பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!
திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாற்றல் மிக்க தோழர்கள் தமிழர்களின் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிக்கப் படும் கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
2018 ஆக. 20இல் தொடங்கி 26இல் பெரம்பலூரில் நிறைவு விழா மாநாடு;
6 முனைகளிலிருந்து புறப்பட்டு 180 ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள்.
எத்தனையோ தடைகளைத் தகர்த்து ‘மனு சாஸ்திரம்’ நமக்கு மறுத்த கல்வி உரிமையை மீட்டு நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள் இப்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கியது நமக்கான வகுப்புவாரி உரிமை.
1950இல் தமிழ்நாட்டில் பின்பற்றி வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. பெரியார் போராடினார்; தமிழகம் கொந்தளித்தது. இந்திய அரசியல் சட்டம் பெரியார் நடத்திய போராட்டத்தால் முதன் முதலாக 1951இல் திருத்தப்பட்டது.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக் கான போராட்டத்தையும் வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தையும் 1950இல் பெரியார் இணைத்தே நடத்தினார் என்பதை நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும்.
ஆம்; நமது கைத்தறித் தொழி லாளர்களுக்காக சென்னை பாரி முனையிலிருந்த வடநாட்டு செல்லாராம்ஸ் துணிக் கடை முன்
72 நாள்கள் தொடர் மறியல் நடத்தி பெரியார் தொண்டர்கள் கைது ஆனார்கள்.
இப்போதும் அதே நிலைதான். சமூகநீதிப் போராட்டத்தையும் வடவர் எதிர்ப்புப் போராட்டத்தையும் இணைந்து நடத்தும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம்.
ஓமந்தூரார் – காமராசர் – அண்ணா – கலைஞர் – எம்.ஜி.ஆர் ஆட்சிகளில் இடஒதுக்கீட்டு வேலை வாய்ப்புகளில் நாம் பெற்ற உரிமைகளை இழந்து நிற்பதையும் தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக்காரர்கள் குவிக்கப்படும் ஆபத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்குமே இப்பயணம்.
- ‘நீட்’ மிரட்டுகிறது.
- மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீடு பறி போகிறது.
- பல்கலைக்கழக மான்யக் குழு கலைக்கப்பட்டு பல்கலைக் கழகங்கள் தொடங்கும் உரிமை மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படு கிறது.
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டு இந்திக்காரர்கள் குவிந்து வருவதைத் தடுத்து நிறுத்தா விட்டால் தமிழகமே வடநாடாகிவிடும்! எனவே தான் சமூக நீதியையும் வடவர் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் பெரியார் எதிர்த்த அதே கடமையை இன்று நாம் நிறைவேற்றப் புறப்பட்டிருக்கிறோம்.
2018 ஆக.26இல் பெரம்பலூரில் அனைத்து பரப்புரைக் குழுக்களும் சங்கமிக்கின்றன. கருஞ்சட்டைக் கடலைப் பார்க்கப் போகிறோம்.
பயணத்தில் பங்கேற்க வாய்ப்பில்லாத தோழர்களே! தமிழின உணர்வாளர்களே! பெரம்பலூர் நோக்கி அன்புடன் அழைக்கிறோம்!
பெரியார் முழக்கம் 16082018 இதழ்