காந்தி ஜாதி ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? வெளிச்சத்துக்கு வராத வரலாற்றுத் தகவல்கள்

வர்ணாஸ்ரமத்தையும் ஜாதியமைப்பையும் நியாயப்படுத்தி எழுதிவர்தான் காந்தி. அவர் தீண்டாமையை மட்டும் எதிர்த்தார் என்பது உண்மைதான். ஆனால் ஜாதி அமைப்புக் குறித்து காந்தியின் கருத்துகளை அவரது எழுத்துகளின்அடிப்படையில் மட்டுமே தீர்மானித்து விட முடியுமா? மூன்று கண்ணோட்டங்களில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்கிறது இக்கட்டுரை. ஜாதி தொடர்பாக காந்தி பின்பற்றிய வாழ்க்கை நடைமுறை; காந்தியின் ஆசிரமங்களில் சமூக வாழ்க்கை எப்படி ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது? காந்தியின் செயல்பாடுகள், எழுத்துகளுக்கிடையே நிலவிய முரண்பாடுகள், இந்த மூன்று காரணிகளையும் முன் வைத்து காந்தியின் ஜாதியக் கொள்கைகளை அலசுகிறார் இக்கட்டுரையாளர் நிஷிகாந்த் கோல்கே.

ஜாதி அமைப்பு இயற்கையானது. மதத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, சமூகத்தில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பேணுவதற்காகவே உருவாக்கப் பட்டது என்று தனது எழுத்துகளில் பதிவு செய்துள்ள காந்தி, தனது எழுத்துக்களைப் பற்றி கூறும்போது, “என்னுடைய செயல்பாடுகளில் காண முடியாத எதையும் என் எழுத்துக்களில் தேட முடியாது” என்று கூறியதோடு, “நான் எதைக் கூற வருகிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால், எனது நடத்தைகளைப் பாருங்கள்” என்றார். “உண்மையாக நான் கூறுவேன்; என்னுடைய எழுத்துகளை எனது உடலோடு சேர்த்து எரித்து விடுங்கள்” என்றும் காந்தி கூறினார்.

இந்து மதத்தை முழுமையாக நம்பி ஏற்றுக் கொண்ட ஒரு இந்து எத்தகைய வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று காந்தி வாழ்ந்த காலத்திலேயே இராவணன் கோரா, மார்க் லிண்ட்லே ஆகியோர் கீழ்க்கண்டவாறு வரையறுத்தனர்:

  1. சனாதன இந்து ‘தீண்டாமை’யை பின்பற்ற வேண்டும்.
  2. தனக்குக் கீழான ஜாதியினருடன் சேர்ந்து உணவு சாப்பிடக் கூடாது.
  3. சொந்த ஜாதிக்குள்ளே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
  4. பரம்பரை பரம்பரையாக செய்யும் தொழிலையே செய்ய வேண்டும்.

இதுவே ஒரு சனாதன ‘இந்து’ வாழ வேண்டிய வாழ்க்கை. ஜாதி அமைப்பை ஏற்றுக் கொண்ட காந்தி, சொந்த வாழ்க்கையில் இந்த ‘சனாதன தர்மங்களை’ பின்பற்றினாரா? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

தீண்டாமை: ஜாதியின் ‘புனித கடமை’யாக தீண்டாமையை பின்பற்றிய இந்துக்கள் – ‘தொடக் கூடாது; தொட்டால் தீட்டாகிவிடும்’ என்று தீண்டாமையை புனிதப்படுத்தி வந்தார்கள். அகமதாபாத்தில் 1921ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு மாநாட்டில் பேசிய காந்தி, தனது 12ஆம் வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். தனது வீட்டில் கழிவறையை சுத்தம் செய்ய வரும் ‘உக்கா’ என்ற தொழிலாளியை தீண்டப் படாதவராக கருதி ஒதுக்கி வைக்க வேண்டும்  என்ற கருத்தில் தனக்கும் தனது பெற்றோருக்கும் நடந்த ‘வாக்குவாதத்தைக்’ குறிப்பிட்டார். பெற்றோர் சொல் தட்டாத மகனாகவேதான் இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் பெற்றோரை தாம் எதிர்த்ததாகக் கூறுகிறார். இந்த சம்பவம்தான் காந்தியின் இளம் பருவத்திலேயே தீண்டாமைக்கு எதிரான உணர்வுகளை அவரிடம் தூண்டியது என்று காந்தியின் வரலாற்றாளரும் உதவியாளருமான பியாரிலால் நய்யார் பதிவு செய்கிறார். காந்தியின் சுயசரிதையிலும் தீண்டாமை பற்றிய குறிப்பு வருகிறது. காந்தி வழக்கறிஞராக தொழில் புரிந்தபோது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய கிறிஸ்துவர், தீண்டப்படாத பெற்றோர்களுக்குப் பிறந்தவர். அதன் காரணமாக அவர் தண்ணீர்க் குடித்த குவளையைக் கழுவ மறுத்தார் காந்தியின் மனைவி கஸ்தூரி. “இந்த முட்டாள்தனங்களுக்கு இந்த வீட்டில் இடமில்லை” என்று கூறிய காந்தி, கஸ்தூரிபாய் கையைப் பிடித்து வாயிற்படி கதவு வரை இழுத்து வந்து வெளியே தள்ளினார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ‘தீண்டப்படாத’ நண்பர்கள் என்னுடைய இடத்துக்கு வருவதும், தங்குவதும், ஒன்றாக உணவருந்துவதும் வழமை என்று சுயசரிதையில் எழுதுகிறார். இந்து வைதிக குடும்பங்களில் பெண்கள் சந்திக்கும் ‘பீரியட்’ காலங்களில் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப் படுவார்கள். காந்தி இதை ஏற்கவில்லை. இந்த ‘தீண்டாமை’ பழக்கம் குறித்து மீராபென்னுக்கு (காந்தி உதவியாளர்) எழுதிய கடிதத்தில் காந்தி, “இப்படி பெண்கள் மாதந்தோறும் தீண்டப் படாதவர்களாக ஒதுக்கி வைக்கும் விதிகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்று ஏற்கனவே உன்னிடம் கூறி இருக்கிறேன். கஸ்தூரி பாவிடமே இந்த ‘விதி’களை நான் மதிப்பது கிடையாது” என்று குறிப்பிடுகிறார். பெண்கள் மீது திணிக்கப்படும் இந்த ‘பீரியட்’ தீண்டாமைக்கு எதிராக பலருக்கும் காந்தி கடிதங்களை எழுதியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தென்னாப் பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி, தன்னுடன் ‘நாய்க்கர்’ என்ற தீண்டப்படாத பையனையும் உடன் அழைத்து வந்தார். காந்தியின் ஆசிரமத்திலேயே தங்கிய அவன், காந்தியின் பயணத்திலும் உடன் சென்றவன். ‘இலட்சுமி’ என்ற தீண்டப்படாத பெண்ணை யும் காந்தி தனது ‘மகளாக’ ஏற்றுக் கொண்ட தோடு, இலட்சுமியும் காந்தி ஆசிரமத்திலேயே தங்கி அவருடன் பயணத்திலும் பங்கேற்றார். எனவே ‘புனிதம்’, ‘தீட்டு’ என்ற பார்வையில் கட்மைக்கப்பட்ட ‘தீண்டாமைக்கு’ தனது இளமை காலத்திலிருந்தே காந்தி எதிர்ப்பாக இருந்திருக்கிறார்.

