சென்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு அகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன

வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் சார்பில் 10.2.2018 சனி மாலை 6 மணியளவில் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில், ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். தொடர்ந்து பெ. முத்துக்குமார்  தலைமையில் பொதுக் கூட்டம் தொடங்கியது. ‘கடலோர மக்கள் களம்’ அமைப்பின் தலைவர் தோம. ஜான்சன், தமிழ் தேசியக் கட்சித் தலைவர் ஆ.கி. ஜோசப் கென்னடி, வழக்கறிஞர் துரை. அருண் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். விடுதலை இராசேந்திரன் தனது உரையில், தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் வஞ்சிப்பது நடுவண் அரசும், பார்ப்பனர்கள் உயிர்ப்புடன் இப்போதும் பாதுகாத்துவரும் பாசிசத் தத்துவமான பார்ப்பனியமும் தான் என்று எடுத்துரைத்து வைரமுத்துவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரி, திராவிட ஆட்சிகளை வீழ்த்த பா.ஜ.க. நடத்திய பார்ப்பன யாகம், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அனுமதிக்க மறுக்கும் மோடி ஆட்சி, தமிழர் நாகரிக சிறப்புகளை விளக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை முடக்கும் நடுவண் ஆட்சி ஆகிய பிரச்சினைகளை விளக்கிப் பேசினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் கொல்லைப்புற வழியாகக் குவியும் வடநாட்டுக்காரர்கள், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து மருத்துவம் படிக்க வரும் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களின் மருத்துவக் கனவுகளைச் சிதைக்கும் ‘நீட்’ தேர்வு. மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் காலம் வரை காத்திருந்து, ‘நீட்’டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பார்ப்பன நீதிபதியின் முன் அவசரமாக விசாரணைக்குக் கொண்டு வந்து, நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமலே நயவஞ்சகமாக திணிக்கப்பட்ட ‘நீட்’ தேர்வு சதிகளை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார். ‘தனியார் மயம்’ என்ற கொள்கை பார்ப்பனமயமாக்கியது என்றால் அகில இந்திய தேர்வு முறைகளால் தமிழ்நாடு வடவர் மயமாகிறது என்று விளக்கினார். தோழர் குகன் நன்றி கூறினார். கூட்டத்தினர் கலை யாது இறுதி வரை கருத்துகளை செவிமடுத்தனர். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் யேசுகுமார், செந்தில் எப்.டி.எல்., ராஜீ, சங்கீதா, தெட்சிணா மூர்த்தி, பாஸ்கரன், முனுசாமி உள்ளிட்ட தோழர்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 15022018 இதழ்

You may also like...