அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. அதற்கான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றன.
அய்.டி.ஆர்.எப். நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு மாநில அரசுகளிடம், தங்களுக்கு, வரிச் சலுகைக்கான சான்றிதழ் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. அதற்கு ‘படிவம் 1023’ என்று பெயர். அதில், இந்தியாவில் கீழ்க்கண்ட 9 முக்கிய நிறு வனங்கள், இந்தியாவில் தங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விகார் பாரதி (பீகார்)
சுவாமி விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம் (தமிழ்நாடு)
சேவா பாரதி (டெல்லி)
ஜனசேவா வித்யா கேந்திரா (கருநாடகம்)
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (ம.பி.)
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (குஜராத்)
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (நாகர் ஹவேலி)
கிரிவாரி வனவாசி சேவா டிரஸ்ட் (உ.பி.)
ஜி. தேஷ்பாண்டே வனவாசி வஸ்திகிரா (மகாராஷ்டிரா)
– மேற்குறிப்பிட்ட 9 நிறுவனங்களுமே சங் பரிவார் அமைப்புகள்தான். இதை ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இணையத்தளங்களிலே காண முடியும். உதாரணமாக விகாஸ் பாரதி, சங் நீரூற்றிலிருந்து கிளம்பிய நீரோட்டம் என்றும், விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் விசுவ இந்து பரிஷத்தின் தோழமை அமைப்பு என்றும், ஆர்.எஸ்.எஸ். இணைய தளங்களில் விவரிக்கப் பட்டுள்ளது.
இந்த அமைப்புகளின் கீழ் – 67 துணை அமைப்புகள் இந்தியாவில் செயல்படுவதாகவும், அய்.டி.ஆர்.எப்., அறிவித்திருக்கிறது. ஆக மொத்த முள்ள 75 நிறுவனங்களில், 60 நிறுவனங்கள் சங் பரிவார்களோடு தொடர்புள்ள நிறுவனங் களாகும்.
அந்த நிறுவனங்களில் பதிவாகியுள்ள அய்.டி.ஆர்.எப். நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நிகராக இந்து சேவக் சங் (எச்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்கா வில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்காவில் அய்.டி.ஆர்.எப். நிறுவனர்கள். இவர்கள் அமெரிக்காவின் ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களாகவும் செயல்படு கிறார்கள். அய்.டி.ஆர்.எப்.பின் பொதுச் செயலாளராக இருக்கம் ஷியாம் கோகல் காந்தி என்பவர் சான்பிரான்சிஸ்கோவில் – எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர். அய்.டி.ஆர்.எப்.பின் ஆலோசகராக இந்தியாவில் செயல்படுபவர் ஷியாம் பாரன்டே எனும் பார்ப்பனர். இவர்தான், வெளிநாடுகளில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கான அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ்.சின் ‘அப்சர்வர்’ பத்திரிகையில் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க வாழ் பார்ப்பனர்கள் 1980களிலிருந்து – ‘இந்துத்துவா’வைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். இந்தியாவிலிருந்து 1990களில் – அமெரிக்காவுக்கு குடியேறிய ஏராளமான பார்ப்பனர்கள், இதில் தீவிரம் காட்டினர். குறிப்பாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, வடக்கு-கிழக்கு பகுதிகளிலும், தெற்குப் பகுதி மாநிலங்களான புளோரிடா, டெக்சாஸ் மாநிலங்களிலும், இந்துத்துவா அமைப்புகள் வலிமையாக கால் பதித்தன. இந்த இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவில் சங் பரிவார்களுக்குத் துணை நிற்பதோடு அய்.டி.ஆர்.எப். வழியாக, பெருமளவு நன்கொடைகளைத் திரட்டித் தந்து வருகின்றன.
மத வேறுபாடு இல்லாமல் இந்தியர்களின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய இந்திய வளர்ச்சி (எய்டு) அமைப்பு, குழந்தைகள் மறுவாழ்வு (கிரஸ்), இந்திய வளர்ச்சிக் கழகம் (அய்.டி.எல்.) போன்ற பல பொதுவான தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டாலும், அய்.டி.ஆர்.எப்., இவைகளை அங்கீகரிப்பது இல்லை. சங் பரிவார் களுடன் தொடர்புடைய அமைப்புகளை மட்டுமே சேவை நிறுவனங்களாக அது அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய தீவிரவாதத்தைத் தடுக்கவும், இந்திய முஸ்லிம்கள், சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி களுடன் தொடர்பு கொண்டிப்பதாகவும், குறும் படங்களைத் தயாரித்து, திரையிட்டு நிதி திரட்டும் வேலைகளை அமெரிக்க ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ்.சும், அய்.டி.ஆர்.எப்.பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
நிதி ஒதுக்கீடு : எதற்கு?
