தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு

குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர் இனப் படுகொலையில் ‘நரோடா பாட்டியா’ என்ற அகமதாபாத் புறநகர் பகுதியில் 97 இஸ்லாமியர்கள் உயிருடன் நெருப்பில் போட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மை யோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இதில் உண்மையான குற்றவாளிகளை மறைத்து கண்துடைப்புக்காக வழக்குகளைப் பதிவு செய்தது மோடி ஆட்சி. உச்சநீதிமன்றம் தலையிட்டு, முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 32 குற்றவாளிகளை அடையாளம் கண்டது. அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். ஜோட்ஸ்னா யாக்னிக் என்ற பெண் நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தப் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவரும், அவருக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறவருமான கொட் நாநி என்ற பெண் அமைச்சருக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மோடி முதலில் இவரை, குற்றவாளிப் பட்டியலிலேயே சேர்க்கவில்லை என்பதும், உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு தான், குற்றப் பட்டியலில் இணைத்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. 2002 ஆம் ஆண்டு இந்தப் படுகொலைகளை நடத்தியதற்காக 2007 ஆம் ஆண்டில் இவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார் மோடி.

இந்தத் தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தக் காலத் திலேயே இந்த இனப் படுகொலையை முன்னின்று நடத்தியுள்ளார்.

‘பஜ்ரங்தள்’ என்ற ஆர்.எம்.எஸ். வன்முறைப் பிரிவு அமைப்பின் தலைவராக இருந்த பாபு பஜ்ரங்கி என்பவருக்கு இந்த வழக்கில் இறக்கும்வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இவரும் படுகொலையை திட்டமிட்டு முன்னின்று நடத்தியவர். 22 குற்றவாளிகளுக்கு 24 ஆண்டு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருக்கும் ஒருவர் மதக்கலவர வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்தத் தீர்ப்பில் மற்றொரு முக்கிய அம்சம். இந்த இனப் படுகொலை திட்டமிடப்பட்டு சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள தாகும். பொதுவாக இது போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குமே தவிர, சதித் திட்டத்தை உறுதி செய்வதில்லை. இப்போது தண்டிக்கப்பட்டுள்ள 31 குற்றவாளிகளும் முன்கூட்டியே கூடி சதித் திட்டம் தீட்டி இந்தப் படுகொலையை நடத்தியுள்ளதை நீதிமன்றம் திட்டவட்டமாக ஏற்றுக் கொண்டு, “தொகுதி மக்களைக் காப்பாற்ற வேண்டிய சட்டமன்ற உறுப்பினரான கொட்நாநி மக்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல் அவரே முன்னின்று இந்தப் படுகொலைக்கான சதித் திட்டங்களை தீட்டி, அவை நடக்கும்போது, அந்த இடத்திலிருந்து வன்முறைக் கும்பலை பஜ்ரங்தள் தலைவரோடு சேர்ந்து வழி நடத்தியுள்ளார்” என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து  ஆத்திரத்தில் தன்னிச்சையாகவே கலவரம் நடந்தது என்று குஜராத் முதல்வர் மீண்டும் மீண்டும் கூறி வந்ததை இந்தத் தீர்ப்பு அழுத்தமாக மறுத்துள்ளது.

இஸ்லாமிய பெண்கள் கொடூரமான பாலுறவு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு நெருப்பில் வீசப்பட்டுள்ளார்கள் என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தக் குற்றத்தை இழைத்தவர்களை குறிப்பிட்டு, அடையாளம் காண முடியவில்லை என்று கூறியுள்ள நீதிமன்றம், பாலுறவு வன்முறைக்கு பலியாகி அதிசயமாக உயிர் தப்பிய ஒரு பெண்ணுக்கு, குஜராத் அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. பிறந்து 20 நாட்களே ஆன இஸ்லாமிய குழந்தையைக்கூட தீயில் போட்டுக் கொன்றுள்ளது, கொடூரத்தின் உச்ச கட்டம் என்று, இந்த நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

குற்றத்தின் தன்மை கொடூரமாக இருந்தும் மரண தண்டனை விதிக்கப்படாமைக்கு, நீதிபதி சுட்டிக்காட்டியுள்ள காரணம், மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தூக்குத் தண்டனை வழங்கியிருந்தால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்திருக்கும். சமூகத்தில் குற்றங்கள் குறைய தூக்குத் தண்டனை தேவை என்றாலும், அண்மைக் காலமாக உலக அளவில்  தூக்குத் தண்டனைக்கு எதிராக உருவாகிவரும் உலகப் போக்குக்கு மாறாக தூக்குத் தண்டனை விதிக்க விரும்பவில்லை (“the court cannot overlook the global trend prevelent in the recent years”) – என்று நீதிபதி சுட்டிக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். தூக்குத்தண்டனை குறித்த தனிப்பட்ட கருத்து நீதிபதிக்கு இருந்தாலும் கூட தூக்குத் தண்டனைக்கு எதிரான சர்வதேசப் போக்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதி பதிவு செய்துள்ளார்.

மோடி நல்லாட்சி நடத்துகிறார் என்றும் அடுத்த பிரதமராக வரக்கூடிய தகுதி கொண்டவர் என்றும், பார்ப்பன இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு பரப்பி வரும் மாய்மாலங்களுக்கு சரியான பதிலடியை இத்தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

பெரியார் முழக்கம் 06092012 இதழ்

You may also like...