சேர்ந்துண்ணல் மற்றும் வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே திருமணம்

குஜராத்தில் காந்தி பிறந்த ‘வைசிய’ சமூகம் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கொண்டது. மாமிச உணவு சாப்பிடவே கூடாது. தனது இளம் வயதில் மாமிச உணவு விருந்து களில் பங்கேற்றதை காந்தி எழுதியிருக்கிறார். காந்தியின் இளம் வயது முஸ்லிம் நண்பன், ஷேக் மேத்தாப்புடன் சேர்ந்து, மாமிச உணவுகளை காந்தி சாப்பிட்டதை அவரது வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது அய்ரோப்பிய உணவு விடுதிகளிலும் கிறிஸ்துவ இஸ்லாமிய நண்பர் வீடுகளிலும் உணவு உண்பதை தாம் வழக்க மாக்கியிருந்ததை தனது சுயசரிதையில் காந்தி கூறுகிறார். தனது ஆங்கிலேய நண்பர் களையும் உடன் பணியாற்றும் தோழர்களையும் தனது இல்லத்துக்கு விருந்துக்கு அழைத்ததை தனது சுயசரிதையில் குறிப்பிடும் காந்தி, கிறிஸ்தவ, இஸ்லாமிய நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் அசைவ உணவை சாப்பிடும் போது அவர்களுடன் சேர்ந்து தாம் தனக்கான சைவ உணவ சாப்பிடுவது வழக்கம் என்றும் எழுதியிருக்கிறார். வார்தாவுக்கு அருகே செகோன் என்ற பகுதியில் வாழத் தொடங்கிய காலத்தில் ‘கோவிந்த்’ என்ற ‘தீண்டப்படாத’ இளைஞன் தனக்கு உணவு சமைத்ததாக காந்தி எழுதுகிறார். ‘சேர்ந்துண்ணுதல் என்பதில் தடுமாற்றம் இல்லாதவனாக நான் உறுதியாக இருந்தேன்’ என்று தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ஹென்னிபோலர் என்ற யூதருக்கும் – மில்லிகிரகாம் டவுன்ஸ் என்ற ஸ்காட்லாந்து கிறித்துவப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். காந்தியின் ஜோகன்ஸ்பர்க் நகரிலுள்ள இல்லத்தில் இந்த தம்பதிகள் ஓராண்டு காலம் காந்தியுடன் தங்கியிருந்தனர். பிறகு காந்தி, தனது குடும்பத்துடன் ஃபோனிக்ஸ் நகரத்துக்கு குடியேறியபோது இந்த தம்பதியினரும் அந்த நகரத்துக்கே குடியேறினர். இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் இவ்வவாறு பதிவு செய்துள்ளார்.

“தங்களுக்கிடையிலான உறவில் மதங்கள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அவை தேவையற்றது என்றே கருதினர். திருமதி போலர் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். போலர் ஒரு யூதர். இருவருக்கும் பொதுவான மதம் – ஒழுக்கம் என்ற மதமே” (Their comman religion was the relgion of ethics ) என்று எழுதினார் காந்தி. தன்னுடைய மகன் இராமதாஸ், தனது ஜாதிக்கு வெளியே வேறு ஒரு ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள காந்தி அனுமதித்தார். மற்றொரு மகன் தேவதாசை வேறு ஒரு வர்ணத்தைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். தனது ‘தீண்டப்படாத’ சமூகத்தைச் சார்ந்த வளர்ப்பு மகள் இலட்சுமியை ஒரு ‘பிராமண’ இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஜாதிகளுக் கிடையே நடக்கும் திருமணங்களுக்கு காந்தி தனது ஆதரவை பலமுறை வெளிப்படுத்தி யிருக்கிறார்.

பரம்பரைத் தொழில்

‘பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது ஒரு ‘சனாதன இந்து’வின் கொள்கை. ஆனால் காந்தியோ அவரது குடும்பமோ பரம்பரைத் தொழிலை செய்ய வில்லை. சம்பிரதாயமாக அவர்கள் மீது திணிக்கப்பட்ட ‘புனித கடமைகளையும்’ செய்யவில்லை. காந்தியும்  தனது வாழ்க்கைக்கான தேவைக்கு பாரம்பர்யத் தொழிலை மேற்கொள்ளவிலலை. அவரது மகன்களும் அப்படித்தான். அது மட்டுமின்றி தனது ஜாதி தர்மப்படி தடை விதிக்கப்பட்ட துப்புரவு, முடிவெட்டுதல், செருப்பு தைத்தல், தையல் போன்ற தொழில்களோடு தொடர்புடைய தொழில் நுணுக்கங்களை அறிய முயற்சித்த காந்தி, தனது மகன்களுக்கும், மனைவிக்கும், சக ஊழியர்களுக்கும் அந்த தொழில் திறமைகளை கற்பித்தார். காந்தி கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களில் (1922 மார்ச் 10, மற்றும் 1933 ஆகஸ்ட் 1ஆம் தேதி) தனது தொழில் குறித்து அதிகாரிகள் கேட்டபோது “நான் ஒரு நெசவாளி; விவசாயி; நூல் நூற்பவன்” எனக் கூறினார்.

