வாசகர்களிடமிருந்து…

‘திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல்’ என்ற கவிஞர் வைரமுத்துவின் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி சொல்ல வேண்டும். கால்டுவெல் குறித்து சுருக்கமாக அவரது ஆழமான கருத்துகளை வெளிக்கொண்டு வந்துள்ள மிகச் சிறந்த கட்டுரை. திராவிடம் என்பதே ஆரியக் குறியீட்டுச் சொல் தான் என்று பேசி வரும் சில தமிழ்த் தேசியர்களுக்கு வைரமுத்து கட்டுரையின் கீழ்க்கண்ட பகுதி சரியான பதிலைத் தருகிறது.

“இலக்கிய இலக்கண புராண முற்கட்டுகளெல்லாம் திராவிடம் என்பதைத் தங்கள் வசதிக்கேற்பப் பொருள் கட்ட, கால்டுவெல் மட்டுமதான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச் சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில்மெய்ப்பித்தார்” என்பது மிகச் சரியான விளக்கமாகும்.

– சந்தோஷ், சேலம்

உயர்ஜாதியினருக்கு 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து இரா. மன்னர்மன்னன் கட்டுரை மிகச் சிறப்பு.

“கடந்த 2017இல் நடைபெற்ற நீட் தேர்வுகளில் ஒரு பாடத்தில் 9 மதிப்பெண்ணுக்ககும் கீழான மதிப்பெண் பெற்ற சுமார் 400 மாணவர்கள் இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 100 பேர் 0 அல்லது நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்கள். அவர்களுடைய தரம் பற்றியாருக்கும் கவலை இல்லை. அவர்களுக்கு எதிராக யாரும் போராடவும் இல்லை. இதுவரை தரத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை மறுத்தவர்கள் இப்போது அதை ஏற்றுக் கொண்டு அதன் சாரத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள்” என்பது மிகச் சிறப்பான கருத்து.

– சங்கீதா, தேனி

அண்ணாவின் வைதீகத்தை எதிர்க்கும் எழுத்துகளை ‘நிமிர்வோம்’ தொடர்ந்து வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது. இவை இளம் தலைமுறை அறிந்திடாதவை. திராவிடர் இயக்கம் எழுத்தாற்றலை – கலையை – கொள்கையைப் பரப்புவதற்கு எப்படி எல்லாம் செயல்பட் டிருக்கிறது என்பது வியப்பூட்டுகிறது.

– ந. கண்மணி, திருவரங்கம்.

‘சூத்திரர்’ என்பதற்குப் பதிலாகத்தான் ‘திராவிடர்’ என்கிற பெயரைப் பயன்படுத்துகிறோம் என்று பெரியார் கூறியிருப்பது அருமையான விளக்கம்.

– அருள், சென்னை

‘நிமிர்வோம்’ ஜனவரி இதழில் வெளிவந்த ‘திராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை’ என்ற

மா. செங்குட்டுவன் கட்டுரை – இளைய தலைமுறை அறிந்திட வேண்டிய செய்திகளை விளக்கியுள்ள சிறப்பான கட்டுரை. பெரியார்-அண்ணா-நடிகவேவள் ராதா போன்ற ஆளுமை களுக்கிடையே எழுந்த முரண்பாடு களையும் அது எவ்வாறு அகன்றது என்பதையும் நிதர்சனமாக படம் பிடித்துள்ளது கட்டுரை. கருத்து மாறுபாடுகளை நேர்மையோடு பதிவு செய்துள்ள ‘நிமிர்வோம்’ இதழைப் பாராட்ட வேண்டும்.

– இராமச்சந்திரன், ஈரோடு-2

‘ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன’ என்ற ‘நிமிர்வோம்’ கட்டுரை வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவிடும் கட்டுரை. உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் குடியேறியவர்கள் அந்நாட்டு நாகரிகம் பண்பாட்டைத் தழுவி நிற்பார்கள். மாறாக இங்கே நாடோடிகளாக வந்த ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் பண்பாட்டை சொந்த நாட்டு மக்கள் மீது திணித்து கற்பனை, கட்டுக்கதைகளை உருவாக்கி சொந்த நாட்டு மக்களை சூத்திரர்களாக்கி, ஊருக்கு வெளியே புறந்தள்ளினர். அரசர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ‘மனுதர்மத்தை’ சமூகச் சட்டமாக்கி விட்டனர்.

அறிவார்ந்த கட்டுரைகளை நிமிர்வோம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சி. இதழுக்கு பாராட்டையும் போற்றுதலை யும் உரித்தாக்குகிறேன்.

– மதலைமணி, பெங்களூர்

நிமிர்வோம் மார்ச் 2019 மாத இதழ்

You may also like...