பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10) ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம்.
பொன்மொழி நூலைப் பறிமுதல் செய்து, பெரியாருக்குத் தண்டனை வழங்கி, அவரது வாகனத்தையும் ஏலம் விட்ட அரசின் அடக்கு முறையை எதிர்த்து, கருஞ்சட்டைத் தோழர்கள் பொங்கி எழுந்தனர். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்கள் போராட்டங்கள் வெடித்தன. தீர்ப்பு வெளியான அன்றே ஈரோட்டில் கண்டனக் கூட்டம் சுவரொட்டி இயக்கங்கள் தொடங்கி விட்டன. சென்னை யில் தொடர்ந்து ஒரு வாரம் கண்டனக் கூட்டங்கள் அறிவிக்கப் பட்டன. சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த கண்டனக் கூட்டத்தில் எஸ். இராம நாதன், சாமி சிதம்பரனார், ‘சண்டே அப்சர்வர்’ பி. பால சுப்பிரமணியம், குத்தூசி குருசாமி கண்டன முழக்கமிட்டனர். பார்ப்பன ஏடுகளான ‘ஹிந்து’, ‘சுதேச மித்திரன்’ தீயிட்டு எரிக்கப் பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அரசின் கொடூரமான அடக்குமுறைகள் மக்கள் மன்றத்தில் அம்பலமானது. எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத நிலையில் அரசு பத்து நாட்களிலேயே பெரியாரை விடுதலை செய்தது (28.9.1950).
ஈரோட்டில் 15.10.1950 அன்று பெரியாருக்கு பாராட்டுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பெரியார் எந்த சூழ்நிலையில் விடுதலை செய்யப்பட்டேன் என்பதை விளக்கினார். “நான் ஆறு மாதம் தண்டிக்கப் பட்டு இருந்தாலும் பத்தே நாளில் விடுதலை யடைந்தேன்; அப்படி விடுதலை அடைந் ததற்கு யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் உங்களைத்தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உங்களின் கிளர்ச்சியின் காரண மாகத்தான், என்னை சிறையில் வைத்திருந்தால் வெளியில் கிளர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கும் என்று சர்க்கார் கருதி என்னை விடுதலை செய்தார்கள். இது சாதாரணமான தல்ல; 30 வருஷமாக தமிழ்நாட்டின் அரசியல் பொது வாழ்வு பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எந்தக் காலத்திலும், எப்போதும், எந்தத் தலை வருக்கும் இது மாதிரி, அதாவது மக்கள் செய்த கிளர்ச்சியினால், சிறையி லிருந்து விடுதலை கிடைத்ததில்லை” என்று குறிப்பிட்டார்.
அதே உரையில் மற்றொரு தகவலையும் பெரியார் வெளியிட்டார். “எனக்குக் கிடைத்த இரகசிய செய்திப்படி ‘இந்து’, ‘சுதேச மித்திரன்’ பத்திரிகை ஆசிரியர்களும், சட்டசபை மெம்பர்களும், போலீஸ் அதிகாரிகளும், என்னை விடுதலை செய்தால் தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறியதன் பேரில்தான் விடுதலை செய்யப் பட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே மந்திரி சபை 3 மணிக்குக் கூடி 3.15 மணிக்கு என்னை விடுதலை செய்து விடலாம் என்று முடிவு செய்து, 4 மணிக்கெல்லாம் ஜெயிலுக்கு தந்தி அடித்து விட்டார்கள்” என்று பெரியார் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு திராவிடர் கழகத்தின் வலிமையும் பெரியாருக்கு மக்கள் செல்வாக்கும் இருந்தது. சென்னை மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை” என்ற கிராமத்துப் பழமொழிபோல் இருந்தது அந்த அறிக்கை. வடநாட்டாரையும் பார்ப்பனர்களையும் பெரியார் எதிர்த்து வகுப்புவாதத்தைத் தூண்டி விடுவதை அரசு பொறுத்துக் கொள்ளாது என்றெல்லாம் ‘வீரம்’ பேசிய அந்த அறிக்கை கடைசியில், “ஆனாலும் சிறையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அரசு கருதுவதாக இறுதி வாக்கியமாக சேர்த்து வெளியிடப்பட் டிருந்தது அந்த அறிக்கை.