‘வளர்ச்சி’, ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் இந்தியாவுக்கு அய்.டி.ஆர்.எப். அனுப்பிய தொகையில் பெரும் பகுதி, சங் பரிவார்களின் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் – மதப் பகைமையை வளர்ப்பதற்குமே பயன்பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
1994 முதல் 2000 வரை அய்.டி.ஆர்.எப். இந்தியாவுக்கு அனுப்பிய தொகையில் 75 சதவீதம் (3.2 மில்லியன் டாலர்), ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு களுக்கே அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு மைனாரிட்டி அமைப்புகளுக்கும் உதவிடவில்லை. அனுப்பிய தொகையில் 70 சதவீதம் – ஆதிவாசிகளை, இந்து மதத்துக்கு மாற்றவும், அதற்குத் தயார் செய்வதற்கான கல்வி, விடுதிகளை நடத்தவுமே செலவிடப்பட்டு இருக்கிறது. 8 சதவீதம் மருத்து வத்துக்கும், 15 சதவீதம் புனர்வாழ்வு திட்டங் களுக்கும், 4 சதவீதம் கிராம வளர்ச்சிக்கும் செல விடப்பட்டு இருக்கிறது. (ஆதாரம்: அய்.டி.ஆர்.எப். – ஆண்டறிக்கை – இணையதளத்திலிருந்து) ‘புனர் வாழ்வுப்பணி’ என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகைக்கூட – மத அடிப்படையிலேயே செலவிடப் பட்டிருக்கிறது. குஜராத் பூகம்பத்தின்போது – புனர் வாழ்வு நிதியிலிருந்து செலவிட்ட தொகையை, பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கினார்கள். இதேபோல் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்க தேச இந்துக்கள், ராணுவம் மற்றும் போராளிகள் தாக்குதலுக் குள்ளான காஷ்மீர் இந்துக்கள் என்று இந்துக்களுக்கு மட்டுமே, இந்நிறுவனம் உதவிகளைச் செய்துள்ளது. இவைகளில் பாதிக்கப்பட்டவர்கள் கிறித்தவர், முஸ்லிம்கள் இருந்தாலும்கூட ‘நிவாரண உதவிகள்’ மதத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன.
குஜராத் பூகம்பத்தின்போது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பகுதியைப் புறக்கணித்தன என்று குல்தீப் நய்யார் எழுதினார். (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், பிப்.21, 2001) இந்து அல்லாத தொண்டு நிறுவனங்கள், நிவாரணப் பணியில் ஈடுபட வந்தபோது, சங் பரிவார் அமைப்புகள் அவைகளைத் தடுத்து நிறுத்திவிட்டன. (கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், ஜன.31, 2001)
ஆதிவாசிகள் – மதமாற்றம்
இந்தியாவின் பழங்குடி மக்களை ஆதிவாசிகள் என்ற பெயரில் தான் அழைப்பது வழக்கம்; ஆனால், இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்று வரலாற்றைப் புரட்ட விரும்பும் ‘சங் பரிவாரங்கள்’ இவர்களை ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிகள் என்று அழைப்பதில்லை. மாறாக ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறார்கள். பழங்குடியினரான ஆதிவாசிகள், இயற்கையை வழிபடக் கூடியவர்கள். அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்து சாதி அமைப்பால் கடந்த நூற்றாண்டில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மீது மதங்கள் திணிக்கப்பட்டன. பலர் கிறிஸ்தவர்களானார்கள். அண்மைக்காலமாக, இந்த மக்களை ‘இந்துக்களாக’ மாற்றும் முயற்சிகளில் சங் பரிவார் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக பழங்குடியினருக்கான கல்வித் திட்டங்களையும், நல் வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதற்கான பெரும் நிதி அய்.டி.ஆர்.எப். போன்ற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது.
பழங்குடியினரை இந்து மதமாற்றம் செய்வதற்கே – அமெரிக்காவின் பணம் அய்.டி.ஆர்.எப். வழியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.
‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ என்ற அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதாக அய்.டி.ஆர்.எப். ஒப்புக் கொண்டுள்ளதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம்.
