சார்பற்ற கொள்கையை உயர்த்திப்பிடித்தவர்கள். மனிதநேயப் பண்பாளர்கள். இதற்கு முதல் காரணம் ஷேக் அப்துல்லாவும், அவரின் தேசிய மாநாட்டுக் கட்சியும்தான். நிலப்பிரபுக்களையும், வெள்ளையர்களையும் எதிர்த்துப் போராடியவர் ஷேக் அப்துல்லா. இந்தியாவுடன்  காஷ்மீர் இணைய வேண்டுமென உறுதியுடன் நின்றவர். அவருடைய ஒரு பேட்டி இது: “இந்தியாவுடன் நாங்கள் இணைய முடிவு செய்ததற்குக் காரணம் என்னவெனில், எங்கள் லட்சியமும், கொள்கை களும் இந்தியா கடைப்பிடிக்கும் கொள்கை களுடன் இசைந்தது. பாகிஸ்தானும், நாங்களும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கமுடியாது. ஏனெனில் பாகிஸ்தான் சுரண்டும் கும்பல்”-(ஹிந்துஸ்தான் டைம்ஸ் – 1948 அக்டோபர் – 16).

இந்தியாவுடன் மன்னர் ஹரிசிங் இணைய ஒப்பந்தம் போட்டவுடன்,ஷேக்  அப்துல்லா மாநிலத்தின் பிரதமராகவும், ஹரிசிங்கின் மகன் கரண்சிங் மாநிலத்தின் சார்-ஈ-செரிப் ஆகவும் நியமிக்கப்பட்டனர்.

காஷ்மீர் நிலைமை கருத்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா.வின் முடிவை நிராகரித்த அன்றைய பிரதமர் நேரு, காஷ்மீருக்கான அரசியல் நிர்ணயசபை அது பற்றி முடிவு செய்யும் என்று நெத்தியடி கொடுத்தார்.

370வது பிரிவு ஏன் வந்தது?

ஜம்மு-காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய சபை தேர்தல் 1951 செப்டம்பரில் நடைபெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றது. முதல் அரசியல் நிர்ணயசபைக் கூட்டம் 1951 நவம்பர் 5இல்  நடைபெற்றது. அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:

  1. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் அமைப்புச்சட்ட விதிகளை உருவாக்குவது.
  2. மன்னராட்சி முறையின் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்வது.
  3. நிலச் சீர்திருத்த திட்டங்களின்படி நிலங்களை இழந்த உடைமையாளர்களின் இழப்பீடு பற்றி பரிசீலிப்பது.
  4. இந்தியாவுடன் இணைவது பற்றி முடிவு செய்வது. இதன்படி இந்தியாவுடன் இணைய அரசியல் நிர்ணயசபை முடிவு செய்தது. மன்னர் – நிலபிரபுக்களின் பரம்பரை உரிமை ரத்துசெய்யப்பட்டது. 1952இல் நேரு-ஷேக் அப்துல்லா உடன்பாடு கையெழுத்தானது.

காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் குறித்த, நேரு -ஷேக் அப்துல்லா ஒப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது:

  1. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர, மற்ற அனைத்தும் பிற மாநிலங் களைப் போல் இல்லாமல் காஷ்மீர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  2. காஷ்மீர் மக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவர். அங்கு நிலையாக வசிப்பவர்களின் உரிமைகளை காஷ்மீர் சட்டமன்றம் தான் தீர்மானிக்கும்.
  3. காஷ்மீர் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமைகள் மட்டுமே, உச்சநீதி மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.
  4. இந்தியக் கொடியுடன், காஷ்மீர் மாநிலக் கொடியும் பயன்படுத்தப்படும்.
  5. மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலோ, அல்லது அதன் சம்மதத்துடனோதான் இந்திய அரசு தலையிடும்.
  6. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, வேறு யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது.

இதுவே பிரதானமாக இடம்பெற்றது. இதை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சட்டத்தின் 370 பிரிவு.

370வது பிரிவின் படுகொலை

இந்தியாவுடன் இணையவேண்டுமானால் காஷ்மீர்  மக்களுக்கு தருவதாக இந்தியாவால் ஒப்புக்கொண்ட விசயங்களே, இன்றைக்கு மோடி அரசால் ரத்து செய்யப் பட்டுள்ள 370 வது ஷரத்து. ஆனால் அதில் கூறப்பட்டவை அனைத்தும் 1957 லிலேயே அப்பட்டமாக இந்தியாவால் மீறப் பட்டது.

