பாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க’ மாட்சி

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் நடந்த பயிலரங்கம் மிகச் சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடந்தது.

மேட்டூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் காவலாண்டியூர் கழகத் தோழர்கள் மிகச் சிறப்பாக இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். காவலாண்டியூரிலிருந்து பாலமலை என்ற பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமத்துக்குச் செல்ல மலைப் பாதைகள் வழியே பயணிக்க வேண்டும். இயற்கை வளம் சூழ்ந்த அந்த அமைதியான கிராமத்தில் கிறிஸ்துவ நிறுவனம் பயிற்சிக்கான இடத்தை அளித்தது. கிராம எல்லையில் ஊர் மக்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி வரவேற்றனர். பயிற்சியரங்கம் வந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் பழங்குடி மக்களின் தலைவர்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி சிறப்பித்தனர்.

பயிலரங்கத்தின் முதல் நிகழ்வாக மருத்துவர் எழிலன் காணொலி காட்சிகளைப் பயன்படுத்தி “அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” என்ற தலைப்பில் 3 மணி நேரம் வகுப்பு எடுத்தார். பயிற்சியில் பங்கேற்ற பெண்களும் ஆண்களுமாக

120 இளைஞர்களை அந்த வகுப்பு மிகவும் ஈர்த்தது. மனநலம், மூடநம்பிக்கை தொடர்பாக பல்வேறு வினாக்களை எழுப்பி, விளக்கங்களைப் பெற்றனர்.

பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு பயிற்சி திறந்த வெளியில் இயற்கைச் சூழலில் நடந்தது.  தோழர் பூங்குழலி – ‘சமத்துவ சமுதாயத்தில் பாலின பாகுபாடுகள்’ என்ற தலைப்பில் ஆண்களிடம் பதிந்து கிடக்கும் ஆணாதிக்க படிமங்களை வெளிக் கொண்டு வந்து அனைவரையும் சிந்திக்க வைத்தார். பயிற்சியில் குழு விளையாட்டு முறைகளையும் அவர் பயன்படுத்தினார்.

ஜாதி மறுப்பு திருமணம்

அதைத் தொடர்ந்து குமாரபாளையம் சக்தி (தந்தை பெயர் முருகன்), ஓசூரைச் சேர்ந்த பிரீத்தி (தந்தை பெயர் ஆனந்த்) ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.

தொடர்ந்து, ‘பெரியார் காலத்தின் தேவை’ என்ற தலைப்பில் விடுதலை இராசேந்திரனும், ‘இட ஒதுக்கீடு -சந்திக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் வகுப்பெடுத்தனர். கழகக் குடும்பத்தைச் சார்ந்த இளங்கவிஞர் கனல், தனது பிறந்த நாளை கேக் வெட்டி கழகத்தினருடன் இணைந்து கொண்டாடினார். இரவு உணவுக்குப் பிறகு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

மே 18, காலை 9 மணியளவில் பயிற்சியாளர்கள் அறிமுகம் நடந்தது. தொடர்ந்து “பெரியாரியலை முன்னெடுப்பதில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறை” என்ற தலைப்பில் விடுதலை இராஜேந்திரனும்,  “வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்” குறித்து வழக்கறிஞர் திருமூர்த்தியும் விளக்கிப் பேசினார்.

பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு மருத்துவர் முரளி கிருஷ்ண பாரதி, நுழைவுத் தேர்வு குறித்தும், பல்வேறு நோய்கள் குறித்தும் அய்யங்களுக்கு விளக்கமளித்தார்.

தொடர்ந்து கொளத்தூர் மணி “பெரியார் இயக்கத்தின் மீதான விமர்சனங்கள்” எனும் தலைப்பில் பெரியார் இயக்கத்தின் மீது சங்பரிவாரங்கள், சில தமிழ் தேசிய குழுக்கள் முன் வைக்கும் விமர்சனங்களுக்கு விளக்கமளித்துப் பேசினார். இரண்டு நாள் நிகழ்வுகளையும் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஒருங்கிணைத்தார்.

பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டைகளும் குறிப்பு ஏடுகளும் வழங்கப்பட்டதோடு சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. இரண்டு நாள் பயிற்சியில் பெற்ற சிந்தனைகள், வரலாற்றுத் தகவல்கள், அனுபவங்களை பயிற்சியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் உணர்வுபூர்வமாக இருந்தன. முதல் முறையாக முகநூல் வழியாக தகவல் அறிந்து பயிற்சிக்கு வந்த இளைஞர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முன் வந்ததை அறிவித்தபோது பலத்த கரவொலி எழுந்தது. பயிலரங்கத்துக்கு இடம் தந்து உதவிய அருட்தந்தை யுவராஜ் அவர்களுக்கு கழகச் சார்பில் கழகத் தலைவர் ஆடை போர்த்தினார்.

 

18.05.2016 அன்று பாலமலை பயிற்சி முகாமையொட்டி இராமன்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்றது. திருமதி. விஜயா சரவணன் (பாலமலை ஊராட்சித் தலைவர்) தலைமையில் பூச்சியப்பன் (ஊர்ப்பட்டகாரர்), சதீசு (துணைத் தலைவர், பாலமலை ஊராட்சி), மாதப்பன் (ஊர்க் கவுண்டர்) ஆகியோரின் முன்னிலை யில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சுமார் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தார்கள்.

முகாமில் பங்குபெற்ற மருத்துவர்கள்: மருத்துவர் முரளி கிருஷ்ண பாரதி, மருத்துவர் வ.ப.வீரமணி, இவர்களுக்கு உதவியாக திருமதி சூர்யா, இரா.விஜயகுமார் தார்காடு, இலக்கம்பட்டி குமார் மற்றும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் செயல்பட்டனர். (முகாம் காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை நடைபெற்றது)

பெரியார் முழக்கம் 26052016 இதழ்

You may also like...