காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை – மன்னார்குடியில் கண்டன பொதுக்கூட்டம்
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை வாக்கு அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது”
மன்னார்குடியில் மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேச்சு!
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது.
சிறப்புரையாற்றிய மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேசியபோது, ‘இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த எந்தஒரு மத்திய அரசும், ஒரு மாநிலத்திற்கெதிராக வெளிப்படையாக செயல்பட்டதில்லை ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டும் தான் காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்திரவிட்டும், அத்தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு பாஜக ஆட்சியை பிடிக்க ஒரு மலிவான வாக்கு வங்கி அரசியலுக்காக மோடி அரசு தமிழகத்திற்கெதிராக செயல்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடளுமன்ற ஒப்புதல் தேவை என்றும், இருநீதிபதிகள் அமர்வு மத்திய அரசுக்கு உத்திரவு போட முடியாது எனவும் கூறி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் பெருத்த அவமானத்தை தேடி தந்துள்ளது.
உச்சநீதி மன்றத்திற்கு இணையான அமைப்பு நடுவர் மன்றம், அதனால் தான் அதன் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டப்பட்டது. 1966ல் அமைக்கப்பட்ட பக்ராநங்கல், பியாஸ் நதிப்பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. மத்திய அரசுஇப்போது கூறுவதுபோல் இன்றுவரை அதற்கு நாடாளுமன்ற ஒப்புதலை கேட்கவில்லை, ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மட்டும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என மத்திய அரசு கூறுவது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும், கர்நாடகத்தில் தனது வாக்குவங்கியை பலப்படுத்த பாஜக மலிவான அரசியலை செய்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுகிறது என கூறினார்.
முன்னதாக மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மதிமுக மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சிசுந்தரம், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் ஜாஸ்மின், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி ,தமிழக மக்கள் முன்னேற்ற கழக மண்டல செயலாளர் மன்னை ஜே.ஆர்.எஸ்., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ், தொகுதி துணை செயலாளர் ஆதவன்,முற்போக்கு மாணவர் கழகம் அமைப்பாளர் மண்ணை பவுத்தன் , கோட்டூர் ஒன்றிய செயலாளர் முருகையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.