  1. இராணுவம், தகவல்தொடர்பு, வெளியுறவு மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு, யூனியன் பட்டியலின்படி சட்டமியற்றும் மத்தியஅரசின் அனைத்து அதிகாரமும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று 1957 குடியரசுத்தலைவர் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
  2. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளை காஷ்மீரில் நியமனம் செய்ய முடியாது என்ற நிலைமாற்றப்பட்டு, மத்தியஅரசின் அதிகாரிகள் நேரடியாக அங்கு நியமனம் செய்யும் முறை 1958இல் கொண்டு வரப் பட்டது.
  3. மாநில அரசைக் கலைக்கும் 356, 357ஆவது பிரிவுகள் அங்கும் பொருந்தும் என்ற நிலை 1964இல் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை பிறப்பிப்பது போன்ற சட்டங்களும் அங்கு விரிவுபடுத்தப்பட்டது.

படிப்படியாக அக்கிரமங்களை மத்திய அரசு செய்த பின்னணியில்தான், 1983 முதல் பிரிவினைவாதம் அங்கு தலைதூக்கியது. மேற்படி பிரிவு 370இன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்பட்டு, தற்போது மொத்தமாக படு கொலை செய்யப்பட்டுவிட்டது.

370வதின் மூலாதாரமே அழிக்கப்பட்ட பிறகு, எஞ்சி இருந்தது மூன்று விசயங்கள்தான்.

  1. காஷ்மீருக்கான அரசியல் சட்ட விதிகள்.
  2. காஷ்மீருக்கான தனிக்கொடி
  3. வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை.

மூன்றாவது விசயத்திற்காகத்தான் முதல் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு கூப்பாடு போட்டது காவிக்கூட்டம்.

இந்தியாவுடன் இணையும்போது சொல்லப் பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் கவனிக்கப் படவில்லை. தொழில்வளம் பெருகவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மத்திய அரசின் மீதான நம்பிக்கையின்மை பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல்களில் இதுவரை பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் அத்துமீறல்கள் நாள்தோறும் பெருகிவருகிறது. இத்தகைய பின்னணியில் காஷ்மீர் சிக்கித் தவிக்கிறது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதாரமாகவும், பலமாகவும் அமைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி சில மிகப்பெரிய சாதனைகளை, காஷ்மீரில் அன்றைய ஷேக் அப்துல்லா அரசாங்கம் அமல்படுத்தியது. அவை:

சுமார் 4 இலட்சம் ஏக்கர் நிலம், நில உடமை யாளர்களிடமிருந்து எவ்வித இழப்பீடுமின்றி பறிக்கப்பட்டு நிலமில்லாத ஏழைகளுக்கு அளிக்கப்பட்டது.

குத்தகை விவசாயிகள் தாம் உழும் நிலத்தி லிருந்து வெளியேற்றப்படுவது சட்டவிரோதமாக ஆக்கப்பட்டது.

ஒரு ஏழை தான் வாங்கிய கடனில் ஒன்றரை மடங்கு திருப்பி தந்திருந்தால் அக்கடன் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டது.

வசதி படைத்த நில உடமையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் இந்துக்கள் கணிச மாக வாழும் ஜம்மு பகுதிக்கும் பவுத்தர்கள் அதிகமாக வாழும் லடாக் பகுதிக்கும் சுயாட்சி உரிமை வழங்கப்பட்டது.

இவை காஷ்மீர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. காஷ்மீர் முஸ்லிம்கள் மட்டு மல்லாது இந்துக்களும், குறிப்பாக அடித்தட்டு இந்துக்களும் பயன் பெற்றனர்.

எனினும் இச்சட்டங்களை எதிர்த்து சங்பரிவார அமைப்பான ஜம்மு பிரஜா பரிஷத் கலகத்தில் ஈடுபட்டது. ஜம்மு பிரஜா பரிஷத் “ஒரே தேசம் ஒரே சட்டம்” எனும் கோஷத்தை முன் வைத்து 370ஆவது பிரிவை நீக்க  வேண்டும் என கலகத்தில் ஈடுபட்டது. சுதந்திர இந்தியா வில் காஷ்மீர் வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே சங்பரிவாரம் 370ஆவது பிரிவுக்கு எதிராக கலகம் செய்தும், கூப்பாடு போட்டும் வந்துள்ளது என்பது தெளிவு.

