அய்.நா. ஆய்வே அம்பலப்படுத்துகிறது: உலகமயமாக்கலின் படுதோல்வி – முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

உலகமயமாக்கல் – தனியார் மயமாக்கல் – தாராளமயமாக்கல் கொள்கை – ஏற்றத் தாழ்வுகளை ஆதரித்து பெரும் நிறுவனங்களின் சுரண்டல்களை அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை அய்.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பே அம்பலப்படுத்தியிருக்கிறது.

உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் (Liberalisation, Privatisation, Globalisation) இவை மூன்றும்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும், வளர்ச்சி அதிகரிக்கும், செல்வம் பெருகும், மக்களின் வாழ்வு சிறக்கும் என்ற தாரக மந்திரம், 1980களிலிருந்து ஒலிக்கத்துவங்கி 1990களில் வலுப்பெற்றது. இக்கருத்தாக்கத்தின் அரசியல் வலிமை என்பது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஆதரவினால் கூடுதலானது. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் இதனை அனைத்து நாடுகளுக்குமான சர்வ ரோக நிவாரணியாக பரிந்துரைக்கத் துவங்கின. பரிந்துரைத்தன என்பதைவிட அவைகளின் கட்டளைகளாவே இவை மாறின. இதன்விளைவாக வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி பல வளரும் நாடுகளும் இக்கொள்கைகளை ஏற்று செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலை எற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, உலகளவில் தடையற்ற வர்த்தகம் தழைக்கும் வகையில் பொதுவான சட்டதிட்டங்களை உருவாக்கி செயல்படுத்துமுகமாக உலக வர்த்தக அமைப்பு (WTO) தோற்றுவிக்கப்பட்டது. நாடுகள் பலவும் கடந்த முப்பது ஆண்டுகளாக இப்பாதையில் பயணித்து வருகின்றன. இப்பாதை உலகத்தை எங்கு கொண்டு சேர்த்துள்ளது? என்பதை தற்போது வெளிவந்துள்ள ஓர் அறிக்கை படம்பிடிக்கிறது.ஐக்கிய நாட்டு வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு (United Nations Conference on Trade and Development – UNCTAD) வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான இந்த ஆண்டு அறிக்கையை (Trade and Development Report) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலக மயமாக்கல், தடையற்ற வர்த்தகம் ஆகியவற்றால் தேனாறும் பாலாறும் ஓடும் என்ற மாயத்தை சுக்குநூறாக உடைத்தெறிகிறது.

வர்த்தகம்தான் மூன்றாம் உலக நாடுகளை முன்னேற்றும் என்பதும் அதன் வாயிலாக உலக மயமாக்கல்தான் வறுமையில் உழலும் மக்கள் உய்வு பெறுவர் என்பதும் ஒரு மாயை என நிறுவுகிறது இந்த அறிக்கை. உலக மயமாக்கலின் பொற்காலமாகக் கருதப்படும் கடந்த 40 ஆண்டுகளை இந்த அறிக்கை ஒரு மோசமான காலமாக சித்தரிக்கிறது. என்ன நடந்து இக்காலத்தில்?

இந்த அறிக்கையின்படி, இந்த நாற்ப தாண்டுகளில் நிதித்துறை பித்தலாட்டங்கள் தலைவிரித்து ஆடின. பெருநிறுவனங்கள் கட்டற்ற அதிகாரம் பெற்றன. அரசுகளின் பொருளாதார சிக்கனம் தலைதூக்கியது. அனைத்துமட்ட மக்களும் உலகமயமாக்கலி னாலும் தடையற்ற வர்த்தகத்தினாலும் பயனுறுவர் என்பது தவறான பசப்புரையே. முதல் உலகப் போருக்கு முன் உலகில் பல வியத்தகு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. உலகம், தந்திக் கம்பங்களால் இணைக்கப்பட்டது. தண்டவாளங்களும் நீராவிக் கப்பல்களும் உலகப் பரப்பை இணைத்தன. இதே சமயத்தில்தான் கட்டற்ற முற்றுரிமைகள் தழைத்தோங்கின. நிதிச் சூது விளையாட்டு பல்கிப் பெருகியது. இவை அனைத்தின் விளைவாக மக்களிடையே சமமற்ற நிலை உச்சம் பெற்றது. நாடுகளின் பொருளா தாரங்களில் செழுமையும் தேக்கமும் அடிக்கடி நிகழ்ந்தன.