“கிறிஸ்தவர்களாக்கப்பட்ட – வனவாசிகளை இந்த மதத்துக்கு மாற்றுவதற்காகவே வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் 1950களில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த வழியில் பழங்குடியினரின் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதில், எங்கள் அமைப்பு வெற்றிகளைக் குவித்து வருகிறது” – என்று ஆர்.எஸ்.எஸ். வெளியீடே எழுதியிருக்கிறது. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றி, தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து, சமூக விரோத, தேச விரோதிகளிடமிருந்து, அவர்களைக் காப்பாற்றி யுள்ளதாக, ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்துக்கு’ – அய்.டி.ஆர்.எப். நிறுவனமே, தனது ஆவணங்களில் புகழாரம் சூட்டி மகிழ்கிறது.
மத பழங்குடியினரை மதம் மாற்றுவதோடு மட்டுமல்ல; அவர்களை ‘இந்துராஷ்டிரம்’ அமை வதற்கான போராளிகளாகப் பயிற்சி தரும் நட வடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள்; அதற்கும் அமெரிக்காவின் பணம் வருகிறது; அமெரிக்காவின் ‘அய்.டி.ஆர்.எப்.’பிடமிருந்து நிதி உதவி பெறும் ‘சேவா பாரதி’ – தனது அறிக்கை ஒன்றில் – இதை உறுதிப்படுத்துகிறது. பழங்குடி யினரில் சில ஆண்களையும், பெண்களையும் தேர்வுசெய்து அயோத்தியில் உள்ள ‘ஸ்ரீராமகதா பிராவச்சான்’ என்ற ராமாயணப் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பி சாமியார்களைக் கொண்டு 8 மாத பயிற்சி தந்து, பிறகு அவர்களைக் கிராமங்களுக்கு அனுப்பி பிரச்சாரகர் களாகப் பயன்படுத்துவதாக சேவா பாரதி கூறுகிறது.
இது மட்டுமல்ல, ஆதிவாசிகளை, இந்துக்களாக மதம் மாற்றும் நிகழ்ச்சி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்கும் பயன்படுகிறது என்று, சங் பரிவார் தலைவர்களே கூறுகிறார்கள். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் – “ஏகல் வித்யாலயா” என்ற பள்ளிகள், அமெரிக்க நிதி உதவியோடு நடத்தப்படுகின்றன. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றுவதில் – இந்தப் பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன. இத்தகைய பள்ளிகளைத் தொடங்கியதன் மூலமே, பீகாருக்குள் தாங்கள் வலிமை பெற முடிந்தது என்றும், பீகாரில் தாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கியது என்றும், குஜராத்திலும் அதே சோதனைகளைத் துவங்கி – காங்கிரஸ் கோட்டைகளைத் தகர்ப்போம் என்றும் ஜார்கண்ட் பகுதியைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் கவுஷிக் பட்டேல் கூறியிருக்கிறார். (ஆதாரம்: ‘தி டெலிகிராப்’ நாளேடு, ஜூலை 4, 2000)
– ஆக, அமெரிக்கப் பணம், மதமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்து வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
மதக் கலவரங்களை உருவாக்கவும்….
அமெரிக்காவிலிருந்து சங் பரிவார்களுக்கு வரும் பணம், இந்தியாவில் மதக் கலவரங்களை நடத்துவதற்கும் பயன்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சுருக்கம் கருதி, அமெரிக்க நிதி உதவியோடு செயல்படும் அமைப்புகள் தந்துள்ள ஒரு சில ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம். மேற்கு குஜராத்தில் வாகை எனுமிடத்தில் அமெரிக்க உதவியோடு ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ நடத்தும் பள்ளியில் சிவாஜியின் படத்துக்குக் கீழே, “சிவாஜி மட்டும் இல்லாவிட்டால் நாம் அனைவரும் ‘சுன்னத்’ செய்யப்பட்டிருப்போம். சிவாஜி தான், நம்மைக் கட்டாய மதமாற்றத்திலிருந்து காப்பாற்றினார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் முதல் தலைமுறையினரான அந்த மாணவர்கள் இப்போது ‘இந்து’க்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஒரு இளம் ஆர்.எஸ்.எஸ்.காரர் அந்தப் பள்ளியை நடத்துகிறார். கலவரத்துக்கான வெறியை இதன் மூலம் தூண்டிவிடுகிறார்கள் என்று, பள்ளியை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய வரலாற்று ஆய்வாளர் அஜய்சிங் எழுதியிருக்கிறார். (ஆசியா வீக், மார்ச் 26, 1999)