1908ஆம் ஆண்டு காந்தி, தென்னாப் பிரிக்காவில் தனது ஃபோனிக்ஸ் குடியிருப்புப் பகுதியிலும், குடியிருப்புப் பகுதிக்கு வெளியிலும் பள்ளி தொடங்கினார். பள்ளிப் பாடத் திட்டத்தில் தங்களின் மூதாதையர் செய்த தொழிலை கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. மாறாக, உடல் உழைப்பு தொழிலை ஒவ்வொரு மாணவரும் மதித்து கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. 1917இல் காந்தி, தென்னாப்பிரிக்கா விலிருந்து இந்தியா திரும்பியவுடன் தனது ஆசிரமத்தில் தொடங்கிய பள்ளியில் மாணவர் களுக்கு, விவசாயம், நெசவு, தச்சு மற்றும் பட்டறை தொழில்கள் கற்பிக்கப்பட்டன. பரம்பரைத் தொழிலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. (காந்தியின் காங்கிரசைச் சார்ந்த இராஜ கோபாலாச்சாரி, தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பரம்பரைத் தொழிலை பாதி நேரம் கட்டாயப்படுத்தினார் – மொழி பெயர்ப்பாளர்)

1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியர் களுக்காக உருவாக்கிய சட்டத்தின்படி காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதிகாரத்துக்கு வந்த காங்கிரஸ், ஆதாரக் கல்வி முறையை (Basic education ) அறிமுகப்படுத்த வேண்டும் என்றார் காந்தி. ஆதாரக் கல்வி, பரம்பரைத் தொழில் முறைக்கு எதிரானது. பரம்பரைத் தொழில் முறையைவிட உடல் உழைப்புத் தொழிலை மதிக்க வேண்டும் என்றார் காந்தி.

புனித நூல்கள் அல்லது மதத்தின் அதிகாரம்

நான்கு வேதங்கள், உபநிஷத்துகள், புராணங் கள், இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்களே இந்து மதத்தின் அதிகாரம் படைத்தவை. இவைகளில் கூறப் பட்டுள்ள கருத்துகள் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதே பாமர இந்துக்களின் நம்பிக்கை. இவைகளை ‘மாற்றவே முடியாது’ என்போரே ‘சனாதனிகள்’ (மாற்றவே முடியாது என்று நம்புவோர்) காந்தி தன்னை சனாதனி என கூறிக் கொண்டார்.  அப்படி கூறிக் கொண்டே “சாஸ்திரங்களி லிருந்து மேற் கோள்களைக் காட்டி என்னை யாரும் – எனது கருத்து களிலிருந்து மாற்றிவிட முடியாது” என்று கூறினார். “எனது குழந்தைப் பருவத்தில் புனித நூல்களின் கருத்துகள் எனக்கு வாழ்க்கை யில் பெரிதும் உதவும் என்று கருதினேன். ஆனால் வேதங்களின் கருத்துகள் எனது வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்க வில்லை. (The Vedas could
not supply that need ).

“எனக்கு சாஸ்திரங் களில் நம்பிக்கை உண்டு; ஆனால் அவைதான் இறுதியானவை. கடவுளால் சொல்லப்பட்டவை என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றார். அப்படியானால் இறுதியான அதிகாரம் படைத்த முடிவு எங்கே இருக்கிறது என்று கேட்டபோது காந்தி, தனது நெஞ்சைத் தொட்டு, “அது இங்கேதான் உறைந்திருக்கிறது” என்றார். அவர் இது குறித்து தனது கருத்தை தெளிவாகவே விளக்கினார்.

“கீதை உட்பட எந்த புனித நூல்களின் கருத்துகள் என்றாலும், அந்த கருத்துகளை எனது மனசாட்சி யோடு பொருத்தித்தான் பார்ப்பேன். எந்த புனித நூல்களாலும் அது எனது மனசாட்சியை விட மேலானதாக ஆதிக்கம் செலுத்த நான் அனுமதிக்க மாட்டேன். பல நூல் களின் மூல கருத்துகள் உயர்ந்த நோக்கம் கொண்டவை என்று நான் நம்பினாலும், அந்த நூல்களின் கருத்துகள் என்னுள் பாதிப்புகளை உண் டாக்குகின்றன என்றா லும், அந்த கருத்துகள் திருத்தலுக்கு உள்ளாக்கப்பட்டே வெளி வருகின்றன. இந்த புனித நூல்களுக்கு முதலில் தூதர்களும், பிறகு விளக்கம் தர வந்தவர்களும் வெவ்வேறு விளக்கங்களை தந்து விடுகிறார்கள். எந்தக் கருத்தும் கடவுளிடமிருந்து நேரடியாக வந்து சேரவில்லை (Nothing in them comes from god directly )” என்றார் காந்தி.

ஜாதியக் கட்டுப்பாடுகள்

ஜாதி அமைப்பை ஆதரித்து எழுதிய காந்தி, ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இளம் வயதிலிருந்தே மீறி வந்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை காந்தி பிறந்த ஜாதி தடை செய்திருந்தா லும், காந்தி சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். அவரது சொந்த ஜாதிக்காரர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். “ஜாதியி லிருந்து விலக்கி வைக்கப் போவதாக – ஜாதித் தலைவர்கள் கூறினாலும், அப்படி விலக்கினாலும் எனது வெளிநாட்டுப் பயணத்தைத் தடுக்க முடியாது” என்றார் காந்தி.

வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் (சூத்திரர் தவிர) மேலே உள்ள மூன்று வர்ணப் பிரிவினரும் பூணூல் போடும் உரிமை பெற்றவர்கள். காந்தியும் இளம் வயதில் அதற்குரிய சடங்குகள் நடத்தப்பட்டு ‘பூணூல்’ போடப்பட்டவர்தான். இது குறித்து தனது சுயசரிதையில் “நானும் பூணூல் போட்டிருந்தேன். அந்தப் பூணூல் தொலைந்துபோனபோது அது பற்றி எனக்கு எந்தக் கவலையும் வரவில்லை. ஆனால் புதிய பூணூலை அணிவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்பது எனக்கு தெரியும்

(But I know that I did not go for a fresh one ).

காந்தியின் குடும்பம் வைசியர் பிரிவு. கழுத்தில் துளசி மாலை அணிவது கட்டாயம். “நான் இங்கிலாந்து போக முடிவு செய்தவுடன், துளசி மாலையை கழற்றிவிட்டேன். தென்னாப் பிரிக்காவில் இருந்தபோதும் துளசி மாலையை அணியும் பழக்கத்தை காந்தி கைவிட்டு விட்டார்.

கோயில் மற்றும் உருவ வழிபாடு

அருகே உள்ள கோயில்களுக்கு சென்று ‘கடவுளை’ வணங்குதல்; தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குதல் – இவையெல்லாம் இந்துக்களின் வழிபாட்டு முறை. காந்தியின் வரலாற்றை அண்மையில் எழுதியுள்ள ஜோசப் லேலிவெல்ட் (Joseph Lelyveld ) “காந்தி கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவரல்ல” என்று எழுதியிருக் கிறார். அது மட்டுமல்ல, ‘காந்தி புரோகிதர்களின் அதிகாரத்தை ஏற்கக்கூடிய இந்து அல்ல’ என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து தனது சுயசரிதையில் காந்தி இவ்வவாறு கூறுகிறார்:

‘வைசிய குடும்பத்தில் பிறந்ததால் நான் அடிக்கடி கோயிலுக்குப் போக வேண்டி யிருந்தது. ஆனால் கோயில்கள் என்னை ஈர்க்கவில்லை. அங்கே நடக்கும் ஆடம்பரத் திருவிழாக்களையும் பகட்டு வெளிச்சங்களையும் நான் விரும்பவில்லை. கோயிலுக்குள் ‘ஒழுக்கக் கேடுகள்’ நடக்கின்றன என்ற செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகின்றன. எனவே அங்கே போவதற்கு எனக்கு ஈடுபாடோ விருப்பமோ வரவில்லை. கோயில்களுக்குப்போய் எனக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை” (I could gain nothing from the haveli temple ) என்று காந்தி தனது சுயசரிதையில் கூறுகிறார்.

(கோயில்களில் ‘தேவதாசி முறை’ அந்த காலத்தில் இருந்தது. கோயில்களுக்குள் ‘ஒழுக்கக் கேடுகள்’ நடக்கிறது என்று காந்தியார் கூறியது. இந்த முறையினால் கோயிலுக்குள் ‘விபச்சாரம்’ நடக்கிறது என்பதைத்தான், பெரியார் மற்றும் குத்தூசி குருசாமி கட்டுரைகளிலும் பேச்சு களிலும் கோயில் விபச்சார விடுதிகளாகி விட்டதாக காந்தி கூறியதை சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள் – மொழி பெயர்ப்பாளர்)

ஜாதிக் கட்டுப்பாடு விதித்த உணவு பழக்கமான ‘சைவம்’ மற்றும் வேண்டுதல் (பிரார்த்தனை) கூட்டங்களை மட்டும் காந்தியார் விடாமல் பின்பற்றினார் என்பது போலத் தெரியும். காந்தி ‘வேண்டுதல் கூட்டங்களை’ (Prayer) ) விடாமல் நடத்தினார். அதில் உறுதி காட்டினார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர் நடத்திய ‘வேண்டுதல் கூட்டங்கள்’ – இந்து சம்பிரதாயங்களுக்கு மாறாக காந்தியே தனக்காக உருவாக்கிய முறைகளில் நடந்தன. காந்தியின் வேண்டுதல் கூட்டங்களில் எந்தக் கடவுள் சிலையும் இருக்காது. அவை கோயில்களிலோ அல்லது சிறப்பு ‘பிரார்த்தனைக்’ கூட்டங்களிலோ நடப்பது இல்லை. பல நேரங்களில் திறந்த வெளியில்கூட வேண்டுதல் கூட்டங்கள் நடக்கும். பக்திப் பாடல்கள், பல்வேறு மத நூல்களி லிருந்து பாடப்படுவது வழக்கம். ‘வேண்டுதல் கூட்டங்களில்’ காந்தியின் பேச்சு, ‘மதபோதகர் களின்’ பேச்சுகளைப்போல் இல்லாமல் அவரது அரசியல் போராட்டங்கள் குறித்தும் சமூகப் பிரச்சினைகளில் எதிர்நோக்க வேண்டிய சவால்கள் குறித்துமே இருக்கும் என்கிறார் ஆய்வாளர் சாட்டர்ஜி.