சுதந்திர வர்த்தகத்தை ஆதரிப்போர் மதவெறி கொண்டவர்கள் போல் நடக்கிறார்கள். அவர்களுக்கு சமுதாயத்தின் பரந்துபட்ட நலனில் அக்கறை இல்லை. மாறாக, முதலாளியத்தின் நலனையும் மூலதனத்தின் நலனையும் முன்னிறுத்துகின்றனர். இதனை வெளிக்காட்டாமல் சமுதாய நலனைப் பேணுவது போன்று சான்றுகளையும், தத்துவங் களையும் உருவாக்குவதெல்லாம் முதலாளி களின் நலன்களை பேணுவதற்கு மட்டுமே. தற்போது உலகில் நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் போர்கள் அனைத்தும் சமமற்ற உலக மயமாக்கலின் வெளிப்பாடே.

உச்சம்பெற்ற உலக மயமாக்கல் எவ்வாறு செயல்படுகிறது? அது செயல்பட ஆதாரமாக இருப்பது லாபமும், நிலையில்லாத முதலீடும் ஆகும். இவையிரண்டையும் ஆள்பவை பெரு நிறுவனங்கள், இப்பெரு நிறுவனங்கள் தங்கள் சந்தை ஆதிக்கத்தைக் கூடுதலாக்கி வருகின்றன. மேலும் இவை கட்டற்று செயல்பட ஏதுவாகத் திகழ்வது நாடுகளுக்கிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகும். இத்தகைய ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டி இப்பெரு நிறுவனங்கள் நாடுகளின் அரசுகளை  வலியுறுத்துவதும், அழுத்தம் கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இத்தகைய ஒப்பந்தங்கள் அந்ததந்த நாடுகளின் பொது வெளியில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படுவதே இல்லை. இவ்வாறு உருவாகும் அமைப்பு ஒரு தனி உலகம். அந்த உலகத்தில் பணமும் அதிகாரமும் பின்னிப்பிணைந்து செயல்படு கின்றன. இதனால் பணம் மற்றும் முதல் ஆகியவை கட்டுப்பாட்டு அமைப்புகளின் கழுகுப் பார்வையிலிருந்து தப்புகின்றன. கட்டுப்பாட்டு அமைப்புகளும் மிக அரிதாகவே இம்முதலின் செயல்பாட்டில் தலையிடுகின்றன.

UNCTAD அறிக்கையின்படி, உலகப் பொருளாதாரம் மேற்கூறியவாறுதான் இயங்கு கிறதே தவிர, பொருளாதாரப் பாடப்புத்தகங் களில் காணப்படுவது போல் பொருளாதாரம் இயங்குவதில்லை. புத்தகத்தில் படிப்பதெல்லாம் ஒரு மகிழ்ச்சியளிக்கும் கற்பனைக் கதையாக விளங்குகிறது. உலகமயமாக்கலினால் சீனா பெரும் பயன்பெறவில்லையா? சீனாவைப் போன்று பல நாடுகளும் பயன் பெறவில்லையா? சீனாவும், சில கிழக்கு ஆசிய நாடுகளும் பயன் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால், அவை விதிவிலக்குகள். இந்நாடுகளின் வெற்றி மகிழ்ச்சிக்குரியவையே. ஆனால், உலகமயமாக்க லினால் பெரும்பாலான நாடுகள் துயரைச் சந்தித்துள்ளன. மேலும், சீனத்தின் வெற்றியை உலகமயமாக்கலினால் மட்டுமே நிகழ்ந்தது என சுருக்கிவிட முடியாது. தேர்ந்தெடுத்த சில தொழில்துறைகளை நவீனப்படுத்தியது சீனா. மதிப்பு குறைந்த பொருள்களை உற்பத்தி செய்யத் துவங்கி விரைவில் மதிப்பு கூடிய பொருள்களை உற்பத்தி செய்யும் வல்லமையை அது வளர்த்துக் கொண்டது. உற்பத்தி செலவு குறைவாக இருந்ததை நன்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது. அதனுடைய மிகப் பெரிய உள்நாட்டு சந்தையும் குறைந்த உற்பத்திச் செலவையும் கணக்கில் கொண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் தொழில் தொடங்க வந்தபோது அந்நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை எளிதாகவும் இலகுவாகவும் சீனா பெற்றுக் கொண்டது. மேலை நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களை ஒத்த பெரு நிறுவனங்களை முனைப்புடன் வளர்த்தெடுக்க சீனா தயங்க வில்லை. இதில் என்ன வேடிக்கையென்றால், மேலை நாடுகள் தாங்கள் வளரும்போது என்ன தந்திரங்களைக் கையாண்டனவோ அதே தந்திரங்களைத்தான் சீனம் தற்போது கையாள்கிறது. ஆனால், சீனம் இவற்றை கைக்கொள்ளும் போது மேலை நாடுகள் எரிச்சலடைகின்றன, கூக்குரலிடுகின்றன.