இந்தப் போராட்டத்தில் மற்றொரு முக்கிய வரலாற்று நிகழ்வும் இணைந்திருந்ததை இளைய சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியது மிகவும் அவசியம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. 1949ஆம் ஆண்டு பிரிந்தது. ஓராண்டு காலத்தில் 1950ஆம் ஆண்டில் இந்த அடக்குமுறை நடந்தது. திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் கடும் பகை பாராட்டிய காலகட்டம் அது. பெரியாரின் ‘பொன்மொழிகள்’ நூலை தடை செய்த அதே நேரத்தில் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலையும் அரசு தடை செய்தது. பெரியார் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச் சாட்டுகள் அண்ணாவின் மீதும் சுமத்தப் பட்டன. அண்ணாவும் பெரியாரைப் போல அபராதம் கட்ட மறுத்து சிறையேகினார். இருவருமே திருச்சி சிறையில் அடைக்கப்பட் டிருந்தனர்.
இருவரும் ஒரே நாளில் விடுதலை செய்யப் பட்டனர். அரசு வெளியிட்ட அறிக்கையும் இரண்டு பேரின் விடுதலையையும் சுட்டிக் காட்டியது. பெரியாருடன் சிறையிலிருந்ததைக் குறித்து அண்ணா விடுதலை பெற்றவுடன் நெகிழ்ச்சியுடன் ஒரு கட்டுரை தீட்டினார்.
“திருச்சியில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி! பெரியாரும் அதே நாளில் அதே விதமான தண்டனை பெற்ற அதே சிறைக்கு வந்தார்.
‘ஆரிய மாயை’ என்னும் ஏடு தீட்டிய தற்காக எனக்குச் சிறை.
‘பொன்மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை.
திருச்சி கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள்; தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர். அதைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம். எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அன்புக் கணையையும் ஏவினால் என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன்.
பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள்; இங்கு சிறிது நேரம்; அங்கு சிறிது நேரம்; இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியே வர முயற்சிக் கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்று விடுவேன்.
இப்படிப் பத்து நாட்கள்.
நாளைய தினம் எங்களை விடுவிக் கிறார்கள் – முன் தினம் நடுப்பகலுக்கு மேல் ஓர் உருசிகரமான சம்பவம் நடைபெற்றது. பெரியாருக்கு வேலைகள் செய்து வந்த ‘கைதி’ என் அறைக்குள் நுழைந்து, ‘அய்யா தரச் சொன்னார்’ என்று சொல்லி, என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத் தான். கையில் வாங்கியதும் என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோது கண்ட காட்சிகளின் மீது சென்றது.
மறுநாள் திடீரென்று விடுதலை கிடைத்தது. அந்த வேடிக்கையும் கேள், தம்பி! எங்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே வெளியே தெரிந்து விட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் வெளியே ஏற்பாடுகள் செய்யத் தொடங்கிவிட் டிருந்தனர். நமது (தி.மு.) கழகத்தார் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு நேரத்தை மறந்து விட்டனர்; எனவே சிறைக் கதவு திறக்கப் பட்டு எங்களை வெளியே அனுப்பியதும் வாசற்படியருகே பெரியாரை அழைத்துச் செல்ல வந்தவர்கள் கொண்டு வந்த மோட்டார்தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர். இது போதாதென்று போட்டோ எடுப்பவர் ஒருவர் ஓடி வந்தார். ‘இருவரும் அப்படியே நெருக்கமாக நில்லுங்கள்’ என்று போட்டோ எடுத்துவிட்டார். அது வெளி யிடப்படவில்லை… வேதாசலம் அவர்கள் வீடு வரையில் சென்று அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன்” என்று நெகிழ்ச்சியுடன் எழுதினார் அண்ணா.
பிறகு, ‘பொன்மொழிகள்’, ‘ஆரிய மாயை’ மீதான தடை நீக்கப்பட்டது. பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு நியமித்த விழாக்குழுவின் பரிந்துரையை ஏற்று 15.5.1979 அன்று ‘பொன்மொழி’ நூலின் மீதான தடையை நீக்கி அரசு ஆணை பிறப்பித்தது. அப்போது எம்.ஜி.ஆர். தலைமை யிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. ஆரியமாயை மீதான தடையை நீக்கி தி.மு.க. ஆட்சி அண்ணாவின் நூல்கள் அனைத்தை யும் அரசுடைமை ஆக்கியது.
பெரியார் முழக்கம் 07032019 இதழ்