அதேபோல் தனது சைவ உணவுப் பழக்கத்துக்கும் மதம் அல்லது ஜாதியின் கட்டுப்பாடு காரணமல்ல என்கிறார் காந்தி. காந்தி சைவ உணவுக்காரராக இருந்தாலும் எந்த மனத் தடையுமின்றி அசைவ உணவு சாப்பிடுவோரிடம் உடனிருந்து தனது சைவ உணவை சாப்பிடுவார். “இலண்டனுக்கு நான் போகும்போது அசைவ உணவில் நான் ஈடுபாட்டுடனேயே இருந்தேன். ஆனால் அதற்குப் பிறகு அந்த பழக்கத்திலிருந்து நான் விலகினேன். அதற்குக் காரணம் இரண்டு. “உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற எனது நோக்கம்; மற்றொன்று எனது தாயாருக்கு நான் தந்த உறுதியைக் காப்பாற்ற வேண்டும்” என்கிறார் காந்தி. “எனது சைவ உணவுப் பழக்கத்துக்கு என்னை மாற்றியது எந்த மத நூலின் தாக்கமும் அல்ல” என்று தனது சுயசரிதையில் காந்தி கூறுகிறார். “ஒவ்வொரு இந்தியரும் அசைவ உணவுக்காரர்கள்தான். அவர்களிடம் பிரச்சாரத்தின் வழியாகவே மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என்று கூறும் காந்தி, “நான் சைவ உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது எனது தனிப்பட்ட முடிவு. இதற்கு மதமோ, ஜாதியோ காரணமல்ல” என்று கூறுகிறார்.

காந்தி உருவாக்கிய ‘ஆஸ்ரமங்கள்’ (வாழ்வகம்)

‘என்னை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல் நான் உருவாக்கிய ‘ஆசிரமங்களே’ என்று காந்தி கூறினார். வெவ்வேறு கால கட்டங்களில் காந்தி நான்கு வாழ்வகங்களை (ஆஸ்ரமங்கள்) உருவாக்கினார். 1904ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் தொடர் வண்டி நிலையம் அருகே அவர் முதல் ‘ஆஸ்ரமத்தை’ உருவாக்கினார். காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்தி வந்த ‘இந்தியன் ஒப்பினியன்’ என்ற வார இதழுக்காக தேவைப்படும் நிதிக்காக இந்த ‘ஆஸ்ரமத்தை’ உருவாக்கினார். இரண்டாவதாக 1910ஆம் ஆண்டு ஜோகன்னஸ் பர்க் நகரில் (தென் ஆப்பிரிக்கா) ‘டால்ஸ்டாய் பண்ணை’ (Tolstoy Farm ) என்ற ஆஸ்ரமத்தைத் தொடங்கினார். இது தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியை எதிர்த்து போரிட்ட ‘சத்தியாகிரகிகளுக்கும்’ (அமைதி வழி போராளிகள்) அவரது குடும்பத்தினருக்காகவும் தொடங்கப்பட்ட தாகும். மூன்றாவது ‘ஆஸ்ரமம்’ 1915இல் குஜராத்தில் அகமதாபாத்தில் உருவாக்கிய ‘சபர்மதி ஆஸ்ரமம்’. ஆண்கள், இளம் பெண்கள், குழந்தைகளுக்கு ‘தாய்நாட்டை’க் காப்பாற்று வதற்கான பயிற்சிகளை அளிப்பது, இந்த ஆஸ்ரமத்தின் நோக்கம். 1936இல் வார்தாவுக்கு அருகிலேயே தொடங்கிய ‘சேவா கிராம ஆஸ்ரமம்’. மூன்றாவது ஆஸ்ரமத்தின் நீட்சியாக அதே நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இந்த ஆஸ்ரமங்களில் எளிமையான வாழ்க்கையின் மூலம் உழைப்பின் மேன்மையை உணர்த்துவது; பொதுவான இலட்சியத்துக்காக உழைப்பது என்பதே நோக்கமாக இருந்தன என்கிறார் ஜான் ருஸ்கின் தனது ‘அன்டு திஸ் லாஸ்ட்’ (Undo this lost ) என்ற நூலில். ஜாதியமைப்பு அல்லது ‘வர்ணாஸ்ரம’ அடிப்படையிலான ஒரு சமூக வாழ்க்கையை உருவாக்குவது இதன் நோக்கம் அல்ல. இந்த ஆஸ்ரமங்களில் பல்வேறு ஜாதிப் பிரிவினர், மதப் பிரிவினர், பெண்கள், ஆண்கள் என்று அனைவரும் இருந்தனர். அனைவருமே அன்றாடம், உடல் உழைப்பு செய்தனர். சமையல், தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல், சவரம் செய்தல், முடிவெட்டுதல் உள்ளிட்ட அனைத்து வேலை களும் சுழற்ச்சி அடிப்படையில் அனைவரும் செய்தாக வேண்டும். எந்த வடிவத்திலும் ‘தீண்டாமை’ பின்பற்றப்படவில்லை. பெண்களின் ‘மாத ஒழுகுதல்’ காலங்களிலும் அவர்கள் ‘தீட்டு’ப்பட்டவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டதில்லை. சுய கட்டுப்பாடு அனைவருக்கும் வலியுறுத்தப்பட்டாலும், வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியின் மகன் இராமதாஸ் திருமணம் நடந்தது. (ராமதாஸ் காந்தியின் ஜாதிக்குள் வேறு உட்ஜாதிப் பிரிவைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்) அந்தத் திருமண நிகழ்வின்போது காந்தியின் பேச்சு:

“இப்போது நடந்து முடிந்துள்ள இத்திருமணம்தான், இந்த ‘ஆஸ்ரமத்தில்’ ஒரே ஜாதிக்குள் நடக்கும் கடைசி திருமணமாக இருக்க வேண்டும். ஜாதி கடந்த திருமணங்களை நடத்துவதில் இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். காரணம், இந்த சீர்திருத்தத்தை முன்னெடுப்பது ஆஸ்ரமத்துக்கு வெளியே உள்ள மக்களுக்கு கடினமானது. ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களை கைவிட வேண்டும் என்பதே இந்த ஆஸ்ரமத்தின் விதிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் பல்வேறு உள் ஜாதிப் பிரிவினரிடையே நடக்கும் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். (The rule should be on the part of the Ashramam to discountenance marriage between the parties of the some caste and to en- courage those between parties belonging to differ- ent sub-castes )”