அமெரிக்க உதவி பெறும் வனவாசி கல்யாண் பரிஷத்தை நடத்தும் சுவாமி அசீமானந்த் என்பவர் – ஒரு ஆதிவாசிக்கூட கிறிஸ்தவராக இருக்கக் கூடாது என்று கூறி, அனைவரையும் இந்துக்களாக்கும் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் – செய்தியாளர் அருண் வர்கீஸ் அம்பலப்படுத்தினார். (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பிப்.11, 1999)
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் நிறுவனத்தினரால், கிறிஸ்தவ ஆதிவாசிகள் தாக்கப்படுவதையும், மன உளைச்ச லுக்கு உள்ளாக்கப்பட்டதையும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியதையும் ஒரு டாக்குமென்டரி படமே அம்பலப்படுத்தியது. (Fishers of Men, Docementary by Ranjankanth and Padmavathy Rao, 1997)
அமெரிக்க வாழ் இந்தியரின் உதவியோடு, இந்தியாவில் கலவரங்களும் வெறுப்புகளும் தூண்டிவிடப்பட்டதற்கு இவை சில உதாரணங்கள். அவர்களின் உதவியோடு நடத்தப்படும் நிறுவனமான வித்யாபாரதி நடத்தும் பள்ளிகளின் பாடத் திட்டங்களில் வரலாறுகள் திருத்தப்பட்டு, இந்து மதவாத உணர்வுகள் தூண்டி விடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
நிதி பெறும் நிறுவனங்கள்
அய்.டி.ஆர்.எப். எனும் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் நடத்தும் நிறுவனத்திடமிருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 184, மாநில வாரியாக நிதி பெறும் நிறுவனங்களின் பெயர்களையும் – நிதியையும், அதன் இணையத் தளங்களில் காண முடிகிறது. இதில் தமிழ்நாட்டில் நிதி உதவி பெறும் நிறுவனங்களையும் பெற்றுள்ள தொகையையும் மட்டும் கீழே தருகிறோம்:
பாரத் கல்சுரல் டிரஸ்ட் – திருச்சி (45,980 டாலர் – மதத்துக்காக)
கிராமகோயில் பூசாரிகள் பேரவை – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)
நவஜோதி சாரிட்டி டிரஸ்ட் – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)
சிவாலயா – சென்னை (6,650 டாலர் – மதம்-கல்வி)
ஸ்ரீராம தனுஷ்கோடி அபய ஆஞ்சநேயர் சேவா டிரஸ்ட் (9,500 டாலர் – மதத்துக்காக)
சாமி விவேகானந்தா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி (82,290 டாலர் – மதம்-கல்விக்காக)
ஆயுர்வேதிக் டிரஸ்ட் (கோவை) – (2,410 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)
யுனிக் பவுண்டேன் டிரஸ்ட் (திருவண்ணாமலை) – (9,035 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)
வெர்சல் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை) – (17,500 டாலர்)
விவேகானந்தா கேந்திரா ராக் மெமோரியல் (கன்னியாகுமரி) – (74,885 டாலர் – மதம் – சமூக கல்விக்காக)
ஆரோவில் – ஆரோவில் லேண்ட் பன்ட் – 301,420 டாலர்
அர்பிந்தோ ஆக்ஷன் – 4,750 டாலர்
ஆர்டார்தோ ஆஸ்ரம் – 2,500 டாலர்
அமெரிக்காவின் அய்.டி.ஆர்.எப். வழங்கியுள்ள மொத்த நிதியில்
82.4 சதவீதம் (2,684,915 டாலர்) சங் பரிவார் அமைப்புகளுக்கும்,
8.1.சதவீதம் (2,64,660 டாலர்) மத நடவடிக்கை களுக்கும்,
2.2 சதவீதம் (70,620 டாலர்) மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும்,
7.4 (2,49,785 டாலர்) சதவீதம் ‘தெரியாத நடவடிக்கைகளுக்காகவும்’ ஒதுக்கப்பட்டுள்ளது.
மதநடவடிக்கைகள், கல்விப் பணிகள், நிவாரணப் பணிகள் என்றபெயரில் வாங்கப்பட்ட நிதியும், சங் பரிவாரங்களின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Sabarang Communication/SACW/தளத்திலிருந்து)
(விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘சங் பரிவாரின் சதி வரலாறு’ நூலிலிருந்து)
பெரியார் முழக்கம் 08122011 இதழ்