தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்..
தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்..
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலிலிருந்து…
காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரும் திருவிடை மருதூர் சத்திரத்தில் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.
“ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
“உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்..’ என்றேன்.
சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை. தமிழை நீஷப்பாஷையான பிராமணோத்தமர் பேசினால்., அவர் நாக்கினை நீஷப்பாஷை தொட்டு விட்டால், பிரம்மாவின் நெற்றியிலே பிறந்தவர் தீட்டுப்பட்டு விட மாட்டாரா?
தமிழைப் பற்றியும் தமிழர்களைப்பற்றியும் பார்ப்பனர்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது கண்டிப்பாக ஆச்சரியத்தைக் கொடுக்காது.
கோயில் கருவறைக்குள் தமிழன் அர்ச்சகன் ஆனால் சாமி தீட்டாகிவிடும்; தமிழில் வழிபட்டாலும் தீட்டாகி விடும் என்பதுதானே அவர்களின் நிலை.
இந்த உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்கும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார்கள் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டு வருகிறார்கள் என்பதை நாளும் அனுபவித்துக் கொண்டுதானே வருகிறோம்.
ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது சைவப் பழமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்கள்! ஊராட்சி, நகராட்சி, நகரியம், ஒன்றியம் என்கிற அழகிய சொற்களைத் தமிழுக்குத் தந்த பெருமகன் அவர்.
அவர் பேட்டியின் ஒரு பகுதி இதோ:
கேள்வி: சங்கராச்சாரியாரைத் தாங்கள் சந்தித்தது பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறதே. அதன் முழுவிபரம் என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
கீ. இரா: நான் காஞ்சிபுரத்திலே ‘ரேஷனிங்’ ஆபீசராக இருந்தேன். சங்கராச்சாரி மடத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது. அவர்கள் எப்படியும் அரிசி வாங்கி செலவு செய்து கொள்ளலாம் என்றார்கள். நான் சொன்னேன் ‘அய்யா’ இது நியாயமல்ல. எல்லாருக்கும் ஒரு சட்டம்தான். உங்க மடத்துல உள்ள அத்தனைப்பேருடைய கணக்கைக் கொடுங்க. எத்தனை பேர் இருந்தாலும், அத்தனைபேருக் கும் உண்டு என்றேன். யானை இருக்கு குதிரை இருக்கு என்றார்கள். அதற்கும் உண்டு என்றேன். எல்லாம் சொல்லி யும் அவர்கள் கேட்கவில்லை. வெளியிலே போய்ட்டா… கிராமத்துக்குப்போயிட்டடா நாம் எப்படியும் இருந்து கொள் ளலாம். என்று நினைத்து கிராமத்துக்குப் புறப்படத்தயாராக யிருந்தார்கள். அதற்குமுன் சங்கராச்சாரியார் என்னைப் பார்க்கணும் என்று சொன்னாராம். நரசிம்மய்யர் என்பவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலே நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் என்னை வந்து அழைத்தார்.
நான் இந்த வேஷம் கட்டி இருக்கிறேன்… கால் சட்டை மேல் சட்டையோட…. இதோடு அவரை நான் எப்படி பார்க்க முடியும் என்று கேட்டேன். அதெல்லாம் வரலாம் என்றார். சதாரணமாக அவர்களைப் பார்க்கும் போது மேல சட்டை யோடு போகமுடியாது…
கேள்வி: காரியம் ஆகணும் என்கிற பொழுது அவர்கள் எதற்கும் தயாரானவர்களாயிற்றே…
கீ.இரா. ஆமாம்….. ஆமாம்…! சரி… நான் வருகிறேன் என்ற ஒப்புக்கொண்டு போனேன். அவரே வண்டி கொண்டு வந்திருந்தார். அதில் தான் போனேன். ஆச்சாரியார் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தார். அங்கு சென்றேன். இவர் அந்த பக்கம் பிரகாரத்தில் வந்துகிட்டிருக்கிறார்…. அப்பொழுது இந்த நரசிம்மய்யர் என்னைச்சீண்டுகிறார் …. நமஸ்காரம் பண்ணுங்க… நகமஸ்காரம் பண்ணுங்க என்கிறார். விழுந்து கும்பிட சொல்கிறார். நான் ஒன்றும் செய்யவில்லை.
பிரகாரத்தில் ஒரு பக்கத்தில் சுவர் ஓரமாக சங்கராச்சாரியார் நின்று கொண்டார். வலக்கை பக்கமாக நானும் நரசிம்மய்யரும் நின்று கொண்டோம். இடதுகை பக்கம் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நின்றார். இவர் கேள்வி கேட்கிறார்: ரேஷனிங் பற்றி அது என்ன இது என்ன என்று கேட்கிறார். கேள்வி கேட்கிறதை சமஸ்கிருதத்தில் கேட்கிறார். அதை சமஸ்கிருத ஆசிரியர் தமிழில் சொல்கிறார் எனக்கு. தமிழிலே பதில் சொல்கிறேன் நான்.
பேச்சு முடிந்து வெளியே வந்தோம். வெளியே வரும் பொழுது அந்த நரசிம்ம அய்யரைக்கேட்டேன்: என்ன அய்யா, அவர்தான் தமிழிலே சொன்னா தெரிஞ்சிக் கிறாரே… பின்னே ஏன் அவர் சமஸ்கிருதத்தில் பேசுகிறார். என்று கேட்டேன் அதற்குச் சொன்னார்….. இதிலே பாருங்கோ…. இந்த பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் சந்திர மௌலீஸ்வரர் பூஜை இருக்கில்லையா, அதுவரைக்கிலும் எந்த நீசப் பாஷையிலும் பேச மாட்டார் என்றார். எனக்கோ அறைந்துவிடலாமான்னு இருந்தது.
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாவின் கூற்றும் ஆட்சி மொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் அவர்களின் தகவலும் ஒத்துப் போவதிலிருந்து தமிழ்மீது சங்கராச்சாரியாருக்கு இருந்த காழ்ப்பு – வெறுப்பு அவர்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ‘துவேஷம்’ எந்த அளவுக்கு இருந்தது என்பது கனமாகவே விளங்கும்.