ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் – விடுதலை இராஜேந்திரன்

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டதைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் பெரியார் சிலைகள் உடைக் கப்படும்’ என்று பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப் பட்டது. அது, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தனக்குத் தெரியாமல் தன் அட்மின் அந்தக் கருத்தை வெளியிட்டுவிட்டதாக ஹெச்.ராஜா சொல்லி, அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் கேட்டோம். அவர், நம்மிடம் தெரிவித்த கருத்து:

“ஹெச்.ராஜாவின் முகநூலில் வெளியான கருத்து தமிழகத்தில் எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் மனதையும் அந்தக் கருத்து புண்படுத்தியிருக்கிறது. ஹெச்.ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால், கோழைத்தனமான, தொடைநடுங்கி அரசாக தமிழக அரசு இருப்பதால், அது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. ஒரு கார்ட்டூனை இணையதளத்தில் வெளியிட்டார் என்பதற்காக கார்ட்டூனிஸ்ட் பாலாவை உடனே கைது செய்து சிறையில் அடைத்தார்கள். முகநூலில் ஒரு கருத்து தெரிவித்தார் என்பதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சிமீது வழக்குப்பதிவு செய்தார்கள். ஆனால், சமூகத்தில் வன்முறையைத் தூண்டக்கூடிய கருத்தை வெளியிட்ட ஹெச்.ராஜாமீது, வன்முறை நடந்த பிறகும்கூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்புச் சட்டம் அவர் மீது ஏன் பாயவில்லை? அவருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? ஹெச்.ராஜா என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா?

ஏற்கெனவே, ‘பெரியாரை அன்றைக்கே செருப்பால் அடித்திருக்க வேண்டும்’, ‘வைகோ தெருவில் நடமாட முடியாது’ என்றெல்லாம் பேசியவர்தான் இந்த ராஜா. ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் தாயாரை இழிவுபடுத்திப் பேசினார். எல்லாமே வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுக்கள். ஆனால், அவர்மீது பி.ஜே.பி தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘அது அவருடைய சொந்தக் கருத்து’ என்று தமிழிசையும், ‘தாமதமாக விளக்கம் கொடுத்துவிட்டார்’ என்று பொன்.ராதாகிருஷ்ணனும் சொல்கிறார்களே தவிர, ‘ஏன் இப்படிப் பேசினீர்கள்?’ என்று ராஜாவிடம் கேட்கக்கூட இல்லை.

இவ்வளவு வன்முறை நிகழ்ந்த பிறகு, தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட பிறகு, தமிழகத்தில் இனி பி.ஜே.பி தலைகாட்ட முடியாது என்ற சூழ்நிலை வந்த பிறகு, இப்போது தப்பித்துக்கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சாதியைச் சொல்லி திட்டினால், திட்டியவர்மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாயும். சாதியைச் சொல்லித் திட்டிவிட்டு, பிறகு அதை நான் வாபஸ் வாங்கிவிட்டேன் என்று சொன்னால், சட்டம் விட்டுவிடுமா? அந்த வார்த்தை ஒரு மனிதனை எப்படி புண்படுத்துமோ, அதுபோல இவரின் பதிவும் தமிழ்ச் சமூகத்தைக் கடுமையாக வேதனைப்படுத்தியுள்ளது. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அவரை மன்னிக்கவே முடியாது.’’

நன்றி – ஜூனியர் விகடன் 14/03/2018 இதழ்

You may also like...