‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் – மோசடிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்.

நீட் தகுதிக்கான தேர்வு என்று கூறப்படும் வாதத்தில் கடுகளவும் உண்மையில்லை என்பதற்கு சான்றாக ஏராளமான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இயற்பியல், வேதியலில் பூஜ்யம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் தகவல்களைக் கடந்த ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே இந்த மோசடிகள் நடந்துள்ளன. 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான ‘நீட்’ கட்-ஆப் மதிப்பெண் 250 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘நீட்’ தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்கூட சுயநிதி கல்லூரிகளுக்குரிய நிர்வாகக் கோட்டாவின் கீழ் சேர்ப்பதற்கு தமிழக அரசு தேர்வுக் கமிட்டி அனுமதித்திருக்கிறது. இயற்பியல்,  வேதியல், உயிரியல் தேர்வுகளில் தவறான விடை எழுதி மதிப்பெண் குறைப்புக்குள்ளான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திலும் தோச்சிக்குரிய மதிப்பெண்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கப்பட்டு நீட்டே கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது. அரசு நிர்ணயித்த ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றிருந்தாலும்கூட நிகர்நிலைப்ப பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் அவர்கள் கேட்கும் மிகப் பெரும் கட்டணத் தொகையைக் கட்ட முடியாத மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர முடிவதில்லை. தகுதி மதிப்பெண் பெறாதவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும் இடம் கிடைத்து விடும்.

பெரியார் முழக்கம் 27062019 இதழ்

You may also like...