ஸ்ரீ மத் சடகோப இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு – கருத்தரங்கம்

ஓர் வேண்டுகோள் !

அனைவருக்கும் வணக்கம்.

இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் !

எதிர்வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண மண்டபத்தில் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த திட்டமிட்டிருந்த கருத்தரங்கை நடத்தினால் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கற்பனைத் திறன் மிகுந்த கொளத்தூர் ஆய்வாளர் முடிவுக்கு வந்துள்ளார்.

எனவே நாம் அனுமதிக்கு விண்ணப்பிக்காத அந்த நிகழ்வை நமக்கு சொந்தமான பெரியார் படிப்பகத்துக்குள் கலந்து உரையாடுவதையே, நுழைவுக் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே வந்து நிகழ்வைக் கேட்கலாம் என்று அறிவித்து நடக்கும் உள்ளரங்கு கூட்டத்தையே நடத்த அனுமதி மறுத்துள்ளார்.

மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டு கதவுகளில் வருவாய்த்துறை அலுவர்கள் முன்னிலையில் நேற்று 31.01.2018 அன்று ஒட்டியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி நேற்று 31.01.2018 அன்று காலை 09.01 மணிக்கு என்னை கைபேசியில் அழைத்து 3 நிமிடம் 20 விநாடிகள் பேசிய ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் (அவர்தான் மேட்டூர் துணைக் கண்காணிப்பாளர்(பொறுப்பு) ஆவார்.) ஏசு ஆய்வுக்குரியரே! அல்லா ஆய்வுக்குரியவரே! என்று நடத்தாமல் ஏன் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்று மட்டும் கருத்தரங்கம் நடத்துகிறீர்கள் என்ற ஓர் அறிவுப்பூர்வமான கேள்வியை எழுப்பினார். நானும்,’அய்யா, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் எழுப்பும் கேள்விகளை அப்படியே கேட்கிறீர்களே?’ என அவரது எஜமான விசுவாசத்தைப் பாராட்டி விட்டு ‘எனக்கு என்னமோ சோறு மட்டும் சாப்பிட விருப்பமாக உள்ளது; ஆனால் ஏன் மலம் சாப்பிட மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்! நீங்களோ, உங்களைக் கேள்வி கேட்கச் சொன்னவர்களோ அதை விரும்பி சாப்பிடுவதற்கு எப்போதாவது தடை சொல்லி இருக்கிறேனா?’ என்று மிகவும் பணிவாகக் கூறினேன். ”அந்தத் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினால் 153 A பிரிவில் ரிமாண்ட் செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என்று குலைநடுங்க வைக்கும் ஒரு செய்தியைச் சொன்னார். (ஒலிப்பதிவு எம்மிடம் உள்ளது; தேவை எனில் வெளியிடுவோம்.) நானும் மாவட்ட கண்காணிப்பாளர் கைபேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.

பின்னர் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளரையும், அவரது உதவியாளராக உள்ள தனிப்பிரிவு ஆய்வாளரையும், கைபேசியில் அழைத்துப் பார்த்தேன். அழைப்பை எடுக்கவில்லை. சரி,ஏதோ முக்கியப் பணியில் இருப்பார்கள் என மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஜனநாயக நாட்டில் அரங்கத்திற்குள்ளும், எங்கள் படிப்பகத்திற்குள்ளும் கூட பேச கருத்துரிமை இல்லையா? என்பதையும் – 29.01.2018 அன்று சேலம் மாவட்ட தமிழ்நாடு பிராமண சங்கத்தின் சார்பிலும், இந்து முன்னணி செயலாளர் கடிதத்தையும் குறிப்பிட்டு அனுமதி மறுத்திருக்கிறீர்களே, எங்கள் கருத்தை மட்டும் ஏன் கேட்கத் தோன்றவில்லை என்பதையும் – பேருந்து, சந்தை, திருவிழா ஆகியவற்றில் திருட்டு, ஜேப்படி, சச்சரவுகள் நடைபெறலாம் என்று சந்தேகம் வந்தால் பேருந்துகளையும், சந்தை, திருவிழாக்களையும் தடை செய்வீர்களா? அல்லது திருடர்களை, சச்சரவில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க முயற்சி செய்வீர்களா? – என்பவற்றுக்கு அவர்களது அறிவார்ந்த, பொறுப்புணர்வு மிக்க பதில்களைப் பெற விரும்பிய எனது ஆசையில் மண்விழுந்து விட்டதே என்ற அளவில் கவலையடைந்ததோடு என் முயற்சிகளையும் கைவிட்டுவிட்டேன்.

அப்புறம்தான், அய்யய்யோ, சட்டத்தைப் பேணுகிற காவல்துறையிடம் எதிர் கேள்வி கேட்டால் என்னிடமே சட்டம் பேசுகிறாயா? எனக் கேட்டு அடியும், பொய் வழக்குகள் புனைவதும் நடக்குமே என்கிற புரிதல் நம்மை கொஞ்சம் அச்சுறுத்தியது!

காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இருக்கிறதே? குண்டாந்தடிகள் இருக்கின்றனவே? ஆயுத பூஜையில் வைத்து சந்தனம் குங்குமம் வைத்த துப்பாக்கிகள் இருக்கின்றனவே? என்பவை எல்லாம் வேறு நினைவுக்கு வந்து தொலைத்தன!

சரி,சரி, நடந்தவை நடந்தைவைகளாக இருக்கட்டும் !
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் ! என்ற புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகவே காவல்துறையில் ஆணையை மதிக்கும் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக கீழ்கண்ட முடிவுக்கு வந்துவிட்டேன்.

இம்முடிவுகளுக்காக என்னை ’கோழை’ என்றோ, ‘பயந்தாங்கொள்ளி’ என்றோ தயவு செய்து குற்றம் சாட்டவேண்டாம் என மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன்.

அறிவிப்புகள் !

1) 03.02.2018 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ எனும் கருத்தரங்கம் இரத்து செய்யப்படுகிறது.

2) திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி ”ஸ்ரீ மத் சடகோப இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு” என்ற தலைப்பிலும்,
முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் ”ஸ்ரீ ஆண்டாள் திருஅவதாரமகிமை” எனும் தலைப்பிலும் பிரசங்கம் செய்வார்கள்.

3)காலம், கட்டணம், இடம் மாற்றம் இல்லை.

4) நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கவோ, இரத்து செய்யவோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

5) நிகழ்ச்சி இடையில் ஏதாவது காரணத்தால் நிறுத்தப்பட்டால் நுழைவுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.

பின் குறிப்பு :

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு கவிஞர் வைரமுத்து சென்று மன்னிப்பு கேட்காத பட்சத்தில் 03.02.2018 அன்று ஸ்ரீமத் சடகோப ராமானுஜ ஜீயர், இரண்டாவது முறை இட்ட சபதத்தில் உறுதியாய் இருந்து, திருமதி. துர்க்கா ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாலும் அதையும் மீறி, தொடங்கவுள்ள சாகும்வரை உண்ணாவிரதத் தொடக்க விழாவிற்கும், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒருவேளை தீக்குளித்தால் அந்நிகழ்விற்கும் செல்பவர்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் நிகழ்விற்கு வந்து ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கொளத்தூர் தா.செ.மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக்கழகம்

You may also like...