1945 ஆகஸ்டு 19ஆம் தேதி காந்தி ‘சேவா கிராம ஆஸ்ரமத்தில்’ ஏ.ஜி. டெண்டுல்கர் என்ற பார்ப்பனருக்கும், இந்துமதி என்ற ‘தீண்டப்படாத’ப் பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைத்தார். காந்தி ஆஸ்ரமங்களில் ஒரே சமையல் அறைதான். ஒரே வரிசையில் அமர்ந்து அனைவரும் சாப்பிடுவர். எளிமையான உணவு. ஆனால் சைவ உணவு மட்டுமே. ஆனால் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ‘டால்ஸ்டாய் பண்ணை’யில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் மாட்டுக்கறி சாப்பிட விரும்பினால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்றார் காந்தி. எந்த ஒரு பெண்ணோ ஆணோ மாமிச உணவு வேண்டும் என்று கேட்கவில்லை என்பது காந்திக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பொது சமையலறையைப் போலவே காலை இரண்டு முறை, மாலை இரண்டு முறை நடந்த வழிபாடு கூட்டங்களிலும் உருவ வழிபாடு ஏதுமின்றி அனைத்து மத நூல்களும் படிக்கப்படும் பொது வழிபாடாகவே இருந்தது. ஜாதி – வர்ணாஸ்ரம பாகுபாடுகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ‘ஆஸ்ரம வாழ்க்கை’ முறையையே காந்தி செயல்படுத்தினார்.

ஜாதி அமைப்பையும் வர்ணாஸ்ரம அமைப்பையும் நியாயப்படுத்தி தனது எழுத்து களில் பதிவு செய்த காந்தி, நடைமுறை வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாக செயல் பட்டது ஏன்? இது குறித்து காந்தியின் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன் வைத்துள்ளனர். ஜாதி அமைப்பு நியாயமானது தான் என்பதற்கான காரணங்களை அடுக்கி காந்தியின் கருத்துகளை நியாயப்படுத்தியவர்கள் உண்டு. காந்தியின் முரண்பாடு என்று எழுதி யவர்கள் உண்டு. தொடக்கத்தில் ஜாதியமைப்பு நியாயமாக காந்திக்கு தெரிந்தாலும், காலப் போக்கில் அதன் கேடுகளை காந்தி உணரத் தொடங்கினார் என்பதும், ஜாதி அமைப்பை ஆதரித்து எழுதிக் கொண்டே நடைமுறையில் அதை பின்பற்றாமல் வாழ முயன்றது அவரது ‘நடைமுறை உத்தி’ என்று எழுதிய ஆய்வாளர்களும் உண்டு.

ஜாதி அமைப்பை காந்தி முழுமையாக ஆதரித்தார் என்று கூறும் ஆய்வாளர்களில் இரண்டு பிரிவினர் உண்டு. ஒரு பிரிவினர் தலித் ஆய்வாளர்கள்; மற்றொரு பிரிவினர் ‘காந்திய’ ஆதரவாளர்கள். “வைதீக இந்து அமைப்பி லிருந்து வந்த காந்தி, அடிப்படை சமூகக் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் எதிர்த்தவர். மற்ற எல்லோரையும்விட ஜாதி அமைப்பை நியாயப்படுத்தியவர். அதுவும் ஜாதி அமைப்புக்கு எதிராக போர்க்குரல் எழுந்த போது, ஜாதி அமைப்பை நியாயப்படுத்தியவர்” என்று தலித் ஆய்வாளர்கள் கூறினர். உதாரணமாக பரிமளா வி.இராவ் என்ற ஆய்வாளர், ஏற்கனவே ஜாதி ஆதிக்கக் குழு வினரிடம் (பார்ப்பனர்கள்) இருந்த காங்கிரஸ், காந்தியின் ஜாதிய ஆதரவு கொள்கையால் அது மேலும் வலிமையான ஜாதிய அமைப்பானது என்றும், ஜாதி என்ற நிறுவனத்தின் தீவிர ஆதரவாளர் காந்தி என்றும் எழுதுகிறார்.

“காந்தி பிறந்த பனியா சமூகம், பார்ப் பனர்களைவிட தீவிரமாக பார்ப்பனியத்தை உள்வாங்கிய சமூகம். காந்தியின் உலகப் பார்வையும், வாழ்க்கை முறையும் பார்ப்பனிய பழமை மதிப்பீடுகளால் கட்டமைக்கப்பட்டதே ஆகும். பார்ப்பன அடிப்படை வாதத்தை காந்தி கைவிட்டதே இல்லை. அவரது வர்ணாஸ்ரம ஆதரவு, ‘இராமராஜ்யம்’. வசதி படைத்தவர்கள் கருணை காட்டி இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரின் ‘தர்மகர்த்தா’ கொள்கைகளுக்கு காரணம் அவரிடம் ஊறிப் போன பார்ப்பனிய அடிப்படை வாதமே” என்று தலித் ஆய்வாளர் பிராஜ்ரஞ்சன்

மணி எழுதுகிறார். காந்தியும் அம்பேத்கரும் தங்களுடைய சமுதாயப் பின்னணியிலிருந்து சமூகத்தைப் பார்த்தனர் என்று கூறும் ஆய்வாளர் காஞ்சா அய்லய்யா, அம்பேத்கர் ஒடுக்கப்படட சமூகச் சூழலிலிருந்து வந்தவர் என்பதால், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் காந்தி பனியா சமூகச் சூழலிலிருந்து வந்தவர் என்பதாலும் ஒடுக்குகிறவர்களுக்கும், உயர்ஜாதி யினருக்கும் ஆதரவாக இருந்தார்” என்றும் எழுதுகிறார்.

தொழில் புரட்சி, பாரம்பர்ய தொழில்களை நசுக்கிவிடும் என்பதால் காந்தி சுயதேவையின் அடிப்படையில் இராட்டினத்தில் நூல் நூற்பதையும் கதர் அணிவதையும் ஊக்குவித்தார் என்று காந்தியை ஆதரிக்கும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ‘தொழில் புரட்சியை’யும் அதனால் உருவாகிய நவீன தொழிற்சாலைகளையும் காந்தி கடுமையாக குறை கூறி வந்தார். இது, எதிர்கால இந்தியாவின் வேலை வாய்ப்புகளை குறைத்துவிடும் என்று கூறினார். தொழில் மயமாவதற்கு மாற்றாக இராட்டினம் சுற்றுவதையும் கதர் உற்பத்தியையும் குடிசைத் தொழிலாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

என்றார்.