நாடுகள் முன்னேற அவை உலகம் தழுவிய உற்பத்திச் சங்கிலியில் (தொடர் இணைப்பு களில்) இடம்பெறுவது அவசியம். ஆனால், இந்த உற்பத்திச் சங்கிலிகளின் தன்மை எத்தகையதாக உள்ளது இப்போது? அய்.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பின்அறிக்கை கூறுவது யாதெனில், இந்த சங்கிலிகளின் பலனை வலுவான சில பெரு நிறுவனங்களே பெறு கின்றன என்பதாகும். இச்சங்கிலியில் பெரு இலாபம் ஈட்டும் கண்ணிகள் அந்நிறுவனங் களின் வசம் உள்ளன. மதிப்பு கூட்டும் கண்ணிகளை, ஆக்கிரமித்துள்ளன. இது மட்டுமல்லாது அவை உரிமை கொண்டாடும் அறிவுசார் சொத்துரிமையை அதீத இலாபத்திற் குத்தான் அளிக்கின்றன. இப்பொருள்களை உற்பத்தி செய்யும் வளரும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பெறும் இலாபம் சொற்பமே. பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய அளவிலான இலாபத்தை தொடர்ந்து குவித்து வருகின்றன. இதன் விளைவாக உலகளவில் செல்வப் பகிர்வு பெரும் ஏற்றத் தாழ்வை சந்திப்பதால் சமமின்மை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உற்பத்தி சங்கிலியை ஆளும் நிறுவனங்களின் இலாபப் பங்கு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளை யில் உற்பத்தியில் ஈடுபடும் கண்ணிகளின் இலாபப் பங்கு குறைவாகவும், குறைந்தும் வருகின்றன.

இச்சூழலை மாற்றியமைக்க வளரும் நாடுகள் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும் என அய்.நா.வின் UNCTAD அறிக்கை அறிவுறுத்துகிறது. உலகமயமாக்கலின் நெகிழ்வுத் தன்மை, உற்பத்தித் திறன், போட்டிச் சந்தை குறித்தெல்லாம் அதன் ஆதரவாளர்கள் பெருமை பேசி வருவது வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே. உண்மையில் உலக மயமாக்கலினால் நாடுகள் வலுவிழந்து மந்தமாகவும், பிளவு பட்டும் நிற்கின்றன. ஒருபுறம் ஏற்றத்தாழ்வு பல்கிப் பெருகுகிறது. மறுபுறம் கடன்சுமை அதிகரிக்கிறது. நிதி மோசடிகள் மீண்டும் தலைவிரித்து ஆடுகின்றன. பொருளாதார அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை குன்றி வருகின்றன. இதைவிட சீரழிவுப் பயணத்திற்கு வேறு என்ன வேண்டும்? என வெதும்பி நிற்கிறது அந்த அறிக்கை.

இந்தியத் திருநாடும் இப்போக்கிற்கு விதிவிலக்கல்ல, தாராளமயக் கொள்கை, உலகமயமாக்கல் என்ற மாயத்தில் மீண்டும் மீண்டும் நிதி மோசடிகளை அனுமதிக்கின்றன  இந்தியாவின் கொள்கைகள். ஒரு மோசடியி லிருந்து நாம் பாடம் கற்பதில்லை. மாறாக, நிதி மோசடிகளை என்ன ஏது என்று தெரியாமலயே கொண்டாடியும் பேசியும் வரும் நமது ஊடகங்களும், அறிவாளிகளும் யாருக்காக செயல்படுகிறார்கள்? இவை குறித்த கேள்விகளை எழுப்பினால், நீர்த்துபோன தத்துவங்களை கொண்டவர்கள் நீங்கள் என நம்மைச் சுட்டும் “அறிவுஜீவிகள்” நிறைந்த நாடு நம் நாடு. இதைவிட அபாயம் என்பது இதனையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசு இந்த இயக்கத்தின் ஒரு அடிமையாகவும், பயனாளியாகவும், பாதுகாவலனாகவும் மாறிப்போனதுதான். இதற்குத் தீர்வு மக்கள் பெறும் விழிப்பில்தான் இருக்கிறது; அதற்கு பிறகாவது பாடம் பெறுவார்களா?

(மின்னம்பலம்)

நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்

You may also like...