பார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி ஊழல் கொள்ளை
பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் உஷா ஆனந்த சுப்ரமணியம் என்ற பார்ப்பனப் பெண் அதிகாரியும், அய்.சி.அய்.சி. வங்கி நிர்வாக இயக்குனர் என்.எஸ். கண்ணன் என்ற பார்ப்பனரும் இப்போது சி.பி.அய். விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட் டிருக்கிறார்கள். திருமதி உஷா அனந்த சுப்ரமணியம் இப்போது அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் தேசிய மய வங்கிகளின் தலைமைப் பொறுப் பிலுள்ள பார்ப்பன அதிகாரிகள், தொழிலதிபர் களுக்கு வழங்கிய கடன்கள் குறித்து ஆய்வு செய்ய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி களில் பொது மேலாளர் – நிர்வாக இயக்குனர் போன்ற உயர்பதவிகளில் 99 சதவீதம் பேர் பார்ப்பனர்கள் ஒரு சதவீதம் பேர்கூட பிற்படுத்தப் பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ இல்லை என்று 2017 ஜனவரியில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது.
மற்றொரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளிக் காணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும் கடந்த ஐந்தாண்டுகளில், 8,670 வழக்குகளில் 612.6 பில்லியன் (61ஆயிரத்து 260 கோடி) ரூபாய் அளவிற்கு ‘கடன் மோசடி’ நடைபெற்றிருக்கிறது. நீரவ் மோடியும், மொகுல் சோக்சியும் பாஜகவின் தலைவர்கள் சிலருக்கு மிகவும் வேண்டியவர்கள். இந்த அரசாங்கத்தால் மிகவும் பயனடைந்து வரும் அனில் அம்பானிக்கும் இவர்கள் மிகவும் வேண்டியவர்கள்.
இந்திய வங்கித்துறையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரும்அளவில் மோசடி நடந்திருக்கிறது. இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் 85ஆவது நபராக இருக்கக்கூடியபேர்வழியான நீரவ் மோடியும் அவரது மாமா மொகுல் சோக்சி என்பவரும் வங்கி பார்ப்பன அதிகாரிகளுடன் கூட்டுச்சதி செய்து, பலமுறை போலி புரிந்துணர்வு கடிதங்களைப் பெற்று 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிப் பணத்தை மோசடியாகக் கையாடல் செய்திருக்கின்றனர். 2011ஆம் ஆண் டிலேயே துவங்கிய இவர்களின் மோசடி, இப்போது 2017இல் மோடி யின் ஆட்சியில் உச்சத்திற்கு வந்திருக்கிறது.
நீரவ் மோடியும், அவரது குடும்பத் தினரும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் சிபிஐ விசாரணை மேற் கொள்வதற்கு முன்பாகவே, ஜனவரி முதல் வாரத்திலேயே, நாட்டை விட்டு மிகவும் பாதுகாப்பாக வெளியேறி விட்டார்கள். இதே போன்று தான் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோரின் வழக்குகளிலும் நடை பெற்றன. நாட்டைவிட்டு வெளி யேறியுள்ள நீரவ் மோடி, சுவிட்சர் லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி யுடனும் இதர இந்திய வர்த்தகப் பிரமுகர்களுடனும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண் டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் என்பது அதோடு முடிந்து விடவில்லை. அது பல வங்கிகளில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக் கிறது. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் இது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
வங்கிகள் சமீப காலத்தில் மேற் கொண்ட அதிவேகமான தாராளமய நடவடிக்கைகளால் முறைகேடான முதலீடுகளை ஏற்பதற்கும், அவை வழக்கமாக மேற்கொள்ளும் கண்டிப்பான விதிமுறைகளை கைகழுவு வதற்கும் இட்டுச் சென்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடை பெற்றுள்ளது போலவே பல வங்கி களிலும் ஊழல்கள் நடைபெற்றிருப் பதற்கு, அடிப்படையான காரணம் ஆட்சியாளர்கள் பின்பற்றும் தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகள் என்று மட்டும் கூறிவிட முடியாது. நவீன தாராளமயக் கொள்கையைத் தூக்கிப் பிடித்திடும் பேர்வழிகள் இப்போது தங்களுக்கு கடன்கள் வழங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையும், பொதுத் துறை வங்கிகளையும் சீர்குலைக்கத் துடிக்கிறார்கள். பொதுத் துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும் குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர். தலைமை பொருளாதார ஆலோசகர் பார்ப்பனர் அரவிந்த் சுப்பிரமணியம், வங்கிகளில் ஊழல் நடைபெறுவதைத் தவிர்த்திட, அவற்றின்மீது தனியாரின் பங்களிப்பினைஅதிகரித்திட வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங் கும் ஆய்வுப் பிரிவும் (இன்ஸ்பெக்ஷன் டிபார்ட் மெண்ட்) இதுகுறித்து வாயைத் திறக்காமல் மவுனம் சாதிக்கிறது. வங்கி களும், வங்கியல்லாத நிதி நிறுவனங் களும் சுயமாகவே சான்றிதழ்கள் கொடுப்பது அனுமதிக்கப்பட்டன. இவை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப் படும் என்று விதி இருந்தாலும் எந்த ஆய்வும் நடப்பதில்லை. பார்ப்பன அதிகார முறைகேடுகள் நாட்டையே திவாலாக்கி வருகின்றன.
கடந்த காலங்களில் தனியாரிடம் இருந்த வணிக வங்கிகளின் செயல் பாடுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் பெற்றபின் 1969 வரை செயல்பட்டுவந்த 559 தனியார் வணிக வங்கிகள் தகர்ந்து தரைமட்ட மாகின. இதன் காரணமாக அவற்றில் முதலீடு செய்திருந்த சேமிப்பாளர்கள் நிலை அதோ கதியானது. வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டபின்னர், மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வியைச் சந்தித்த 25 தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டன. இதில், “புதிய தலைமுறை தனியார் வங்கி” என்று கூறப்பட்ட தி குளோபல் டிரஸ்ட் வங்கியும் அடக்கம்.
பெரியார் முழக்கம் 08032018 இதழ்