தலையங்கம் கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

‘அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தடை போட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருக்கிறார் பினராயி விஜயன். ‘அரசு அலுவலகங்கள், பணி செய்ய வேண்டிய இடங்கள். அங்கே கொண்டாட்டத்திற்கு இடமில்லை’ என்று அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் அரசு அலுவலகங்கள் அமர்க்களப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவல் நிலையங்கள், பஜனை மடங்களாகவே மாறி நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறையே ஜெயலலிதா விடுதலைக்கு, கோயிலில் விசேட பூஜைகள் நடத்துவதற்கு உத்தரவிட்டது. சில மாவட்ட ஆட்சித் தலைவர்களே கோயில் சடங்குகளில் யாகங்களில் பங்கேற்ற கூத்துகளும் அரங்கேறின. காவல் நிலையங்களில் யாகங்களை நடத்துவதும், ஆடுகளை வெட்டி பலியிடுவதும், ‘வாஸ்து’ பரிகாரங்களை செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக மாற்றப்படுவதை எதிர்த்து நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோயில்கள், வழிபாட்டு தலங்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் கோபால கவுடா, அருண்மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு, கடந்த ஏப்.20ஆம் தேதி உத்தரவிட்டது. ‘இப்படி பொது இடங்களை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டுவதை கடவுளே விரும்ப மாட்டார்’ என்று கூறிய உச்சநீதிமன்றம் இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டது. ஆனால் எந்த மாநில தலைமைச் செயலாளரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தலைமைச் செயலாளர்களை உச்சநீதிமன்றத்துக்கு நேரில் வர உத்தரவிடுவோம் என்று நீதிபதிகள் எச்சரித்தும், நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு கடந்த 26ஆம் தேதி நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் விரக்தியுடன் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ‘இத்தகைய ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றுவதற்கு இயக்கங்களை நடத்துங்கள்’ என்று மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், விசாரணையை 2017 பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்துவிட்டது.

‘கிருஷ்ண ஜெயந்தி’யை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நடக்கும் ‘உறியடி திருவிழா’வுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.

20 அடி உயரத்துக்கு மேல் மனிதர்களை படிக்கட்டுகளாக நிற்க வைத்து ‘உறியடித் திருவிழா’ நடத்துவதால் பலருக்கு முதுகெலும்பு முறிவும், உடல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ‘உறியடி திருவிழா’வின்போது மனித படிக்கட்டுகளில் நடந்த விபத்தில் 1500 பேர் எலும்பு முறிவுக்கு உள்ளானார்கள். எனவே உச்சநீதிமன்றம், “20 அடி உயரத்துக்கு மேல் ‘மனித படிக்கட்டு’களை அமைக்கக்கூடாது என்றும், 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பங்கேற்கத் தடைவிதித்தும்” உத்தரவிட்டது. ‘மனிதப் படிக்கட்டு’ உயரத்தை உயர்த்த வேண்டும் என்று சில இந்துமத அமைப்புகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இது என்ன ஒலிம்பிக்கில் இடம் பெறக்கூடிய விளையாட்டா?” என்று கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் உச்சநீதிமன்ற தடையை புறந்தள்ளிவிட்டு நாங்கள் ‘சட்டத்தை மீறுகிறோம்’ என்ற அறிவிப்பு பனியன்களை அணிந்து கொண்டு 20 அடி உயரத்துக்கு மேலாக மகாராஷ்டிராவில் உறியடி திருவிழாவை நடத்தி மதவெறியர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சவால் விட்டுள்ளார்கள். மாநில பா.ஜ.க. ஆட்சி இந்த சட்டமீறல்களை தடுக்க முன்வரவில்லை.

அரியானா சட்டமன்றத்தில் மற்றொரு கேவலம் நடந்திருக்கிறது. தருண் சாகர் என்ற சமண சாமியார், முழு நிர்வாணத்துடன் மாநில சட்டசபையில் உரையாற்ற, அம்மாநில அரசு விடுத்த அழைப்பை ஏற்று சாமியார் உரையாற்றியிருக்கிறார். இந்த நிர்வாண சாமியார் சட்டசபையில் பேசுவதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்திருப்பதுதான் இன்னும் கொடுமை. பொது இடங்களில் ஆபாசத்தை உருவாக்கும் சம்பவங்கள் குற்றத்திற்குரியது என்கிறது சட்டம். ஆனால், மதம் என்று வந்துவிட்டால் சட்டம் செயலிழந்து விடுகிறது. இதற்கு ‘ஆம் ஆத்மி’ கட்சியைச் சார்ந்த கலைஞரும் இசை அமைப்பாளருமான விஷால் தத்லானி என்பவர், தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். ‘அரசு நிர்வாகத்தில் இப்படி நிர்வாண சாமியார்களை பேச வைத்து மதத்தைப் புகுத்தக் கூடாது’ என்று அவர் கூறியதற்காக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரைக் கண்டித்துள்ளார். சொந்த கட்சியிடமிருந்தே எதிர்ப்பு வந்ததால் விஷால் தத்பாணி கருத்து வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் ‘அரசியலில் மதத்தைப் புகுத்தக் கூடாது’ என்ற தமது கருத்தில் தாம் உறுதியாக நிற்பதாக அறிவித்துள்ளார். இப்படி சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சவால் விட்டுக் கொண்டு மதவாத சக்திகள் செயல்படும் நிலை மிகவும் ஆபத்தானது. இது மதச்சார்பற்ற நாடு தானா? என்ற கேள்வியையும் தாண்டி நாட்டையே தலைகுனிய வைக்கும் அவமானமாகும். இந்த சூழலில் கேரள முதல்வர் அரசு அலுவலகங்களில் ஓணம் உள்ளிட்ட மத விழாக்களை நடத்தக் கூடாது என்று தடை போட்டிருப்பது உண்மையிலே பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். மதச் சார்பற்ற சக்திகள் மதவெறி சக்திகளின் சட்டமீறல்களை – சவால்களை சந்திக்கத் தயாராக வேண்டும். மதத்தை எதிர்க்கக் கூடாது என்று கண்டும் காணாமல் ஒதுங்கி நிற்பார்களேயானால் அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதை கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பெரியார் முழக்கம் 01092016 இதழ்

You may also like...