விசேட சட்டம் காஷ்மீருக்கு மட்டுமல்ல;

வேறு மாநிலங்களுக்கும் உண்டு

காலப் போக்கில் 370வது பிரிவின் முக்கிய அம்சங்கள் அகற்றப்பட்டன. ஆரம்பத்தில் இருந்த 370வது பிரிவு இன்று இல்லை. பெரும் பான்மையான உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன.

எனவே 370வது பிரிவு கணிசமான அளவிற்கு நீர்த்து போய்விட்டது. மீதமுள்ள வற்றையும் நீக்க வேண்டும் என்பதே சங்பரிவாரத்தின் கோரிக்கையாக இருந்தது.

அதுமட்டுமல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்  ஜம்மு – காஷ்மீருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து  தரப்பட்டு விட்டதாகவும் ஆர்எஸ்எஸ்- பாஜக தரப்பில்  பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது போன்ற சலுகை வேறு சில மாநிலங்களுக்கும் தரப்பட்டுள்ளன. குறிப்பாக  371வது பிரிவின் கீழ் சில மாநிலங்களுக்கு விசேட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:

371 – குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவிற்கு மட்டும் பொருந்தும்.

371ஹ – நாகாலாந்திற்கு மட்டும் பொருந்தும்.

371b – அசாமிற்கு மட்டும் பொருந்தும்.

371உ – மணிப்பூருக்கு மட்டும் பொருந்தும்.

371ன – மற்றும் ந ஆந்திராவிற்கு மட்டும் பொருந்தும்.

371க – சிக்கிமிற்கு மட்டும் பொருந்தும்

371ப – மிசோராமுக்கு மட்டும் பொருந்தும்.

371ழ – அருணாசலப் பிரதேசத்திற்கு மட்டும் பொருந்தும்.

371ஐ – கோவாவிற்கு மட்டும் பொருந்தும்.

இப்பகுதி மக்களின் நன்மைக்கும் அவர்களது தனிப்பட்ட கலாச்சாரம் பாது காக்கப்படவும் இத்தகைய விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, காஷ்மீருக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது போல தவறான பிரச்சாரம் செய்யப்படுவது உண்மை அல்ல.

காஷ்மீரில் பயங்கரவாதம் தோன்றக் காரணம் யார்?

காஷ்மீர் மக்களின் கலாச்சாரம் “காஷ்மீரியத்” எனப்படும் விசேட பண்பு கொண்டதாகும். காஷ்மீர் மக்கள் இசுலாமில் சுஃபி பிரிவை தமது வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டவர்கள். சுஃபி பிரிவு அனைத்து மதங்களையும் சமமாக பாவித்து அர வணைப்புத் தன்மையுடன் இயங்கும் குணம்கொண்டது.  அதனால்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுவாக மதக்கலவரம் நடப்பது கிடையாது. 1947ல் தேசமே மதக்கலவரத்தில் பற்றி எரிந்தது. ஜம்மு பகுதியில் கூட மதக்கலவரங்கள் நடந்தன. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மதக்கலவரம் நடக்கவில்லை.

370வது பிரிவு நீர்த்துப் போனது என்பது காஷ்மீர் மக்களிடையே அதிருப்தியை தோற்று வித்தது. தமது ‘காஷ்மீரியத்’ கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் எனக் கோரினர். இப் பிரச்சனையில் காஷ்மீர் மக்களின்  மனங்களை வென்றெடுப்பது தேவையாக இருந்தது. ஆனால் தமது சுயநலனுக்காகவும் இந்திய அரசின் கண்மூடித்தனமான மேலாண்மையை காஷ்மீர் மீது திணிக்கவும் மத்திய அரசாங்கங்கள் ராணுவத் தீர்வை நாடின.

