செப். 17 – தமிழினத்தின் மான மீட்பு நாள்!
- நாடாளுமன்றத்துக்கே போகாமல் அரசியல் சட்டத்தை முதன்முதலாக திருத்த வைத்து, கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்த தலைவர் – பெரியார்
- 10 வயது பார்ப்பன சிறுவன் – 60 வயது, 70 வயது பார்ப்பனரல்லாத மக்களை ‘அவன்’, ‘இவன்’, ‘அவள்-இவள்’ என்று நாக் கூசாமல் அழைத்து வந்த அவமானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் – பெரியார்
- தமிழ்நாட்டில் ஜாதி சங்கத் தலைவர்கள்கூட பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதில்லை. வேறு மாநிலங்களில் ஜாதி ஒழிப்புப் பேசும் புரட்சி இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் இன்னும் ஜாதி ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் போடுவதையே வழக்கமாக்கியிருந்த தமிழகத்தில் ஜாதிப் பெயரை வெட்டி எறிய வைத்தது – பெரியார்
- பார்ப்பான் மந்திரம் ஓதி, பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தி வந்த புரோகித திருமணத்துக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி அதை சட்டமாக்கச் செய்தவர் – பெரியார்
- தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர் – பெரியார்
- வடமாநிலங்களைப் போல் மதவெறி சக்திகள் காலூன்றி வேர்பிடித்து வளர முடியாத மாநிலமாக தமிழகத்தைப் பக்குவப்படுத்திய தலைவர் – பெரியார்
- ஜாதி-மத-கடவுள் எதிர்ப்பாளர்களை ஒரே இயக்கமாக்கி சமூகப் புரட்சிக்கு வழி நடத்திய தலைவர்- பெரியார்
- கடவுள் மறுப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக்கிய ஒரே தலைவர் – பெரியார்
- ஆண்களுக்குள்ள உரிமை, அத்தனையும் பெண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தி பெண் கல்வியின் அவசியத்தை கிராமத்து வாழ் மக்கள் வரை ஏற்கச் செய்த புரட்சிக்கு வித்திட்டவர்- பெரியார்
- ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தையே எரிக்கும் போராட்டத்தை நடத்தி, 10 ஆயிரம் தோழர்களை எரிக்கச் செய்த தலைவர் – இந்தியை எதிர்க்க தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்த புரட்சியாளர் – பெரியார்
- வரலாறு முழுதும் பார்ப்பனக் கொடுமைகளை எதிர்த்தவர்கள் அழிக்கப் பட்டார்கள்; சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்கள்; சுட்டுக் கொல்லப் பட்டார்கள். ஆனால், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடக்குமுறைக்கு எதிராக சிங்கமாக சிலிர்த்து எழுந்து, களமாடி பார்ப்பன சூழ்ச்சிப் பொறிக்குள் சிக்கிடாமல் வெற்றிப் பாதை அமைத்திட்ட ஒரே வரலாற்றுத் தலைவர் – பெரியார், பெரியார் மட்டுமே.
ஜாதி அடிமைகளின் வரலாற்றில் உரிமைப் போரைத் தொடங்கி
சமூகப் புரட்சிக்கு அணி திரட்டிய
எங்கள் லட்சிய ஒளி விளக்கே…
இதோ, அதே பாதையில் ஆயிரமாயிரமாய் – இளைஞர்கள்… முழக்கமிட்டு வருகிறோம்.
பெரியார் முழக்கம் 12092013 இதழ்