கடவுள் இல்லை என்று சொன்னால்… கோவை கொடூரம்

டவுள் மறுப்பு, மத – சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கோவையில், இந்து முன்னணிப் பிரமுகர் சசிகுமார் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின்போது, கைது செய்யப்பட்ட ஃபாரூக், சில தினங்களுக்கு முன்னர்தான் சிறையிலிருந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாரூக் செல்போனுக்கு வந்த கடைசி அழைப்பை வைத்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், கோவை போத்தனூரைச் சேர்ந்த அன்சாத் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஃபாரூக்கை கொலை செய்தவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.. ஃபாரூக்கின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அவர் இடம்பெற்றிருந்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆகியவற்றில் நடந்த விவாதங்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் இஸ்லாம் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஃபாரூக் விமர்சித்து வந்துள்ளார். எனவே, இந்தக் கொலைக்குக் காரணமாக அது இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஃபாரூக் கொலையில், மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். மேலும் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள்தான் பகீர் ரகம். “கொலை செய்யப்பட்ட ஃபாரூக், ‘அல்லா இல்லை’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தியுள்ளார். அதில், கடவுள் மறுப்புக் கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். தன் மகள் பிறந்தநாளின்போது, ‘கடவுள் இல்லை… கடவுள் இல்லை’ எனச் சொல்லி விழாவைக் கொண்டாடியுள்ளார். கடவுள் மறுப்புக் கருத்துகளை வெளியிடக்கூடாது என்று ஃபாரூக்குக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துள்ளன. அதை அவர் அலட்சியப்படுத்தி வந்துள்ளார். கடைசியில், கொலையில் முடிந்துவிட்டது” என்கின்றனர் போலீஸ் வட்டாரத்தில்.

ஃபாரூக்குக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஃபாரூக் மனைவி ரஷிதா, ‘‘அன்றைக்கு இரவு போன் வந்துச்சு. நண்பனைப் பாத்துட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனார். ஆனா, திரும்பி வரலை. இறைவன் தன் பெயரைச் சொல்லி யாரும் யாரையும் கொல்லச் சொன்ன தில்லை. எந்த மதத்தைச் சேர்ந்தவங்களுக்கும் இப்படி நடக்கக் கூடாது. கொன்னவங் களைச் சும்மா விட்டுடாதீங்க. என்னையும், குழந்தைகளையும் அனாதை ஆக்கியவங்களைச் சும்மா விடக்கூடாது” என்று கதறினார் ரஷிதா.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம். “இஸ்லாமியத்தை விட்டு வெளியேறிய இறை மறுப்பாளராக மாறிவிட்ட 50 பேர், அங்கு ஒரு குழுவாக உள்ளனர். இதனால், இந்தக் கொலை நடந்துள்ளது. சகிப்பின்மை என்பது இஸ்லாமியர்களிடம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். இஸ்லாமியர்கள் மத்தியில் அடிப்படை வாதம் பேசுகிற போக்கு வளர்ந்து வருகிறது. இது விரும்பத்தகாத வளர்ச்சி” என்றார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “கருத்து வேறுபாடுகளுக்குக் கொலை தீர்வாக இருக்காது. பாசிசத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணத்தில், இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

“நாத்திகன், விவாதம் முடிந்து வேறு நிகழ்வுக்குச் சென்று விடுவான். ஆத்திகன், விவாதம் முடிந்த பிறகும் நாத்திகன் மீது கோபத்துடனே இருப்பான்” என்று கொலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களுக்கு முன்பாக, ஃபாரூக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது எத்தனை நிஜம் என்பதை நிரூபித்துவிட்டார்கள் மத அடிப்படைவாதிகள்.

– ச.ஜெ.ரவி

செய்தி ஜுனியர் விகடன் 26.03.2017 இதழ்

You may also like...