ஆனால், ‘கைராட்டினமும் கதரும்’ மக்களின் சுயதேவையை பூர்த்தி செய்து விடுமா என்ற கேள்வி எழுந்தது. காந்தியிடமும் இது குறித்து மறு சிந்தனை உருவானது. 1944ஆம் ஆண்டு ‘புதிய காதி கொள்கை’ ஒன்றை காந்தி அறிவித்தார். கிராமத்தில் உற்பத்தி பொருள்கள் சுய தேவைக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, விற்பனைக்கான சரக்காக மாற்றக் கூடாது என்பதே அவரது புதிய காதி கொள்கையாக இருந்தது.

“கைராட்டினத்தால் உருவாகும் கதர், பல்லாயிரம் கிராம மக்களின் வாழ்வாதாரத் தேவைக்கு பயன்படுவதுபோல் தலைநகரில் உற்பத்தியாகும் துணி, பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. இரண்டுமே தனித்தனி தொழில்களாகப் பார்க்க வேண்டும். ஆலையில் தயாரிக்கப்பட்ட மில் துணிகளை அணியக் கூடாது. கதராடையையே அணிய வேண்டும் என்று எவரையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. கதர் மட்டுமே சுயராஜ்யத்தின அடையாளமல்ல (சூடிச உயn ளரஉh மாயனi உடயiஅ வடி நெ வாந hநசயடன டிக ளுறயசயத)” என்று காந்தி தனது புதிய கதர் கொள்கையை அறிவித்தார். கைராட்டினத்தால் உருவாகும் கதர், சுயதேவைக்கே தவிர விற்பனைக்கு அல்ல என்று காந்தி கூறியதைத் தொடர்ந்து, அகில இந்திய நூற்போர் சங்க செயலாளர் சிறீகிருஷ்ணதாஸ் ராஜூ, “அப்படியானால் விற்பனைக்காக தொடங்கப்பட்ட பல்லாயிரம் கதர்க் கடைகளையும் மூடிவிட வேண்டுமா? இதனால் பல்லாயிரக்கணக்கில் வேலை இழப்பார்களே” என்று கேட்டபோது, “அந்தக் கடைகளை மூடுங்கள்” என்பதே காந்தியின் பதிலாக இருந்தது.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வு ஒவ்வொருவரும் பாரம்பர்யத் தொழிலை செய்வதிலேயே அடங்கியிருக்கிறது என்ற நோக்கில் காந்தி, பாரம்பர்யத் தொழிலை நியாயப்படுத்தவில்லை. மாறாக, தொழிற்சாலைகளின் வளர்ச்சி தனி மனித சுதந்திரம், உடல் உழைப்புக்கான கவுரவத்தைக் குலைத்து விடும் என்று கருதினார். அதே நேரத்தில் தன்னுடைய கிராமப் புணரமைப்புக்கான வேலை திட்டங்களில் ஒவ்வொருவரும் பாரம்பர்யத் தொழிலையே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. அவர் முன் வைத்த ‘கைராட்டினம்’ அனைத்து ஜாதி மதத்தினருக்கும் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருந்தது.

‘மறு பிறவி’, ‘முன் ஜென்ம பலன்’ என்ற இந்துமத கருத்துகளில் தனது நம்பிக்கையை காந்தி வெளிப்படுத்தி வந்திருக்கிறார் என்பது உண்மை. ஆனால், கடந்த ஜென்மத்தின் பலன்தான் இந்த ‘ஜென்மத்தில்’ செய்ய வேண்டிய தொழிலாகியிருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் காந்தி இந்த கருத்துகளை முன் வைக்கவில்லை. மாறாக நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்காகவே இந்த கருத்துகளை ஆதரித்திருக்கிறார். ‘தீண்டப்படாத’ மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய காந்தி, ‘முன்ஜென்ம பலன்’ என்பதற்கு புதிய விளக்கம் தருகிறார்.

“‘தீண்டப்படாத’ மக்களின் இன்றைய அவலங்களுக்கு அவர்களின் கடந்த கால பாவம் என்று நீங்கள் நம்புவீர்களேயானால், நான் கூறுவேன், கடவுளை வணங்கும் முதன்மையான உரிமைக்குரியவர்கள் அவர்கள்தான். உலகம் முழுதும் கடவுளுக்கு தரப்படும் விளக்கம் – ‘பாவம்’ செய்தவர்களை கடவுள் மன்னிப்பார்” என்பதுதான், என்று எழுதினார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘முன் ஜென்ம பலன்’ என்பதற்கு வைதிக மதம் தரும் விளக்கங்களை காந்தி புறந்தள்ளி இவ்வாறு எழுதுகிறார்: “ ‘கர்மா’ என்ற முன்ஜென்ம விதி தத்துவம் மனிதர்களை மதிக்கவில்லை என்றால், அந்த தத்துவத்தை மத பழமைவாதிகளிடமே விட்டு விடுங்கள்; தனது ‘தலைவிதி’யை நிர்ணயிப்பது மனிதன் மட்டும்தான். எனவே உங்கள் ‘தலைவிதி’யை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்களாக மாறுங்கள் (Man is the makers of his own destiny, and I therefore ask you to become makers of your own destiny ).”

அவரது நடைமுறை வாழ்விலேயே ‘முன்ஜென்மப் பயன்’ என்ற கருத்தை நிராகரித்தார் என்பதற்கு சான்றுகள் உண்டு. நோயால் அவதிப்பட்ட ஒரு பசுவை கொன்றுவிடச் சொன்னார். முன் ஜென்ம விதிப்படியே பசு இந்த நோயை அனுபவிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார். 1928ஆம் ஆண்டில் தனது ‘ஆஸ்ரமத்தில்’ தீர்க்க முடியாத ஒரு நோயினால் அவதிப்பட்ட பசுவின் கன்றுகுட்டியை கொன்றுவிட காந்தி கூறினார். ஆஸ்ரமத்தில் சிலர் கடுமையாக எதிர்த்தனர். தனது முடிவை நியாயப்படுத்திய காந்தி, ‘மனிதருக்கு இத்தகைய நிலை வந்தாலும் இதே முடிவைத்தான் எடுப்பேன்’ என்றார்.

‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை தொடக்கக் காலங்களில் நியாயப்படுத்தி வந்த காந்தி, பிற்காலத்தில் இவ்வாறு எழுதினார்:

“தீண்டாமை ஒழியும்போது ‘வர்ணா ஸ்ரமம்’ குப்பைக் கூடைக்கு அனுப்பப்படும் என்றால், அதற்காக நான் கண்ணீர் சிந்த மாட்டேன் (If Varnashrama goes to the dogs, in the removal of untouchability, I shall not shed a tear ).”

மேலும் காந்தி இவ்வாறு கூறினார்:

“வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து எங்கேயும் போய் நான் பிரச்சாரம் செய்யவில்லை; ஆனால் தீண்டாமையை ஒழிக்க வைக்கம் சென்றேன். கதர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு இந்த மூன்றும் சுயராஜ்யத்தின் மூன்று தூண்கள் என்று, காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றச் செய்து, இதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வைத்தது நான் தான்.  ஆனால் வர்ணாஸ்ரம சமூக அமைப்பை உறுதி செய்ய வேண்டும்; அதுவே சுயராஜ்யத்தின் நான்காவது தூண் என்று ஒரு போதும் நான் கூறியது இல்லை. (I have never placed establishment of varnashrama dharma as the fourth pillar) எனவே ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்புக்கு நான் தவறாக அழுத்தம் தந்து வந்தேன் என்று நீங்கள் என்னை குற்றம் சாட்ட முடியாது” என்று காந்தி கூறினார்.

காந்தியிடம் படிப்படியான மாற்றங்கள்

“காந்தி மதச்சார்பின்மை மற்றும் வகுப்பு வாதம்” என்ற நூலில் ஆய்வாளர் பிபன் சந்திரா காந்தியின் ஜாதி பற்றிய பார்வை மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ‘மனித மாண்பு, உண்மை, அகிம்சை’ ஆகியவற்றில் காந்தியின் கொள்கை கடைசி வரை மாற்றமில்லாமலே இருந்தன என்றாலும், ஏனைய பிரச்சினைகளில் அவரது கருத்துகளில் பிற்காலத்தில் தீவிரமான மாற்றங்களுக்கு இடம் தந்ததோடு, தீவிரமான முற்போக்கு திசை நோக்கி நகர்ந்தது” என்று எழுதுகிறார். தனது கருத்துக்கு வலிமை சேர்க்க காந்தியின் இரண்டு எழுத்துகளை எடுத்துக் காட்டுகிறார். 1933இல் இவ்வாறு எழுதினார்.

“உண்மையைத் தேடும் எனது பயணத்தில் நான் ஏற்கனவே கூறிய பல கருத்துகளை புறந்தள்ளியிருக்கிறேன். அதே  நேரத்தில் பல புதிய உண்மைகளை கண்டறிந்திருக்கிறேன். எனது கருத்துகளில் முரண்பாடுகள் இருக்கின்றனவே என்று எவருக்காவது தோன்றினால், ஒரு பிரச்சினையில் கடைசியாக நான் தெரிவித்த கருத்துகளையே என் தூய்மையின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று எழுதினார்.

இதே கருத்தை 1938லும் காந்தி எழுதினார். “தான் முதலில் தெரிவித்த கருத்தும் பிறகு தெரிவித்த கருத்தும் மாறுபடுவதாக இருந்தா லும் அதில் தொடர்ச்சியில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்கிறார் காந்தி.

ஜாதி அமைப்பை தொடக்கக் காலங்களில் கடுமையாக காந்தி  எதிர்க்காததற்குக் காரணம், அவரது “நடைமுறைக்கான செயல் உத்தி தான்” என்று காந்தியின் வரலாற்று ஆய்வாளர் பி.ஆர்.நந்தா கூறுகிறார். ஆய்வாளர்கள் இராமச்சந்திர குகா, ஜிமித் எம். பிரவுன், ஜோசப் லேலிவெல்ட் ஆகியோரும் ஜாதி அமைப்புக் குறித்த பார்வையில் காந்தி ‘நடைமுறை உத்தியுடன்’ (Strategist) செயல்பட்டார் என்று கூறுகிறார்கள். 1909ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் ஜாதி அமைப்பை கடுமையாக எதிர்த்து வெளிப் படையாகப் பேசியவர்தான் காந்தி. ஆனால், இந்தியா திரும்பியவுடன் பழமையில் ஊறிப் போனவர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதை உணர்ந்து (பார்ப்பனர் பிடியில் காங்கிரசும் அதிகாரமும் இருந்தன – மொழி பெயர்ப்பாளர்) தீவிரமான  சீர்திருத்தத்துக்கு இந்துக்கள் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு தனது கருத்துகளை வெளியிடத் தொடங்கினார் என்று எழுதுகிறார் ஆய்வாளர் ஜீடித் எம் பிரவுன்.

ஜாதியமைப்புப் பற்றி காந்தி எழுதிய கருத்துகள், அதற்கு ஆதரவாகவும் அவரது நடைமுறை ஜாதியமைப்புக்கு எதிராகவும் இருந்திருக்கிறது. காலப்போக்கில் காந்தியின் கருத்துகள் பழமையிலிருந்து வேறு திசையில் பயணித்திருக்கிறது. இதுவும் காந்தியின் ‘செயல் உத்தி’ என்றே மதிப்பிட வேண்டியிருக்கிறது.

(கட்டுரையாளர் திரிபுரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ (ஏப் .1, 2017)யில் வெளிவந்த கட்டுரை. தமிழில்: இராசேந்திரன்)

நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்

You may also like...