வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது.

மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் தகுதி கொண்ட தலைவர் ஈ.வெ. இராமசாமி தான் என்று முடிவு செய்து குரு நீலகண்டன் நம்பூதிரி, பெரியாரை உடனடியாக வைக்கத்துக்குப் புறப்பட்டு வரச் சொல்லி தந்தி கொடுத்த நாள் 4.4.1924 மற்றும் 12.4.1924. மட்டுமின்றி, பாரிஸ்டர் கேசவ மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் பெரியாருக்கு கடிதமும் எழுதவே, பெரியார் உடனடியாகப் புறப்பட்டு வைக்கத்தை அடைந்த நாள் 13.4.1924. அதாவது கிளர்ச்சி தொடங்கிய இரண்டே வாரத்தில் பெரியார் வைக்கம் சென்று கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். பெரியார் கடைசி கட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்றார் என்று பார்ப்பனர்கள், சில பார்ப்பன தாசர்கள் உண்மைக்கு மாறாகப் பொய்யைக் கட்டவிழ்த்து வருகிறார்கள்.

அருவிக்குத்தி சிறையில் முதலில் ஒரு மாதம் அடைக்கப்பட்ட பெரியார், விடுதலையாகி மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில் திரு விதாங்கூர் சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டார்.

“ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய  நிலையிலே உள்ள ஒருவர், கேரளத்தில் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது” என்று இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த தலைவர்களில் ஒருவரான

கே.பி. கேசவமேனன், தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

அப்போது சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் பிரதிநிதியாக இருந்த சி.டபிள்யூ இ காட்டன் எனும் அய்.சி.எஸ். பிரிட்டிஷ் அதிகாரி, சென்னை மாகாணத் தலைமைச் செயலாளருக்கு 1924, ஏப்.21ஆம் தேதியிட்டு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“சத்தியாகிரக இயக்கத்துக்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால் அது வெகு நாள்களுக்கு முன்பாகவே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால் வைக்கம் அறப்போருக்கு சென்னையிலிருந்து நிதி மற்றும் தகுதி வாய்ந்த தலைமையும் கிடைத்ததால் ஆதரவு அபரிமிதமாகி விட்டது. ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவுக்குப் புறப்படுவதற்கு முன், தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள், தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்துவிட்டது” என்று எழுதினார் அந்த அதிகாரி. வைக்கம் சத்தியாகிரகம் குறித்து ஆய்வு செய்த பேராசியர் டி.கே. ரவீந்திரன், தனது ஆய்வில் (ஏயமையஅ ளுயவலயபசயாய யனே ழுயனோi) இதைப் பதிவு செய்திருக்கிறார். வைக்கம் கோயில் வீதிகள் ஈழவர்கள் உள்ளிட்ட தீண்டப்படாதவர்களுக்கு திறந்து விடப்பட்டதைக் கொண்டாடும் வெற்றி விழா நடத்தப்பட்ட நாள் 29.11.1925. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவரே பெரியார் தான். பார்ப்பனர்கள் இதற்குப் பிறகாவது தங்களது பார்ப்பனியப் புளுகுகளை நிறுத்திக் கொள்ளட்டும்.

பெரியார் குறித்து ரவிக்குமார், எம்.பி.

பெரியார் குறித்த கடுமையான விமர்சனங்களை ஒரு காலத்தில் முன்வைத்து வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.  அவரது பேட்டி ஒன்று ‘ஜூனியர் விகடன்’ (26.6.2019) இதழில் வெளி வந்துள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்பு உறுதிமொழியை எடுக்கலாம் என்ற கருத்தை அவர்தான் தெரிவித்ததாக அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  கடைசியாக அவரிடம் ‘ஜூ.வி.’யில் கேட்கப்பட்ட கேள்வியையும் அவரது பதிலையும் கீழே தருகிறோம்.

கேள்வி : பெரியாரை அதிகம் விமர்சித்தவர் நீங்கள். தி.மு.க.வுடனான இந்த இணக்கம் நீடிக்குமா?

இரவிக்குமார்: நான் அடிப்படையில் ஒரு பெரியாரியவாதி. கல்லூரிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவரணிச் செயலாளராக இருந்தேன். மதச்சார்பு அரசியல் மேலோங்கும் காலத்தில் நாம் பெரியாரை வாளாகவும் கேடயமாகவும் ஏந்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

பெரியார் முழக்கம் 27062019 இதழ்

You may also like...