ஈரோடு சித்தோட்டில் தடையைத் தகர்த்து கழகம் நடத்திய மகளிர் நாள் கூட்டம்

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக 08.03.2019 வெள்ளியன்று, சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடக்கவிருப்பதாக இருந்த  உலக மகளிர் தின விழா நிகழ்விற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மறுப்பதற்கு அவர்கள் தரப்பு சொல்லியக் காரணங்கள் தர்க்கமற்றவை. உள்நோக்கம் கொண்டவை. இனியும் அவர்களிடம் சுமூகப் போக்குடன் பயணிப்பதென்பது சுயமரியாதையை அடகு வைப்பதற்குச் சமமென உணர்ந்து, தோழர்கள் களமிறங்கினர். மாநிலப் பொறுப்பாளர்களான ப. இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னிர்செல்வம், மடத்துக்குளம் மோகன் ஆகியோரும் மாவட்டப் பொறுப்பாளர்களான எழிலன், வேணுகோபால், சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி, மரவபாளையம் குமார் ஆகியோரும் மணிமேகலை, ராசிபுரம் சுமதி, ஜோதி, மலர், கவிப்பிரியா, சித்ரா, மகேஷ்வரி, கமலா, சத்யராஜ், சௌந்தர், இந்தியப்பிரியன், ரமேஷ், ரவி, செந்தில் எனப் பெருந்திரளோடு சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கூடினார்கள். அதன்பின் அங்கே வந்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டக் கூட்டத்தை எதற்காக நடத்துகிறீர்கள்? சட்டத்தை மீறுகிற செயல் என மிரட்டுகிறத் தொனியில் கூற தோழர் ரத்தினசாமி காவல்துறையின் உள்நோக்கத்தையும் , சமீபகாலமாக அவர்கள் கழக நிகழ்வுகளை முடக்கும் வகையில் செயல்படுவதையும், அதற்குப் பின்னனியிலுள்ள அரசியலையும் காத்திரத்தோடும், கடுமையோடும் சுட்டிக்காட்டி ..நிகழ்ச்சி நடந்தே தீரும். கைது செய்தாலும் பயப்பட மாட்டோம் என அறிவித்து,ஓர் எழுச்சிகரமான துவக்க உரையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். தொடர்ச்சியாக தோழர்களும் உரையாற்றினர்.

கூடிய மக்கள் கூட்டத்தை காவல்துறையினர் விரட்டியபடியே இருந்தமையால் மக்கள் தத்தம் வீடுகளின் முகப்பில் நின்றபடியே தோழர்கள் ஆற்றிய உரையைக் கேட்டவாறு நின்றிருந்தனர். ஒலிபெருக்கியும்,  மின்விளக்கும் இல்லாது நடந்தக் கூட்டமெனினும் காவல்துறையின் அடக்குமுறையைத் தகர்த்தெறிந்தக் கூட்டம் என்கிற பெருமிதம் ஒவ்வொருத் தோழர்களின் நெஞ்சிலும் நிரம்பியிருந்தது. தோழர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் நீலாமணி என்பவர் தேநீர் வழங்கி உபசரித்தார். எதைச் சொன்னாலும் தலையாட்டிச் செல்லுகிறக் கூட்டமல்ல பெரியாரின் வாரிசுகள். தடைகள் ஒன்றே தடையில்லாது அவர்களை இயங்க வைக்கும் சூட்சமம் என அரசு எந்திரத்திற்கு உணர்த்திய நிகழ்வு இக்கூட்டம்!

பெரியார் முழக்கம் 14032019 இதழ்

You may also like...