எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

ராஜாவை வளைக்கும் சட்டப் பிரிவுகள்!

பெரியார் சிலை பற்றி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலைதலத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ராஜாவின் பதிவைத் தொடர்ந்தே திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார்.

அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி ஜெயரட்சகன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் துரை அருணிடம் பேசினோம்.

“பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஹெச்.ராஜா தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையில் பகைமையை மூட்டும் வகையில் பேசிவருகிறார். சமூக வலைதளத்தில் பெரியாரைப் பற்றி ஹெச்.ராஜா எழுதிய நிலையில் திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. எனவே அவர் மீது விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சி.எஸ்.ஆர். நகல்தான் கொடுத்தார்களே தவிர அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து மார்ச் 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தோம். அங்கேயும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ (இரு தரப்புக்கு இடையே வன்முறையைத் தூண்டும்படி பேசுவது, எழுதுவது), 506/1,2 குற்றமுறு மிரட்டல் விடுத்தல், 66 ஏ தகவல் தொழில் நுட்பச் சட்டம் (2000) ஆகிய சட்டப் பிரிவுகளின்படி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது . இந்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். எங்கள் மனு நம்பர் ஆகியிருக்கிறது. வரும் செவ்வாய்க் கிழமையன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்’’ என்று தெரிவித்தார் துரை அருண்.

மேற்கூறிய சட்டப் பிரிவுகளின்படி ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கான முகாந்திரங்கள் தெளிவாக இருப்பதால், வரும் செவ்வாய்க்கிழமை இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட சட்டப்படி அதிக வாய்ப்புகள் இருப்பதாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
நன்றி மின்னம்பலம்

You may also like...