இதன் விளைவாக காஷ்மீர் மண்ணில் பயங்கரவாதம் தலை தூக்கியது. வரலாற்றில் முதல் முறையாக காஷ்மீர்  பள்ளத்தாக்கில் மதக் கலவரங்கள் தோன்றின. பல காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் உயிருக்கு பயந்து உடமைகளை இழந்து ஜம்முவில் அடைக்கலம் புகுந்தனர். சங்பரிவாரம் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திட தீவிர முயற்சிகளை செய்தது.

மறுபுறத்தில் பாகிஸ்தான் இது தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக கருதியது. ஆப்கனில் இருந்து திரும்பிய தலிபான் பயங்கர வாதிகள் பலர் காஷ்மீருக்குள் அனுப்பப்பட்டனர். பயங்கரவாதத்தை ஒடுக்க இராணுவம் தனது நடவடிக்கைகளை அபரிமிதமாக அதிகரித்தது. இராணுவ நடவடிக்கைகள் குடிமக்களின் உரிமை மீறல்களுக்கு வித்திட்டது. எனினும் 2000க்கு பிறகு பயங்கரவாதம் மக்கள் ஆதரவை இழந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

காஷ்மீர் மக்களிடையே மனக்குமுறல்களும் அதிருப்தி மேகங்களும் அதிகமாகிக் கொண் டிருந்த பொழுதுதான் 2014ல் மோடி அரசாங்கம் அமைந்தது. காஷ்மீர் பிரச்சனையை தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ளும் வஞ்சகமான சூழ்ச்சியை மோடி அரசாங்கம் உருவாக்கியது. ஜம்மு பகுதியில் வாழும் இந்து மக்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் ஜென்ம விரோதிகள் போல உணரும் வகையில் மோடி ஆட்சி பிளவை உருவாக்கியது.

மோடி ஆட்சியில் ஊக்கம் அடைந்த சங்பரிவாரத்தினர் மேலும் அழுத்தமாக 370வது பிரிவை நீக்க வேண்டும் என கூச்சல் போடத் துவங்கினர். காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்தன. அத்துமீறல்களும் ஆழமாகின. ராணுவத்தால் இளைஞர்கள் தாக்கப்படுவதும் அவமானப்படுவதும் நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக மாறியது. காஷ்மீரில் மட்டும் 10 இலட்சம் ராணுவத்தினர் உள்ளனர் எனில் நிலைமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மோடி அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது. அவை என்ன ?

  • காஷ்மீர் மக்களுக்கு வீடுகள் மறுக்கப்பட்ட அதே வேளையில் பண்டிட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான தனி வீடுகள் உருவாக்கப் பட்டன.
  • இராணுவத்தினருக்கு காஷ்மீர் பள்ளத் தாக்கில் நூற்றுக்கணக்கில் தனி வீடுகள்.
  • 370வது பிரிவு மீது தொடரும் தாக்குதல்.
  • இராணுவப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் எனும் கொடிய சட்டம்.
  • வெளி மாநிலங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுதல்.
  • சமூக ஊடகங்களில் காஷ்மீர் மக்களுக்கு எதிராக விஷம் கக்குதல் ஜம்மு – காஷ்மீரில் அமைதி உருவாக்கிட பாகிஸ்தானுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை சீர்குலைவு.

இத்தகைய நிகழ்வுகள் காஷ்மீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

1990இல் நடந்த வன்முறையில் அயல்நாட்டு பயங்கரவாதிகளின் பங்கு இருந்தது. ஆனால் பின்னர்  நடக்கும் எதிர்ப்பு இயக்கங்களிலும் வன்முறைகளிலும் காஷ்மீர் இளைஞர்களின் பங்குதான் அதிகமாக இருந்தது. தங்களது எதிர்காலம் பொய்த்துப் போனதாலும் தங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு உதாசீனப் படுத்தப்படுவதாலும் உண்டான கோபத்தின் காரணமாக வழி தவறும் இளைஞர்கள் பயங்கரவாதம் பக்கம் சாய்ந்தனர். மோடி அரசாங்கம் இவர்களை அரவணைத்துப் பேசி, திருத்துவதற்கு பதிலாக மேலும் பயங்கரவாதம் பக்கம் தள்ளிவிட்டது. இதனை தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல் பயன்படுத்திக் கொண்டது.

(இணையத்திலிருந்து)

நிமிர்வோம் ஆகஸ்ட் 2019 மாத இதழ்

You may also like...